இறைவேண்டல் செய்யும் நபர் இறைவேண்டல் செய்யும் நபர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 57-1, அருளும் இரக்கமும் கொண்ட இறைவன்!

இரக்கம் சுரக்கும் இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் அவ்வாறே இரக்கம் உடையவர்களாகவும் அதனை நம் செயல்களால் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்போம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 57-1, அருளும் இரக்கமும் கொண்ட இறைவன்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘நம்பிக்கையும் முயற்சியுமே வெற்றிதரும்!’’ என்ற தலைப்பில் 56-வது திருப்பாடலில் 8 முதல் 13 வரை உள்ள இறைவார்த்தைகளைத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இவ்வாரம் 57-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'உதவிக்காக வேண்டல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 11 இறைவசனங்களைக் கொண்டுள்ள சிறியதொரு திருப்பாடல்தான். 'சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்' என்று இத்திருப்பாடல் துணைத் தலைப்பிடப்பட்டுள்ளதால், எந்நோக்கத்திற்காக இத்திருப்பாடல் எழுதப்பட்டது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. அதாவது, பெலிஸ்திய வீரன் கோலியாத்தை கொன்றொழித்தபிறகு அவருக்குக் கிடைக்கும் பெயரும் புகழும் மன்னர் சவுலை அவர்மீது காழ்ப்புணர்வு கொள்ளச் செய்கிறது. இரண்டு முறை தாவீதை தன் இல்லத்திலேயே சவுல் கொல்ல முயன்றபோது, அவரிடமிருந்து தப்பிச் சென்றுவிடுகிறார். அவ்வாறு தப்பிச்செல்லும் தாவித்திடம் சவுல் சிக்கியும் கூட பெருந்தன்மையுடன் அவரை கொல்லாது விட்டுவிடுகிறார் அவர். குறிப்பாக, இரண்டாவது முறையாக தாவீதைத் தேடிச் செல்லும் சவுல் அவரிடம் சிக்கி உயிர்பிழைக்கிறார். அந்தப் பின்னணியில்தான் இந்தத் திருப்பாடல் எழுதப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த திருப்பாடலும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் (1-6) இறைவேண்டல் மற்றும் புகார்களுடன் தொடங்கும் தாவீது, இரண்டாவது பகுதியில் (7-11) மகிழ்வுடனும் இறைபுகழ்ச்சியுடனும் இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார்.

இப்போது இத்திருப்பாடலின் முதல் இறைவார்த்தையை மட்டும் நமது தியானச் சிந்தனைகளுக்கு எடுத்துக்கொள்வோம். முதலில் அவ்வார்த்தைகளை இறை அமைதியில் வாசிப்போம். "கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்” (வச.1). ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல் நம் இறைவனிடத்தில் அன்பும் இரக்கமும் மேலோங்கி இருக்கின்றது. கடவுள் எல்லார்மேலும் இரக்கம் காட்டக்கூடியவர். அதிலும் குறிப்பாக, தன்னை நம்பி தன்னிடம் சரணடைவோர் யாவரையும் அவர் ஒருபோதும் கைநெகிழ்வதே இல்லை. இதனைத் திருவிவிலியத்திலும், நம்மைச் சுற்றியுள்ள பலரின் வாழ்விலும் காண்கின்றோம். இறைவனின் இந்த இரக்கத்தை தாவீது தனது சிறுவயதுமுதல் அனுபவித்து வருபவர். அவரது வாழ்வின் ஒவ்வொரு உயர்விற்கும் இறைஇரக்கமே காரணம் என்பதை நாம் ஒருபோதும் மறுத்திட முடியாது. மேலே தாவீது கூறும் "கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்" என்ற இறைவார்த்தைகளில்,   இரண்டுமுறை ‘இரக்கம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இதுமட்டுமன்றி, தனது திருப்பாடல்களில் ஏறக்குறைய 70 விழுக்காடு இரக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார் தாவீது. "ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்" (திபா 145: 8-9) என்ற இறைவார்த்தையை இதற்கொரு சான்றாகக் கொள்ளலாம். இரக்கம் என்பது ஓர் உன்னதமான உணர்வு. அது அன்பின் உயரிய நிலை, மனித நேயத்தின் வெளிப்பாடு, மனதில் ஏற்படும் பேரார்வம், இதயத்தின் மேன்மை, இளகிய மனதின் அடையாளம், அறநெறியின் அடிப்படை, பண்பின் மேன்மை, புண்ணியத்தின் மறுபெயர் என்று நாம் அடுக்கிக்கொண்டே கொண்டே போகலாம். இரக்கம்கொண்ட பல நல்லோர்களால்தான் இவ்வுலம் இன்னும் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. இரக்கம் என்ற ஒன்று இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்திருக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இரக்கம் என்ற குணம் சிறப்பு மிக்கதாகவும், மேன்மை பொருந்தியதாகவும் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகக் கூறவேண்டுமெனில், இரக்க உணர்வு என்பது இறைவனின் உணர்வு. மனிதர்களிடத்தில் இரக்க உணர்வு மிகுதியாகும்போது உள்ளத்திலும், இல்லத்திலும் அவர் சார்ந்துள்ள சமுதாயத்திலும், ஒட்டுமொத்த இவ்வுலகிலும் துன்பங்களும் வேதனைகளும் குறைந்து மகிழ்ச்சியும் அமைதியும் பன்மடங்காகப் பெருகுகிறது. இரக்கம் சுரக்கும் இடங்களில் போர்களும், மோதல்களும், கலவரங்களும் நிகழ்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆக, இரக்கம் என்ற சொல் தன்னிலேயே மகத்துவம் கொண்டதாக அமைந்துள்ளதைப் பார்க்கின்றோம். அதனால்தால்தான், "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” (லூக் 6:36) என்றும், "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்" (மத் 5:7) என்றும் நமதாண்டவர் இயேசு கூறுவதைப் பார்க்கின்றோம். கூறியது மட்டுமன்றி, அதனைத் தனது பணிவாழ்விலும் வாழ்ந்து காட்டுகிறார் அவர்.

