விவிலியத் தேடல்: திருப்பாடல் 56-2, நம்பிக்கையும் முயற்சியுமே வெற்றிதரும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளையே நம்பியிருப்போம்!’’ என்ற தலைப்பில் 56-வது திருப்பாடலில் முதல் ஏழு இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 8 முதல் 13 வரை உள்ள இறைவார்த்தைகளைத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். "என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா? நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன். கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்; ஆண்டவரின் வாக்கை நான் புகழ்கின்றேன். கடவுளையே நம்பியிருக்கின்றேன்; எதற்கும் அஞ்சேன்; மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்? கடவுளே, நான் உமக்குச் செய்த பொருத்தனைகளை மறக்கவில்லை; உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன். ஏனெனில், சாவினின்று என் உயிரை நீர் மீட்டருளினீர்; வாழ்வோரின் ஒளியில், கடவுளின் முன்னிலையில் நான் நடக்கும் பொருட்டு என் அடிகள் சறுக்காதபடி காத்தீர் அன்றோ!" (வச. 8-13)..
தாவீது கூறும் இந்த இறைவார்த்தைகளில் சில முக்கியமான காரியங்களைக் குறித்து நோக்குவோம். முதலில், "என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்; உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்; இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?" என்கின்றார் தாவீது அரசர். இந்த ஒரு இறைவசனம் மூன்று அர்த்தங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. முதலாலாவதாக, "என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்" என்று கூறும் தாவீதின் வார்த்தைகளில், அவர் தனது எண்ணிலடங்கா துயரங்களை அனுபவிப்பதைப் பார்க்க முடிகிறது. அவர் துயரங்களை தன்னாலோ அல்லது தனது உடனிருக்கும் நண்பர்களாலோ கூட அறிய முடியாத சூழலில் கடவுளுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற அர்த்தத்தில் இவ்வாறு தாவீது கூறியிருக்கலாம். தாவீதின் பெரும்பாலான திருப்பாடல்களில், அதிலும் குறிப்பாக, 51 முதல் 72 வரையுள்ள திருப்பாடல்களில் அவரதுத் துயரங்கள் அதிகம் வெளிப்படுத்துவதைப் பார்க்கமுடிகிறது. ஆக, இஸ்ரயேல் மக்களின் அரசராக ஆட்சி அரியணையில் அமர்வதற்கு முன்பும் சரி, அமர்ந்த பின்பும் சரி, தாவீதின் துயரங்கள் ஒரு தொடர்கதையாகத்தான் இருந்திருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கைப் பெருகிக்கொண்டே போயிருந்திருக்கின்றது. அதனால்தான், "ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும். உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும். பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று" (காண்க திபா 6:4,6-7) என்று திருப்பாடல் 6-இல் எடுத்துரைக்கின்றார். மேலும் இதனை மனதில் கொண்டுதான், "என் துன்பங்களின் எண்ணிக்கையை நீர் அறிவீர்" என்று உரைக்கின்றார் தாவீது. ஆனாலும் இவை அத்தனையையும் அவரால் வெல்ல முடிந்ததற்குக் காரணம் அவர் கடவுள்மீது கொண்டிருந்த அசைக்க முடியாத இறைப்பற்றுதான்.
