ரிமினியில் கர்தினால் பிட்சபாலா வழங்கிய நேர்முகம் ரிமினியில் கர்தினால் பிட்சபாலா வழங்கிய நேர்முகம் 

காஸாவில் போர் நிறுத்தம் இடம்பெற்று, குணப்படுத்தல் பணி தொடர.....

கர்தினால் பிட்சபாலா : அமைதி என்னும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மிக முக்கியமானவைகளுக்கான தேடுதல் என்ற தலைப்பில் இத்தாலியின் ரிமினி நகரில் இச்செவ்வாய்க்கிழமையன்று துவங்கிய கருத்தரங்கிற்குமுன் வத்திக்கான் செய்திகளுக்கு நேர்முகம் ஒன்றை வழங்கிய கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியில் துளிர்விடும் சிறு நம்பிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

யெருசலேமின் இலத்தீன் ரீதி வழிபட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பிட்சபாலா அவர்கள் ரிமினியில் ‘அமைதிக்கான ஓர் இருப்பு’ என்ற கூட்டத்தைத் துவக்கிவைக்குமுன் வழங்கிய நேர்முகத்தில், புனித பூமியில் இடம்பெறும் சிறு நம்பிக்கைகள், காஸா மற்றும் வெஸ்ட் பேங்க் கத்தோலிக்க சமுதாயத்திற்கான உதவிகள், ஒப்புரவு கலாச்சாரம் ஆகியவை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஹாமாஸ் புரட்சிக் குழுவுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர முதலில் போர் நிறுத்தம் இடம்பெற்று, ஒருவருக்கொருவர் நம்பிக்கை உருவாக்கப்பட்டு, குணப்படுத்தல் பணி தொடரவேண்டும் என்ற ஆவலையும் வெளியிட்ட கர்தினால்,  பாதை ஒன்று இருக்கின்றபோதிலும் அதில் நடைபோடத் தேவையான மன வலிமை அரசியல் மட்டத்திலும் மத மட்டத்திலும் தேவைப்படுகின்றது என எடுத்துரைத்தார்.

இன்றைய காலக்கட்டத்தில் நம்பிக்கை என்பது அதிகமாக தேவைப்படுகின்றபோதிலும், மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை என்பதை எடுத்துரைத்த கர்தினால், இருப்பினும் அமைதிக்கான பணிகள் தொடர தலத்திருஅவை ஊக்குவித்துக்கொண்டே வருகிறது என மேலும் கூறினார்.

சிறு நம்பிக்கைகளால் தூண்டப்பட்ட தலத்திருஅவை, காசா மற்றும் வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள ஏறக்குறைய 600 கிறிஸ்தவர்களுக்கு உணவு உதவிகளை ஆற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைதி என்னும் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால் பிட்சபாலா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 August 2024, 15:14