அடுத்து, "இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்" என்று கூறுகின்றார் தாவீது. கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பதைப் பார்த்திருக்கின்றோம். குறிப்பாக, தனது இளம்குஞ்சுகளுடன் இரைதேடச் செல்லும் தாய்க்கோழி வழியில் பருந்து வட்டமிடுவதைப் பார்த்துவிட்டால் போதும். உடனே தாய்க்கோழி ஒரு சிறப்பு சப்தமெழுப்பி தனது இறக்கைகளை விரித்து அதன் குஞ்சுகளை உள்ளே அழைத்துக்கொள்ளும். அவைகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவந்து தாயின் இறக்கைகளுக்குள் தஞ்சமடந்துவிடும். இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், தனது எதிரியான பருந்து அவ்விடத்திலிருந்து முழுதுமாக அகன்றுவிட்டது என்று அறிந்த பிறகுதான் தாய்க்கோழி அதன் குஞ்சுகளை அதன் இறக்கைகளிலிருந்து விடுவிக்கும். இந்தவொரு சிறப்பான அனுபவத்தை தாவீது அரசர் தனது வாழ்வில் பலமுறை கண்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, அவர் வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது இதற்கொத்த சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். இந்த அனுபவங்களை எல்லாம் மனதில் கொண்டவராகத்தான் “இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்" என்று மிகவும் அழகாகக் கூறுகின்றார். “உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்” (திபா 17:8) என்றும், “அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்” (திபா 91:4) என்று உரைப்பதையும் பார்க்கின்றோம்.

அருணாசல பிரதேசத்தின் ஆளுநர் மிஸ்ரா அண்மையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தவாங் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்த போது, முதல்வர் பீமா காண்டுவிடம் அப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மிகவும் பதற்றமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தார். கர்ப்பிணி பெண் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார் என்றும், தவாங்கிலிருந்து அடுத்த மூன்று நாள்களுக்கு கவுகாத்திக்கு ஹெலிகாப்டர் சேவை இல்லை. இதனால் அப்பெண்ணுக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், அந்தச் சட்டமன்ற உறுப்பினர் கூறிதை அறிந்தார் ஆளுநர் மிஸ்ரா. உடனே சற்றும் தாமதிக்காமல் அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் தனது ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு, தலைநகரான இட்டா நகருக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் அசாமின் தேஜ்பூரில் எரிபொருள் நிரப்புவதற்காகத் தரையிறங்கிய ஹெலிகாப்டர் பழுதானதால் அங்கிருந்து புறப்படத் தாமதமானது. இதனால் வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்தக் கர்பிணிப் பெண்ணுக்கு என்ன நிகழுமோ என்ற பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும் மனம் தளராத ஆளுநர் மிஸ்ரா அவர்கள், விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்றை ஏற்பாடு செய்து, அவர்களை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தார். ஹெலிகாப்டர் ஆளுநர் மாளிகையில் தரையிறங்கியதும், அங்குத் தயாராக இருந்த மகப்பேறு மருத்துவர் அவசர ஊர்தியில் அவர்களைக் கொண்டு சென்று இட்டா நகரின் ஹீமா மருத்துவமனையில் அனுமதித்தார். உடனே அந்தக் கர்பிணிப் பெண்ணிற்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு குழந்தை பிறந்தது. இரக்கம் மிகுந்த இதயத்துடன் தங்களுக்கு உதவிய ஆளுநர் மிஸ்ராவுக்கு கணவரும் மனைவியும் கண்ணீர்மல்க நன்றி கூறினார். தவாங்கிலிருந்து இட்டா நகர் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் குறைந்தது 15 மணி நேரங்கள் ஆகும். ஆனால் ஆளுநரின் இந்த இரக்கமிகு செயலால், வெறும் 2 மணி நேரங்களில் அந்நகரை அடைந்ததால் தாயும் சேயும் காப்பாற்றப்பட்டனர். கடவுளின் படைப்பாளர்களாகிய நாமே நமது இரக்கச் செயல்களை இப்படி வெளிப்படுத்த முடிகின்றது என்றால்,  தனது உருவிலும் சாயலிலும் நம்மைப் படைத்த கடவுள் எத்துணை இரக்கமிகு செயல்களை நம்மில் ஆற்ற முடியும் என்பதற்கு அவர் தாவீதுக்கு காட்டிய இரக்கமே மாபெரும் எடுத்துக்காட்டாகத்  திகழ்கின்றது. ஆகவே, இரக்கம் சுரக்கும் இறைவனின் பிள்ளைகளாகிய நாமும் அவ்வாறே இரக்கம் உடையவர்களாகவும் அதனை நம் செயல்களில் வெளிப்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்போம். இதற்காக இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 August 2024, 13:31