பஞ்சாப் பொற்கோவிலின் பின்னணியில் செப வேண்டல்கள் பஞ்சாப் பொற்கோவிலின் பின்னணியில் செப வேண்டல்கள்  (AFP or licensors)

விடைதேடும் வினாக்கள் - எது சிறந்தது? பொன்னா? திருக்கோவிலா?

இன்று இயேசு உலகின் திருத்தலங்களுக்கு வந்தால் அன்றிலிருந்த நிலையிலிருந்து என்ன வேறுபாட்டைக் காண்பார்?. பொன்னுக்கு தரப்படும் மரியாதை கோவிலுக்கு இருக்கிறதா?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?

எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? என இயேசு எழுப்பிய கேள்வி குறித்து இன்றைய நம் நிகழ்ச்சியில் நோக்குவோம்.

சில வேளைகளில் மனிதர் எழுப்புகின்ற கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றலாம். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கும்போது அங்கே புதைந்துகிடக்கின்ற அர்த்தத்தை நாம் காண முடியும். இயேசுவின் கேள்வியும் அப்படித்தான் வருகிறது.

‘மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்’ என்ற தலைப்பில் மத்தேயு நற்செய்தி 23ஆம் பிரிவில் வரும் இந்த கேள்வியில், வெளிவேடக்கார மறை நூல் அறிஞரையும், பரிசேயரையும் இயேசு அழைக்கும் வார்த்தைகளை கொஞ்சம் உன்னிப்பாகக் கவனியுங்கள்.

குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?

குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? (மத் 23 : 17, 19) என்று கேட்கிறார்.

குருட்டு மடையரே!, குருடரே! என்ற வார்த்தைகளால்  திட்டுகிறார். எது சிறந்தது? பொன்னா? திருக்கோவிலா? என்ற கேள்வியைத் தொடர்ந்து, எது சிறந்தது? காணிக்கையா? பலிபீடமா? என்ற கேள்வியையும் முன்வைக்கிறார் இயேசு. இன்று இயேசு நம் உலகின் திருத்தலங்களுக்கு வந்தால் அன்றிலிருந்த நிலையிலிருந்து என்ன வேறுபாட்டைக் காண்பார்?. பொன்னுக்கு தரப்படும் மரியாதை கோவிலுக்கு இருக்கிறதா? அல்லது காணிக்கைப் பெட்டியைவிட உயர்ந்தது வேறு ஏதாவது கோவிலுக்குள் இருக்கின்றதா? பொன்னும் காணிக்கைப் பெட்டியும் இல்லையேல் இரவுகளிலும் கோவில்கள் மூடப்படவேண்டிய அவசியமிருக்காது.

இந்த பதில் அர்த்தமற்றதாக, சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றலாம். ஆனால், கோவில்களில் உள்ள பழங்காலச் சிலைகளைத் திருடுதல், கோவில்களில் பாதுகாக்கப்படும் நகைகள் காணாமல் போதல், காணிக்கைப் பெட்டிகள் இரவோடு இரவாக உடைக்கப்படுதல் போன்றவைத் தொடரத்தான் செய்கின்றன. கடவுளுக்குச் சொந்தமானதையேத் திருடும் அளவுக்கு மனிதன் துணிந்து விட்டான். அப்படியெனில் அவனுக்கு கடவுள் என்பவர் மீது பயமில்லை, நம்பிக்கையில்லை. இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது பொன்னுக்கா? அல்லது கோவிலுக்கா?. இஸ்லாமிய மற்றும் ஆங்கிலேய ஆக்கரமிப்பின்போது கோவில்கள் சூறையாடப்பட்டன, ஏன்? ஆயிரக்கணக்கான கோவில்கள் காணமால் போயுள்ளதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் பட்டா மாற்றம் நடைபெற்றுள்ளதும் எதற்காக?. 44,301 கோவில்களை தமிழகத்தில் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ளதே இந்து அறநிலையத்துறை, எதற்காக?. எல்லாம் வருமானத்திற்காகத்தான், அதாவது பொன்னுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்காகத்தான் என்பது அனைவரும் அறிந்ததுதான்.  இப்போது சொல்லுங்கள், எந்த மதமாயினும் திருத்தலங்களில் இன்று வழங்கப்படும் மரியாதை பொன்னுக்கா? கோவிலுக்கா? அல்லது  காணிக்கைக்கா? பலிபீடத்திற்கா?. உண்மையைச் சொல்வதற்கு மனதைரியம் வேண்டும்.

பொன்னின் மீதும், காணிக்கைப் பொருட்களின் மீதும் காட்டப்படும் அன்பின் அளவுக்கு நாம் பலிபீடத்தின்மீதும், ஆலயத்தின் மீதும் கொண்டிருக்கிறோமா?.

இங்கு இயேசு குருட்டு மடையரே என்றும் குருடரே என்றும் கூப்பிடுவதன் பின்னணியை கொஞ்சம் நோக்குவோம்.

