வழிபாட்டு நிகழ்வில் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே. வழிபாட்டு நிகழ்வில் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே. 

கடவுளின் சாட்சிகளாக கருவிகளாக வாழ...

கடவுளிடமிருந்து இரக்கத்தை கொடையாக தாராளமாகப் பெற்றுள்ள நாம் அதில் சிறு பகுதியையாவது நம் உடன் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசுவின் சீடர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் இரக்கத்தைப் பெறுபவர்களாக மட்டுமல்லாமல், அவருடைய உண்மையான சாட்சிகளாகவும் கருவிகளாகவும் வாழ அழைக்கப்படுகிறோம் என்றும், நாம் வாழ்கின்ற இந்த உலகிற்கு இரக்கமும் மன்னிப்பும் மிக அதிகமாக தேவை என்றும், வலியுறுத்தினார் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

அண்மையில் வடக்கு இத்தாலியின் Concordia-Pordenone மறைமாவட்டத்தின் பிபியோன் நகரில் நடைபெற்ற பாவமன்னிப்பு பெறுவதற்கான சிறப்பு வழிபாட்டின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார் நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரும், அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

இவ்வுலகில் பழிவாங்குதலை விட உரையாடல் மிக முக்கியமானது என்று வலியுறுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், அனைவரின் நன்மைக்கும் பங்களிக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், கடவுள் மற்றும் மனிதர்களோடு நல்லிணக்கமும், ஒப்புரவும் கொண்டு வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

பலவீனமானவர்கள் கையாளப்படுவதற்குப் பதிலாக இவ்வுலகில் அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும், உலக அமைதிக்கு வழிவகுக்கும் இரக்கம், நல்லிணக்கம் மற்றும் மன்னிப்பு மிகவும் தேவைப்படுகிறது என்று வலியுறுத்திய கர்தினால் தாக்லே அவர்கள், கடவுளால் மட்டுமே இந்த கொடைகளை நமக்கு வழங்க முடியும்  என்றும் கூறினார்.

கடவுளிடமிருந்து இரக்கத்தை கொடையாக தாராளமாகப் பெற்றுள்ள நாம் அதில் சிறு பகுதியையாவது நம் உடன் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பலவீனமானவர்கள் கையாளப்படுவதற்குப் பதிலாக ஆதரிக்கப்படும் ஓர் உலகம், பழிவாங்குவதை விட உரையாடல் மேலோங்கும் ஓர் உலகம், சுயநலத்தைத் தேடுவதை விடுத்து அனைவரின் நன்மைக்கும் ஒவ்வொருவரும் பங்களிக்கும் ஓர் உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள் என்று கூறிய கர்தினால் தாக்லே அவர்கள்,  இரக்கமின்றி உலகமானது நீதி, உண்மை, அன்பு மற்றும் அமைதியைக் காணாது என்றும், இரக்கத்தைத் தேர்ந்தெடுங்கள், இரக்கத்த்தைப் பரப்புங்கள், இரக்கத்தோடு வாழுங்கள் என்று அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2024, 13:51