இரண்டாவதாக, "உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்" என்று கூறுகின்றார் தாவீது. இதனை நாம் அப்படியே பொருள்கொள்ள முடியாது. ஆனால், தான் தினமும் எந்தளவுக்குக் கண்ணீர் வடித்து வருகின்றேன் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகத்தான் இவ்வாறு தாவீது உருவகமாகக் கூறுகின்றார் என்பதை நாம் புரிந்துகொள்வோம். கண்ணீர் வடிக்கின்றேன், அழுகிறேன், கதறுகின்றேன் போன்ற வார்த்தைகளைத் தாவீது அரசர் தனது திருப்பாடல்களில் பல இடங்களில் பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, "என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது" (திபா 18:6) என்றும், "ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன். என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்" (திபா 142:1-2) என்றும் கூறும் திருப்பாடல்களைக் கொள்ளலாம். இங்கே "அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் வேண்டுகிறேன்" என்பதெல்லாம் கண்ணீரில் வெளிப்படுவதுதான். மேலும் தாவீது கூறும் மேற்கண்ட வார்த்தைகளில் ‘தோற்பை’ என்ற ஒரு வார்தையைப் பயன்படுத்துகிறார். தோற்பை என்பது தோலால் செய்யப்பட்ட பை என்று பொருள்படுகிறது. அப்படியென்றால் இந்தப் பை நீண்ட நாள் தாங்கக்கூடியது. இதில் எந்தவொரு பொருளை வைத்தாலும், அது நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்கும். பொதுவாக, இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் தோற்பைகளில் திராட்சை மதுவை ஊற்றிப் பாதுகாத்தனர் என்பதைப் பார்க்கின்றோம், இதனடிப்படையில்தான், "எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது” (காண்க மாற் 2:21-22) என்று இயேசு கூறுவதைப் பார்க்கின்றோம். ஆக, இப்படிப்பட்ட தோற்பையில் கடவுள் தனது கண்ணீரை சேமித்து வைத்துள்ளதாக ஓர் உருவகமாகக் கூறுகிறார் தாவீது. அப்படியென்றால், தனது எதிரிகள் தனக்கு அளித்த துயரங்களால் வடித்த கண்ணீர் நீண்ட நாள்களாக கடவுளின் தோற்பையில் உள்ளது என்ற அர்த்தத்தில் இவ்வாறு தாவீது கூறுவதாக நாம் பொருள்கொள்ளலாம்.
மூன்றாவதாக, "இவையெல்லாம் உம் குறிப்பேட்டில் உள்ளன அல்லவா?" என்று கடவுளிடம் கூறுகிறார் தாவீது. கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகம் வைத்திருக்கிறார். அதில் நமது பிறப்பு முதல் இறப்பு வரை நாம் செய்யும் அனைத்து செயல்களையும் அவர் அதில் பதிவிடுகிறார் என்றும், நாம் இறந்து அவரை சந்திக்கும்போது, அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்துப் பார்த்து நாம் செய்துள்ள செயல்களுக்கேற்ப நமக்கான வாழ்வு எது என்பதைத் தேர்வு செய்வார் என்றும் நாம் கூறுவதுண்டு. அதைத்தான், தாவீது இங்கேயும் கூறுகின்றார். அதனால்தான், "உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன; நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன" (காண்க திபா 139:16) என்றும் உரைக்கின்றார் தாவீது. ஆக, இந்த வார்த்தைகள் வழியாக, கடவுள் தனக்குரிய புத்தகத்தை கையிலெடுத்து விரித்துப்பார்த்தாலே போதும், தனது நிலை குறித்து கடவுள் அறிய வருவார் என்ற பொருளில்தான் இவ்வாறு கூறுகின்றார்.
அடுத்து, "மானிடர் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும்?" என்று கூறும் தாவீதின் இந்த ஒற்றைவரி வார்தையைக் குறித்துச் சற்று ஆழமாகச் சிந்திப்போம். தாவீது அரசரிடம் வெளிப்படும் இந்த வார்த்தை அவரது அசாத்திய துணிச்சலின் வெளிப்பாடு. கடவுளின் மீது கொண்டுள்ள தணியாத பற்றார்வத்தாலும், தளராத நம்பிக்கையாலும், அவரை மட்டுமே தனது அடைக்கலப் பாறையாக கொண்டுள்ளதாலும் ஏற்படும் ஓர் அச்சமற்ற போக்கு என்றுதான் சொல்ல வேண்டும், அவரின் இந்தவொரு துணிச்சலான செயல் அவரது திருப்பாடல்களின் பல்வேறு இடங்களில் வெளிப்படுவதையும் நம்மால் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, "ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன்" (திபா 27:1-3) என்று திருப்பாடல் 27-இல் கூறுவதைப் பார்க்கின்றோம். தொடர்ந்து, கடவுள் என்பக்கம் இருக்கிறார், கடவுளையே நான் நம்பி இருப்பதால், எந்த மனிதரும் எனக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்றும், தனது பொருத்தனைகளை ஏற்றுக்கொண்டு கடவுள் தனது உயிரைக் காப்பாற்றுவார் என்றும் கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது அரசர்.