குருட்டு வழிகாட்டிகளே, ஐயோ! உங்களுக்குக் கேடு! யாராவது திருக்கோவிலின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் கோவிலின் பொன்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருட்டு மடையரே! எது சிறந்தது? பொன்னா? பொன்னைத் தூயதாக்கும் திருக்கோவிலா?  யாராவது பலிபீடத்தின்மீது ஆணையிட்டால் ஒன்றுமில்லை; ஆனால் அவர் அதில் படைக்கப்பட்ட காணிக்கையின்மீது ஆணையிட்டால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் என்கிறீர்கள். குருடரே! எது சிறந்தது? காணிக்கையா? காணிக்கையைத் தூயதாக்கும் பலிபீடமா? (மத் 23:17-19).

இங்கு மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர்களது போலித்தனத்தை வெளிப்படுத்துகிறார் இயேசு. திருக்கோவிலின் மீது ஆணையிடலாம் பரவாயில்லை. அப்படி ஆணையிட்டால் அதை மீறினாலும் தவறில்லை. ஆனால் ‘திருக்கோவிலில் உள்ள பொன்’ மீது ஆணையிட்டால் அது தவறு. அதை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் ஒரு கிளை சட்டத்தை இட்டிருந்தார்கள். அதே போல, பலிபீடத்தின் மீது ஆணையிட்டால் பரவாயில்லை. அதை நீங்கள் மீறினாலும் பிழையில்லை, ஆனால் பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ள காணிக்கையின் மீது ஆணையிட்டால் அதை நிச்சயம் நிறைவேற்றவேண்டும் என்றும் ஒரு சட்டத்தை வைத்திருந்தார்கள். அவர்களுடைய இந்த போலித்தனத்தை இயேசு கண்டித்தபோதுதான், இன்று நாம் விவாதிக்கும் கேள்விகளைக் கேட்கிறார்.

திருக்கோவிலின் மீது ஆணையிடுகிறவன் கோவிலின் மீதும், அதன் பொன் மீதும், அதில் வீற்றிருக்கின்ற ஆண்டவர் மீதும் ஆணையிடுகிறான். எது பெரிது? கோவிலில் இருக்கும் பொன்னா, பொன்னையே தூயதாக்கும் ஆலயமா? எது சிறந்தது ஆலயத்தில் இருக்கும் பொன்னா, ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனா? பலிபீடத்தின் மீது ஆணையிடலாம் என்கிறீர்களே, பலிப் பொருளை விட அந்தப் பலிப்பொருளையே தூயதாக்கும் பலிபீடம் சிறந்ததல்லவா? என கிடுக்கிப் பிடி கேள்விகளை வீசுகிறார்.

பொன்னின் மீதும், காணிக்கைப் பொருட்களின் மீதும் ஆணையிடுவது நிச்சயம் நிறைவேற்ற வேண்டியது என்பது அவர்களுடைய உலகப் பொருட்களின் மீதான ஆசையைக் காட்டுகிறது. பலிபீடத்தையோ, ஆலயத்தையோ இரண்டாம் இடத்துக்குத் தள்ளுவது, நாம் ஏற்கனவே கூறியதுபோல், அவர்களுக்கு இறைவன் மீது ஆழமான அன்பு இல்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு பலியாய் வந்தவர், அவரே பலிபீடமாகவும் வந்தவர். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான பாலமாய் வந்தவர். அவர், போலித்தனமான போதனைகளை விட்டு விடச் சொல்லி எச்சரிக்கிறார்.

இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்தபோது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் பலர். அவர்கள் நடுவே யூத சமயத்தின் நுணுக்கங்களைத் தெரிந்த மறைநூல் அறிஞரும், சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடித்துவந்த பரிசேயரும் இருந்தனர். அவர்களைப் பார்த்து இயேசு கூறிய வார்த்தைகள் உண்மையிலேயே கடினமானவை. அவர்களை இயேசு ''வெளிவேடக்காரர்கள்'' என்று கூறிக் கடிந்துகொண்டார். சமய நெறியை விளக்குகிறோம் என்று சொல்லி மக்கள்மீது கடினமான சுமையைச் சுமத்திவிட்டு, தாங்கள் மட்டும் அந்த நெறிப்படி நடக்காமல் இருந்த அந்த வெளிவேடக்காரர்களைப் பின்பற்றலாகாது என்று இயேசு கூறினார். அவர்களுடைய தவறான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டிய இயேசு அவர்கள் விண்ணரசில் நுழைவதுமில்லை, விண்ணரசில் நுழைய விரும்புவோரை விடுவதுமில்லை என்றுகூறிக் கடிந்தார்.

இன்று திருத்தலங்கள் எந்த நிலையில் உள்ளன? பக்தர்களாகிய நாம் எங்கு நிற்கின்றோம்?

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2024, 14:14