மக்களுக்கு இயேசு உணவளிக்கும் நிகழ்வு மக்களுக்கு இயேசு உணவளிக்கும் நிகழ்வு  

பொதுக் காலம் 18-ஆம் ஞாயிறு : உலகத் தேடலா? ஆன்மிகத் தேடலா?

அழிவுத்தரும் இவ்வுலகம் தரும் இன்பங்களைத் தேடுகின்றேனா அல்லது நிலைவாழ்வு தரும் இறையாட்சிக்கு உரியவற்றைத் தேடுகின்றேனா? என்ற இரண்டு கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம்.
பொதுக் காலம் 18-ஆம் ஞாயிறு : உலகத் தேடலா? ஆன்மிகத் தேடலா?

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. விப 16:2-4,12-15     II. எபே 4:17, 20-24     III.  யோவா 6:24-35)

இன்று நாம் பொதுக் காலத்தின் 18-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் உலகத்தேடல், ஆன்மிகத் தேடல் ஆகிய இரண்டு வகையான தேடல்கள் பற்றி குறிப்பிடுவதுடன் நமக்கான தேடல் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. முதல்வகையான தேடல் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, பணம்,  புகழ், களியாட்டங்கள், கேளிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இரண்டாவது வகையான தேடல், அன்பு, அமைதி, உண்மை, நீதி, நேர்மை, உறவு, மகிழ்ச்சி, விழுமியங்கள், அறநெறிகள், பொதுநலன்கள், அர்ப்பணிப்புடன் கூடிய சேவை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த இரண்டாவது வகையான ஆன்மிகத் தேடல்தான் இறையாட்சிக்கான தேடலாக அமைகிறது. அடிப்படையில் இவ்வுலகத் தேடல் என்பது உணவை மட்டுமே மையப்படுத்தியதாக அமைகிறது. அதாவது, உண்பதற்காகவே வாழவேண்டும் (இலட்சியம் அற்ற நிலை) என்ற சுயநலமான போக்கு. ஆனால் ஆன்மிகத் தேடல் என்பது வாழ்வதற்காக சிறிதளவு உண்டால் போதும் என்ற மனநிலையில் வாழ்வது. அதாவது, உணவைவிட இலட்சிய வாழ்வுதான் மிகவும் முக்கியம் என்பதை உணர்வது. இதன் அடிப்படையில் தான். "செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" (குறள் 412) என்ற குறளில் செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும் என்கின்றார் திருவள்ளுவர். இன்றைய முதல் வாசகமும் மூன்றாம் வாசகமும் இருவகையான உணவைக் குறித்துப் பேசுகின்றன. “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே" என்று இஸ்ரயேல் மக்களை நோக்கி மோசே கூறிய வார்த்தைகளும், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று இயேசு கூறும் வார்த்தைகளும் மிகவும் ஒப்புநோக்கத் தக்கதாய் இருக்கின்றன. அவ்வாறே மோசேயின் காலத்து இஸ்ரயேல் மக்களும் இயேசுவின் காலத்து இஸ்ரேல் மக்களும் ஒரே மனநிலைக் கொண்டவர்களாக இருப்பதைப் பார்க்கின்றோம். இஸ்ரயேல் மக்கள், “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுப்பதைப் பார்க்கின்றோம். ஆனாலும் கடவுள் அவர்களது உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொண்ட ஓர் அன்புத் தந்தையாக அவர்களுக்கு மன்னா என்னும் உணவை அளிக்கின்றார். மேலும் இந்த உணவை அடுத்த நாள்வரை சேமித்து வைக்கக் கூடாது என்ற கட்டளையும் அவர்களுக்கு வழங்குகின்றார். 'ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார். மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள்' என்றும் வாசிக்கின்றோம். இதன் வழியாக, கடவுள் அவர்களுக்கு ஒரு முக்கியமான கருத்தை வலியுறுத்துகின்றார். அதாவது, ‘நாம் உழைக்காமலே ஒவ்வொரு நாளும் உணவைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற தவறான எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கடவுள் உறுதியாக இருந்தார். அதுமட்டுமன்றி, அவர்களின் புனித நாட்டிற்கான இந்தப் பயணத்தில் உணவு மட்டுமே மிகவும் முக்கியமானதொன்றாக ஆகிவிடக்கூடாது என்றும் விரும்பினார் கடவுள்.

