மத வழிபாடு மத வழிபாடு  (ANSA)

வாரம் ஓர் அலசல் - மனிதநேயமும் இறைநேயமும்

மக்களுக்கு தொண்டாற்றும் நல்மனம் படைத்தவர்களைக் கூட, ஜாதி, மதம் என்ற பிரிவினைகளைப் புகுத்தி ஒதுக்கிவைக்கும் குறுகிய மனம் நம்மிடையேப் புகுந்துவிட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்த வாரத்தில் பல முக்கிய பன்னாட்டு தினங்கள் சிறப்பிக்கப்படுகின்றன. அதில் மிக முக்கியமான இரண்டை மட்டும்  நம் இன்றைய  கருத்துப் பரிமாற்றத்திற்கு என எடுத்துக்கொள்வோம். ஒன்று, இந்த திங்களன்று நாம் சிறப்பித்த உலக மனித நேய தினம், ஏனையது, ஆகஸ்ட் 22, அதாவது வரும் வியாழனன்று உலகில் நினைவுகூரப்படும், மத அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினம். முதலில் மனித நேய தினம் குறித்து காண்போம்.

உலக மனித நேய தினம்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ வியெய்ரா டி மெல்லோ, 37 ஆண்டுகள் ஐ.நா. அவையின் மனித நேயப் பணிகளில் தொண்டாற்றியவர். மிகச் கடினமான போர் சூழல்களில் சிக்கித் தவிக்கும் சாதாரண குடிமக்கள்படும் வேதனைகளை வெளிக்கொண்டு வந்தவர். அவர்களுக்கான நிவாரணங்களைக் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியவர். 2003ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19, ஈராக்கில் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே செயல்படும்  ஐ.நா. உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியது அல்கொய்தா அமைப்பு. கேனல் ஹோட்டல் என்ற இடத்தில் நடந்த அந்தத் தாக்குதலில், ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியெய்ரா டி மெல்லோ கொல்லப்பட்டார். 22 பேர் உயிரிழந்தார்கள், 100 பேர் படுகாயம் அடைந்தார்கள். 2008இல் ஸ்வீடன் நாட்டின் முன்மொழிதலுடன், ஐ.நா.பொது அவை,  செர்ஜியோ அவர்கள் நினைவை சிறப்பிக்கும் விதமாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19ஆம் நாள் உலக மனித நேய தினமாக சிறப்பிக்கப்படும் என அறிவித்தது. உதவிகளை வழங்குவதற்காக உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் மகத்தான சவால்களைப் பிரதிபலிக்கும் இந்த நாள், அத்துடன் துன்பத்தைத் தணிப்பதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கவும், இரக்கமுள்ள உலகத்தை மேம்படுத்தவும் நல்லதொரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது.

ஆனால், மனிதாபிமானம், அல்லது மனித நேயம் என்பது இன்று காணாமல் போய்வருகிறது. அன்னை தெரேசாக்கள் தோன்றுவது அத்திபூத்தாற்போல் ஆகிவிட்டது. தன்னைத் தாக்கும் பகைவர்களுக்கு கூட தீங்கு செய்யாதிருப்பதை தனது போராட்ட வழியாக நடைமுறைப்படுத்தி வெற்றி கண்ட அண்ணல் மகாத்மா காந்திகளை எங்கும் காண முடியவில்லை. மக்களுக்கு தொண்டாற்றும் நல்மனம் படைத்தவர்களைக் கூட, ஜாதி, மதம் என்ற பிரிவினைகளைப் புகுத்தி ஒதுக்கிவைக்கும் குறுகிய மனம் புகுந்துவிட்டது. இதனால், எலும்பும் தோலும் போர்த்திய உடம்பை வைத்துக்கொண்டு மனிதநேய உணர்வுகளின்றி எத்தனை கோடி பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என நாம் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ” என பாரதியார் பாடியதில் இன்றும் எவ்வித மாற்றமும் இல்லை.

மனிதநேயத்தின் அவசியத்தை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்றைய உலகில் நடப்பதைப் பார்த்தால், மனித நேயம் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கிறது. பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வணிக நோக்கோடும், சுயநல நோக்கோடும் செயல்படும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அரசுகள் போன்ற அத்தனையும் சமுதாயத்தை சீரழிப்பதில் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளதைத்தான் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆயினும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், அன்போடு, அருளோடு, தன்னலமற்ற பொதுநலத்துடன், மனித நேயத்துடன் மற்ற உயிர்களையும் காத்து நிற்கும் உத்தமர்கள் ஒரு சிலர் இருந்துகொண்டேயிருக்கும் காரணத்தால்தான் மனித குலம் இன்னமும் தழைத்து நிற்கிறது. மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகட்டும்; போர், குண்டுவெடிப்பு போன்ற கொடுமையான வன்முறைச் சம்பவங்களாக இருக்கட்டும், பாதிக்கப்பட்டவர்களை மீட்க, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இவர்களின் மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக உருவாக்கப்பட்டதே 'உலக மனித நேய தினம்'.

