நம்பிக்கையின் மிகப்பெரிய கொண்டாட்டம் திருத்தந்தையுடனான சந்திப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்
பலீபீட இளம் உதவியாளர்கள் திருத்தந்தையை சந்தித்ததன் வழியாக, நம்பிக்கை உலகம் முழுவதையும் அரவணைக்கின்றது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தார்கள் என்றும், நம்பிக்கையின் மிகப்பெரிய கொண்டாட்டமாக அச்சந்திப்பு இருந்தது என்றும் கூறினார் துணைஆயர் Johannes Wübbe
“நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற தலைப்பில் உலகெங்கிலும் இருந்து ஏறக்குறைய 20 நாடுகளைச் சேர்ந்த 70,000 பலிபீட இளம் உதவியாளர்களை அண்மையில் வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்ததைக் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு இவ்வாறு கூறினார் ஜெர்மனியின் Osnabrück மறைமாவட்ட துணை ஆயர் Johannes Wübbe
உரோம் நகரைப் பற்றியும், திருஅவையில் பிரச்சனைகள் பல இருந்தாலும் நம்பிக்கையுடன் முன்னேறிச்செல்ல வேண்டும், நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்ற தெளிவையும், இளைஞர்கள் இந்த பயணத்தில் கற்றுக்கொண்டார்கள் என்றும் எடுத்துரைத்தார் துணை ஆயர் Johannes.
சமூக உணர்வும், திருத்தந்தையுடனான சந்திப்பும் இளைஞர்களின் பணியில் அவர்களை மேலும் உறுதியாக்கியது என்றும், இதே உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் தங்களது தலத்திருஅவைகளுக்குச் சென்று செயல்பட அவர்களுக்கு வழிவகுக்கும் என்று கூறிய ஆயர் Johannes அவர்கள், இளைஞர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் உரையாடலில் ஈடுபட மிக முக்கியமானதாக இப்பயணம் இருந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.
திருஅவையின் நம்பிக்கையின் அடையாளமாக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்த துணை ஆயர் அவர்கள், மகிழ்ச்சியான மனம், ஒற்றுமைக்கான உறுதியான அர்ப்பணிப்பு, இறைவனுடன் உரையாடுவதற்கான ஆர்வம் கொண்டவர்களாக இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்