நற்செய்தியிலும் இதனைத்தான் பார்க்கின்றோம். இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தபோது, அதே மனநிலைதான் இந்த மக்களிடமும் இருந்தது. இயேசுவையும் அவரது சீடர்களையும் பல இடங்களிலும் தேடிக் கண்டுபிடித்ததும், “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்கின்றனர் மக்கள். அவர்கள் நோக்கம் உணவை மையப்படுத்தியாக அமைந்துவிடுகிறது. ‘இயேசுவுடன் இருந்துவிட்டாலே போதும் நமக்கு உணவு கிடைத்துவிடும், நாம் உழைக்கத் தேவையில்லை, நமக்குக் கிடைத்துவிடும்’ என்ற எண்ணம் அவர்களிடத்தில் வந்துவிடுகிறது. அதனால்தான் இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் (அப்பம் பகிர்தல்) கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார் என்று மக்களின் மனநிலைக் குறித்து பதிவு செய்கின்றார் நற்செய்தியாளர் யோவான். ஆக, இறைத்தந்தையைப் போன்று அவரது ஒரே திருமகனாகிய இயேசுவும் மக்களின் எண்ணவோட்டங்களை நன்கு அறிந்துவைத்திருக்கின்றார். அதனால்தான், “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று மக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில்மொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில், தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்று சற்று காட்டமாகவே பதிலிருப்பதைப் பார்க்கின்றோம். இங்கே, இவ்வுலகின் உணவு அழியக்கூடியது என்பதையும், நிலைவாழ்வு தரும் தனது வார்த்தையாகிய உணவு என்றும் அழியாதது என்பதையும் தெளிவுபடுத்துகின்றார் இயேசு. மேலும், இயேசு பாலைநிலத்தில் சோதிக்கப்பட்டபோது, அலகை அவரிடம், “நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றது. அதனிடம் இயேசு மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை’ என மறைநூலில் எழுதியுள்ளதே” (காண்க. லூக் 4:3-4) என்று இயேசு கூறுவதைக் காண்கின்றோம். அத்துடன் நமது முன்னோர்கள் உண்டதுபோலவே மெசியா வரும்போது மன்னா என்னும் உணவு தருவார் என்ற நம்பிக்கையும் இஸ்ரயேல் மக்களிடம் இருந்தது. இதன் காரணமாகவும் மக்கள் இயேசுவிடம் இத்தகையதொரு அணுகுமுறையைக் கொண்டிருந்திருக்கலாம். ஆனாலும் உண்மையான மன்னா என்னவென்பதை அவர்களுக்கு விளக்குகிறார் இயேசு.

நாங்கள் என்ன செய்யவேண்டும்?

இயேசு அவர்களின் தவறான தேடல் குறித்து எடுத்துக்காட்டியதும், அவர்கள் தங்களை உணர்ந்துகொண்டவர்களாக, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அப்போது, இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்” என்று கூறுகின்றார். இயேசுவின் பதில் சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கிறது. ஆனாலும், அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்று மீண்டும் அதன் உண்மைப்பொருளை உணர்ந்துகொள்ளாமல் அவரிடம் கேள்வி எழுப்புகின்றனர். இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்று மீண்டும் அவர்களிடம் தெளிவுபடுத்துகின்றார். இதன்பிறகுதான், மன்னா குறித்த உண்மைப்பொருளை உணர்ந்துகொண்டு, “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டபோது, இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது" என்று நிலைவாழ்வைக் குறித்து மீண்டும் கூறி முடிக்கின்றார்.

நமது உண்மையான தேடல் எது?