மத அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினம் இன்றைய நம் உலகில் மதங்கள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன, நம் சுற்றுச்சூழலில் மதத்தின் தாக்கம் என்ன, மதக்காரணங்களுக்காக பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறோமா என்பது குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். மத அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூரும் தினத்தை இவ்வாரம் வியாழனன்று நாம் சிறப்பிக்க உள்ளோம்.

Odoardo Focherini என்ற இத்தாலியர் 1944ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நாத்சி வதைமுகாமில் கொல்லப்பட்டார். இவர், 1944ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி கைது செய்யப்பட்ட போது அவருக்கு வயது 37. ஏழு குழந்தைகளுக்குத் தந்தையான இவர் கைதானபோது அவரின் மூத்த மகள் ஓல்காவுக்கு வயது 13. கத்தோலிக்கரான இவர் நாத்சி வதைமுகாமில் கொல்லப்படுவதற்கான காரணம்தான் என்ன? Focherini அவர்கள், இத்தாலிக்கு அகதிகளாக வந்துகொண்டிருந்த யூதர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கி, நூறு யூதர்களைக் காப்பாற்றினார். யூதர்களுக்கு இவர் உதவி வந்ததால் கைது செய்யப்பட்டு நாத்சி வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டார். கடைசியாக ஜெர்மனியின் ஹெர்ஸ்பூர்க் வதைமுகாமில் இறந்தார். Focherini அவர்களின் வீர வாழ்வை அங்கீகரித்த Yad Vashem என்ற யூத அமைப்பு, 1969ம் ஆண்டில் நாடுகள் மத்தியில் நேர்மையாளர் என்ற பட்டத்தை அளித்தது. Focherini அவர்கள் போன்று எத்தனையோ கத்தோலிக்கர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பல நூறு யூதர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர். இப்படி இவ்வுலகில் மனித நேயம் மிக்க நல்ல மனிதர்கள், மதங்களைக் கடந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து, சக மனிதர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.

இதைப்போன்ற பல நிகழ்வுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. பீஹாரின் அஜீஸ்பூர் கிராமத்தில் நடைபெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில், ஷாயில் தேவி என்ற இந்துமதப் பெண், பத்து முஸ்லிம்களைக் காப்பாற்றியிருக்கிறார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அஜீஸ்பூர் கிராமத்தில், இந்துத் தீவிரவாதிகள் வெறியோடு புகுந்து முஸ்லிம்கள் நான்கு பேரை வெட்டிக் கொலை செய்து, 25க்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகளுக்குத் தீ வைத்து நாசப்படுத்தினர். பின்னர் முஸ்லிம்களைக் கொல்வதற்காக அவர்களைத் தேடினர். உடனே தனது பக்கத்து வீட்டு முஸ்லிம்கள் 10 பேரையும் தனது வீட்டுக்குள் மறைத்து வைத்தார் ஷாயில் தேவி. அவரது வீட்டுக்குள் புகுந்த அந்தக் கூட்டம் 'முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்களா?' என்று அதட்டிக் கேட்டது. இங்கு யாரும் முஸ்லிம்கள் இல்லை' என்று பொய் சொன்னார் அவர். வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர். ஆனால் சத்தம் போட்டு அவர்களை வெளியில் அனுப்பினார் ஷாயில் தேவி. முஸ்லிம்களைக் காப்பாற்றியதால் சிலர் அவருக்கு மிரட்டலும் விடுத்தனர். எனவே பயந்துபோய் அருகில் உள்ள முஹம்மதின் வீட்டில் தன் இரண்டு பெண் குழந்தைகளோடு தஞ்சம் புகுந்து சில நாள்கள் வாழவேண்டியாகியது.

இந்தியாவில் உள்ள அனைத்துப் பெரிய மதங்களிலும் ஒரு சிலரைப் பிடித்து ஆட்டும் இந்தத் தீவிரவாதம், அப்பாவிகளை விழுங்கக் காத்திருப்பதையே இந்தியா, பாகிஸ்தான் இலங்கை, தற்போது பங்களாதேஷ் ஆகியவைகளிலிருந்து வரும் தகவல்கள் உணர்த்துகின்றன.

