பேராயர் José Domingo Ulloa Mendieta உடன் இளைஞர்கள் பேராயர் José Domingo Ulloa Mendieta உடன் இளைஞர்கள்  (CLP)

வெனிசுலா மக்கள் தனியாக இல்லை, பேராயர் José Domingo

உண்மைக்காகப் போராடும் வெனிசுலா மக்களை நாம் தனியாக விட்டுவிடக்கூடாது, அவர்களோடு ஒற்றுமையாகவும் நெருக்கமாகவும் இருக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்று சேர்வோம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வெனிசுலாவிற்கான செப நாள் என்பது தலத்திருஅவையின்  ஒற்றுமையின் அடையாளம் என்றும்,  எவ்வளவு சிக்கலான சூழலிலும் செபம் என்பது எதார்த்தத்தை மாற்றும் ஆற்றல் மிக்க ஆயுதம் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் எடுத்துரைத்தார் பேராயர் José Domingo Ulloa Mendieta.

ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை வெனிசுலா மக்களுக்காக செபிப்பதற்காக அழைப்பு விடுத்து ஏற்பாடு செய்யப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திருப்பலியின்போது இவ்வாறு கூறினார் பனாமா கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் பேராயர் José Domingo Ulloa Mendieta.

தங்களது சொந்த நாட்டில் இருப்பவர்கள், பனாமாவை தங்களது வாழ்விடமாகத் தேர்ந்துகொண்டவர்கள் அனைவரும் தனியாக இல்லை என்றும், இருளும் உறுதியற்ற தன்மையும் கொண்ட கடினமான சூழலில் உண்மையும் வெளிப்படைத்தன்மையும் நிலவ தொடர்ந்து நாம் செபிக்க வேண்டும் என்றும் கூறினார் பேராயர் José Domingo Ulloa Mendieta.

உண்மைக்காகப் போராடும் வெனிசுலா மக்களை நாம் தனியாக விட்டுவிடக்கூடாது என்றும்,  அவர்களோடு ஒற்றுமையாகவும் நெருக்கமாகவும் இருக்கும் வகையில் நமது  தோள்களை ஒன்று சேர்ப்போம் என்று கூறிய பேராயர் அவர்கள், மாற்றத்தையும் வேறுபாட்டையும் நம்மில் ஏற்படுத்தும் உண்மைக்கு நமது இத்தகைய கோட்பாட்டுச் செயலானது உறுதியான சைகையாக இருக்கும் என்றும் கூறினார்.

வன்முறையை அமைதியால் மாற்றவும், வாக்குப்பெட்டிகளில் அளித்த வாக்குகள் வழியாக தெரிவிக்கப்பட்ட மக்களின் விருப்பத்தை அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கடவுளிடம் மன்றாட வேண்டும் என்றும் கூறினார் பேராயர் Ulloa.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2024, 13:54