பானை செய்து விற்கும் குயவன் அவன். கடவுள் மீது அபார நம்பிக்கை கொண்டவன். அதிகாலையில் எழுந்து தான் செய்த பானைகளை ஒரு வண்டியில் அடுக்கிச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்பான். அவனுடைய அன்றாடத் தேவைகளை அந்தப் பணத்தைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்வது அவனுடைய வழக்கமாக இருந்தது. அன்றைக்கும் எப்போதும் போல பானைகளை வண்டியில் எடுத்துக் கொண்டு சந்தைக்குக் கிளம்பினான். ஆனால் வண்டி வழியில் இருந்த சேறு நிறைந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அவன் கவலைப்படாமல் ஓரமாகப் போய் அமர்ந்து கொண்டான். எக்காரணம் கொண்டும் கடவுள் தன்னைக் கை விட மாட்டார், வண்டியை வெளியே எடுக்க உதவுவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆகவே, வழியில் செல்வோர் எல்லாம் அவனை என்னவென்று விசாரித்தபோது, நான் பார்த்துக் கொள்கிறேன், கவலை வேண்டாம் என்று கூறி, எல்லோரையும் அனுப்பி விட்டான். நேரம் சென்றது. மாலை வேளை நெருங்கியவுடன் இருட்டத் தொடங்கியது. அப்போதுதான் முதல் முறையாக குயவனுக்குப் பயம் தோன்றியது. பானைகளை விற்காவிட்டால் இன்றையப் பொழுதை எப்படிக் கழிப்பது என்று எண்ணி அவன் அழத் தொடங்கினான். அழுகை சிறிது நேரத்தில் கோபமாய் மாறக் கடவுளை திட்டத் தொடங்கினான். “உன்னை நம்பிய என்னை இப்படி மோசம் செய்து விட்டாயே...” என்றெல்லாம் புலம்பத் தொடங்கினான். சட்டென்று அவன் முன்னே கடவுள் தோன்றினார். பளாரென்று ஒரு அறைவிட்டார் அவனுக்கு. அந்தக் குயவனுக்கு பொறி கலங்கிப் போனது. "காலை முதல் கடவுள் காப்பாற்றுவார் எனச் சொல்லிக் கொண்டு சும்மாவே இருந்தாயே? அந்நேரத்தில் பள்ளத்தில் இறங்கி வண்டிச் சக்கரத்தைக் கொஞ்சமாவது நகர்த்த முயற்சி செய்து இருந்தால் இந்நேரம் நான் உனக்கு உதவி இருப்பேன்... முதலில் உன்னை நீ நம்பி முயற்சி செய்.. வாழ்வில் தன்னம்பிக்கை தான் முக்கியம்..." என்றார் கடவுள். குயவன் புரிந்து கொண்டவனாகச் சந்தைக்குக் கிளம்பினான்.
கடவுள் நம்பிக்கை என்பது முயற்சியையும் உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. கடவுள் எல்லாவற்றை பார்த்துக்கொள்வார் என்று வெறுமனே நாம் வேடிக்கைப் பார்க்கத்தொடங்கினோம் என்றால் நாம் எதிரிகளின் கரங்களில் சிக்குண்டு சின்னாபின்னமாகிவிடுவோம். தாவீது கடவுள்மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தாலும் தன் பங்கிற்கு முயற்சியும் செய்ததால்தான் வெற்றியும் பெற்றார். எடுத்துக்காட்டாக, தனது எதிரிகள் எப்பக்கம் வருகின்றனர், எந்த வழியில் தன்னைப் பின்தொடர்கின்றனர், அவர்களின் கொடியதிட்டங்கள் எவை என்பவற்றையெல்லாம் குறித்து மிகவும் விழிப்பாக இருந்தார். இப்படி இருந்தும் கூட அவர் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்தார். ஆனால், அவரது முயற்சியையும், இறைநம்பிக்கையையும் கண்ட கடவுள் அவருக்கு எல்லாவிதத்திலும் அருள்செய்து அவரைக் காப்பாற்றினார். ஆகவே, கடவுளின் பெருந்துணையோடும் நமது முயற்சியோடும் நமது எதிரிகளின் கொடிய திட்டங்களை முறியடித்து முன்னேறுவோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்