காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘திருத்தந்தை பிரான்சிஸ் சிங்கப்பூர் 2024’ என்ற சிறப்பு நினைவுப் பொருள்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘திருத்தந்தை பிரான்சிஸ் சிங்கப்பூர் 2024’ என்ற சிறப்பு நினைவுப் பொருள்கள்  

திருத்தந்தையின் வருகைக்குத் தயாராகிவரும் சிங்கப்பூர்!

வரும் செப்டெம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிங்கப்பூருக்குத் திருத்தூது பயணம் மேற்கொள்கின்றார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க அறக்கட்டளை அமைப்பானது அதிகாரப்பூர்வமாக ‘திருத்தந்தை பிரான்சிஸ் சிங்கப்பூர் 2024’ என்ற சிறப்பு நினைவுப் பொருள்களை வெளியிட்டுள்ளதாக அம்மறைமாவட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தளமான CatholicNews SG தெரிவித்துள்ளது.

கொசுவச் சட்டைகள் (T-Shirts), குடைகள், தொப்பிகள், தண்ணீர் பாட்டில்கள், மின் விசிறிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பதிப்பு இறைவேண்டல் கருவிகள் ஆகியவை இந்த வரம்பில் அடங்கும் என்றும், இந்தப் பொருள்கள் நிகழ்நிலை (online) மற்றும் மூன்று pop-up கடைகளில் கிடைக்கும் என்று அச்செய்தித் தளம் உரைக்கிறது.

பங்குத்தளங்கள் மற்றும் கத்தோலிக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 1,600 பாடகர்களை உள்ளடக்கிய திருத்தந்தையின் திருப்பலிக்கான பாடல்கள் ஜூலை 5, வெள்ளியன்றே ஒத்திகையைத் தொடங்கிவிட்டதாகவும், வெவ்வேறு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கோவில்களில் இந்தப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறுகிறது அச்செய்தித்தளம்.

வரும் செப்டம்பர் மாதத்தில் நிகழவிருக்கும் ஓர் இறுதி ஒத்திகையானது, பாடகர் குழுவையும் பள்ளிகளின் இசைக்குழுவையும் ஒன்றிணைத்து, 1,800 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை உருவாக்கும் எனவும் மேலும் தெரிவிக்கிறது அச்செய்தித்தளம்.

கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி, அரங்க துணைக்குழு (The Stadium Subcommittee), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிறைவேற்றவிருக்கும் தேசிய அரங்கத்தை தயார் செய்வதற்காகக் கூடியது என்றும், அக்கூட்டத்தில் பாதுகாவலர்கள், பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் மருத்துவக் குழுக்களை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் அதன் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு துணைக்குழு, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் இருந்தே திருத்தந்தையின் வருகை பற்றிய தகவல்களை வழங்கி வருகிறது.  இந்தக் குழுவில் உள்ள இலக்கமுறை (digital) மற்றும் அச்சு ஊடகங்களில் பணியாற்றும் எழுத்தாளர்கள், காணொளியாளர்கள் (videographers) மற்றும் சமூக ஊடக ஆசிரியர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தகவல்களைத் தெரிவிக்கவும், தயாரிப்புகளை ஆவணப்படுத்தவும் பணியாற்றி வருகின்றனர்.

திருத்தந்தையின் சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்திற்கான இலச்சினை
திருத்தந்தையின் சிங்கப்பூர் திருத்தூதுப் பயணத்திற்கான இலச்சினை

திருத்தந்தையின் சிங்கப்பூர் பயண நிகழ்வு

செப்டம்பர் 11ஆம் தேதி காலையில் திலியில் இளையோரை சந்தித்தபின் சிங்கப்பூர் கிளம்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் பிற்பகல் 2.15 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையம் வந்தடைந்து அன்று மாலையே அந்நாட்டின் இயேசு சபையினரை சந்தித்து உரையாடுவார்.

12ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் வரவேற்பை ஏற்பது, அரசுத்தலைவரை சந்திப்பது, பிரதமரைச் சந்திப்பது, அரசு உயரதிகாரிகளை சந்திப்பது போன்றவைகளுக்குப்பின், SportsHub தேசிய அரங்கத்தில் பொதுமக்களுக்கான திருப்பலியும் நிறைவேற்றுவார்.   

செப்டம்பர் 13ஆம் தேதி காலையில் முதியோர் மற்றும் நோயுற்றோரை சந்திக்கும் திருத்தந்தை, இளையோருடன் பல்மத கூட்டத்தில் கலந்துகொண்டபின் உள்ளூர் நேரம் காலை 11.50 மணிக்கு அந்நாட்டிலிருந்து கிளம்பி மாலை உள்ளூர் நேரம் 6.25 மணிக்கு உரோம்  Fiumicino பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2024, 10:51