இந்தியச் சமூகம் இப்போது எதைக் குறித்துக் கவலைப்பட வேண்டும் என்றால், இப்படி மத அடிப்படைவாதத்தில் இளைஞர்களுக்கு ஈடுபாடு ஏற்படுவது ஒரு மதத்தில் மட்டுமல்ல; பல மதங்களில் என்பது பற்றித்தான். மத அடிப்படைவாதக் கருத்துகளுக்கு ஆதரவு பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது. ஒரு மதத்துக்குள் ஏற்படும் தீவிர எழுச்சி, பிற மதத்தவருக்குள்ளும் அதேபோலக் கிளர்ந்தெழும் உணர்வைத் தோற்றுவிக்கிறது. வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்ற அனைத்துவிதமான கொடூரங்களுக்கும், மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படவேண்டும். இங்கு, ஒரு டுவிட்டர் குறுஞ்செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை நினைவில் கொள்வோம்.

“எவராலும் பாதுகாக்கப்படவேண்டிய அவசியம், கடவுளுக்கு கிடையாது, அதேநேரம், மக்களை பயங்கரவாதத்தால் அச்சுறுத்துவதற்கு, தம் பெயர் பயன்படுத்தப்படுவதையும், அவர் விரும்பவில்லை, எனவே, வெறுப்பு, வன்முறை, பயங்கரவாதம், கண்மூடித்தனமான தீவிரவாதம் போன்றவற்றைத் தூண்டிவிடுவதற்கு, மதங்கள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு, அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம்” என்ற சொற்களைப் பயன்படுத்தினார் திருத்தந்தை.

இந்தியா காலனிய ஆட்சியில் இருந்து விடுதலையடைந்து 77 ஆண்டுகளைக் கடந்துவந்த நிலையில், பல மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழவும், தங்கள் மதத்தை பின்பற்றவும் கூடிய சுதந்திரமிக்க சமூகமாக திகழ்வதில் பெருமளவில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். உலகின் பெரும்பாலான இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர் என்பது மட்டுமல்லாமல், இது உலகிலேயே முஸ்லிம் சமுதாயத்தினர் மிக அதிக எண்ணிக்கையில் வசிக்குமிடங்களில் ஒன்றாகவும், பல இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு இல்லமாகவும் திகழ்கிறது. இந்திய தேசத்தினர் மதசகிப்புத்தன்மையை தங்கள் நாட்டின் முதன்மையான அங்கமாக பார்க்கிறார்கள் என்பதும், முதன்மையான மதக்குழுவினரில் பெரும்பாலானோர் “உண்மையான இந்தியராக” திகழ்வதற்கு அனைத்து மதத்தினரையும் மதிப்பது மிக முக்கியமானது என எண்ணுகிறார்கள் என்பதும் உண்மை. சீர்தூக்கிப் பார்க்கும்போது, அதிகமான இந்தியர்கள் பன்முகத்தன்மையைத் தங்கள் நாட்டின் சுமையாகக் கருதுவதை விட ஒரு நன்மையாகப் பார்க்கிறார்கள். ஆனால் அரசியல் காரணங்களால், மத விரோதங்கள் தலைதூக்கி நிற்கின்றன.

இன்றைய உலகில், மத்திய கிழக்கில், குறிப்பாக ஈராக்கிலும், சிரியாவிலும் கிறிஸ்தவர்களும், பிற சிறுபான்மை இனத்தவரும் சமய அடக்குமுறைகளுக்குப் பலியாகி வருகின்றனர். இந்தியாவில் சில அரசியல்வாதிகளின் பேச்சுகளால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்குக் களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது

இந்தியா மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக ஆனது. அதே நேரம் பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறியது. ஆனால் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தை இந்தியாவில் ஓர் இழிவான வார்த்தையாக கருதப்படத் தொடங்கியுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலுக்கு முன் முதல்வர் யோகி ஆதித்யநாத், 80 விழுக்காட்டிற்கும் 20 விழுக்காட்டிற்கும் இடையிலான மோதல் இது என்று பேசியது நினைவைவிட்டு கடந்துவிடவில்லை.

பாரத தேசத்தில் தன்னை மதவாதியாகக் காட்ட போட்டி போடுகின்ற நிலை உள்ளது. இதுபோன்ற ஊர்வலங்களின் போக்கு அதிகரித்து வருகிறது. நாம் உண்மையிலேயே மதவாதியாகவும், வழிபாட்டாளராகவும் இருந்தால், சத்தம் போட்டு வழிபடத் தேவையில்லை. கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையிலான உரையாடல் மிகவும் தனிப்பட்ட விடயம். இது வெளியே காட்டிக்கொள்ளவேண்டிய விடயமா என்பது குறித்து சிந்திப்போம். கடவுளை நம்புபவன் நிச்சயமாக கடவுளால் படைக்கப்பட்ட அடுத்திருப்பவரையும், மதம், மொழி, இனம் என அனைத்தையும் தாண்டி சக மனிதனாக நிச்சயம் மதிப்பான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2024, 13:30