அழிவுத்தரும் இவ்வுலகம் தரும் இன்பங்களைத் தேடுகின்றேனா அல்லது நிலைவாழ்வு தரும் இறையாட்சிக்கு உரியவற்றைத் தேடுகின்றேனா? என்ற இரண்டு கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம். இங்கே மார்த்தா மரியாவிடம் விளங்கிய தேடலை நம் நினைவுக்குக் கொண்டுவருவோம். மார்த்தாவிடம் விளங்கியது இவ்வுலக இன்பங்களுக்கு உரிய ஒரு தேடல், ஆனால் மரியாவிடம் விளங்கியது இறையாட்சிக்கான ஒரு தேடல். இதை அவர்களின் செய்லபாடுகளிலே காண்கின்றோம் அல்லவா? மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இருந்தார் என்று காண்கின்றோம். மேலும், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்று புகாரளிகின்றார். ஆனால் எது  முக்கியமானது, எது தேவையானது, எது கடவுளுக்கு உகந்தது என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” (காண்க லுக் 10:38-42). நான் உண்மையிலேயே அருளடையாளங்களுக்காகவும், நான் விரும்பியதைப் பெறுவதற்காகவும் மட்டுமே இயேசுவைத் தேடுகின்றேனா அல்லது, அவரது வார்த்தைகளைக் கேட்டு அதன்படி வாழ்ந்து, அதற்குச் சான்று பகர்ந்து நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரைத் தேடுகின்றேனா என்பதை குறித்து இப்போது சிந்திப்போம். "உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்" என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறும் புனித பவுலடியாரின் சிந்தனைகளும் இதன் அடிப்படையில்தான் என்பதையும் அறிந்துகொள்வோம்.  

ஆகவே, அவசியமற்றவைகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவற்றை மறந்துவிட்டால், வாழ்வில் முக்கியமானவற்றை, அல்லது, வாழ்வையே இழக்க வேண்டியிருக்கும். 1988-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தி, இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு மட்டுமல்ல, ஓர் எச்சரிக்கையும் கூட. வீடியோ படங்கள் எடுப்பதில் சிறந்த Ivan Lester McGuire என்ற 35 வயது கலைஞரின் மரணம் பற்றிய செய்தி 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வெளியானது. பறக்கும் விமானத்திலிருந்து ஒரு குழுவாகக் குதித்து, கரங்களைக் கோர்த்து, வானில் சாகசங்கள் புரிவோரைப் பற்றிய செய்தி இது. Sky Diving என்று அழைக்கப்படும் இந்தச் சாகசத்தில் ஈடுபடும் இவர்கள், பறக்கும் விமானத்திலிருந்து ஒவ்வோருவராகக் குதிப்பார்கள். விண்வெளியில், ஒரு சங்கிலித்தொடராக கரங்களைப் பற்றியபடி அந்தரத்தில் இக்குழுவினர் பல வடிவங்களை அமைத்துக் காட்டுவார்கள். பின்னர், பூமியை நெருங்கும் வேளையில், தங்கள் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு விசையைத் தட்டுவார்கள். உடனே, அவர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு 'பாரச்சூட்' விரியும். அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்குவர். இந்தச் சாகசங்களைப் பதிவு செய்வதற்கு வீடியோ படக்கலைஞர் ஒருவரும் இக்குழுவுடன் விமானத்திலிருந்து குதிப்பார். 1988-ஆம் ஆண்டு நடந்த இச்சாகசத்தின்போது, பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிப்பது காண்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒரு வட்டம் அமைப்பது வரை ஒழுங்காகக் காட்டப்பட்ட அந்த வீடியோ படம், திடீரென புரண்டு, தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் திரையில் ஒன்றும் இல்லை. நடந்தது இதுதான். வீரர்கள் குதிப்பதை விமானத்திலிருந்தபடியே படம் பிடித்த வீடியோ கலைஞர் McGuire அவர்கள், இறுதியாக தானும் விமானத்திலிருந்து குதித்தார். வீடியோ எடுப்பதிலேயே கவனமாய் இருந்த அவர், தான் 'பாரச்சூட்' அணியவில்லை என்பதை உணராமல் குதித்துவிட்டார். வானில் நடைபெறும் இந்த சாகசகங்களை 800 முறைகளுக்கும் மேல் வீடியோ படம் எடுத்து புகழ்பெற்றவர் Ivan Lester McGuire. அன்று 'பாரச்சூட்' இல்லாமல் குதித்ததால், தன் வாழ்வை இழந்தார்.

ஆகவே, உலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, ஆன்மிக காரியங்களுக்கு முக்கியத்துவமளித்து, ஆண்டவரின் வார்த்தையை வாழ்வாக்குவோம். அதற்காக ஆண்டவரிடம் இறையருள்வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2024, 12:02