சுதந்திரமாக அமைதியில் பறந்திடல் வேண்டும் சுதந்திரமாக அமைதியில் பறந்திடல் வேண்டும்  (©sakepaint - stock.adobe.com)

வாரம் ஓர் அலசல் - உண்மையில் எதுதான் சுதந்திரம்?

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது!

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

எது உண்மையான சுதந்திரம்? சுதந்திரம் என்றால், நினைத்ததைச் செய்வது, ஜாலியாக இருப்பது இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை வைத்திருக்கிறோம். ஆனால், உண்மையில் எதுதான் சுதந்திரம்?

நாட்டின் குடிமக்களுக்கு பேச்சு, எழுத்து, வாழ்தல், பொருளீட்டுதல், மதம், மொழி ஆகிய எல்லாவற்றிலுமே பிறர் தலையீடு இன்றி அனைவராலும் அனுபவிக்கப்படும் விடுதலையே சுதந்திரம் என்கிறோம்.

மனிதர்கள் சிறப்பாக செயல்படும் வாய்ப்பிற்குரிய சூழ்நிலையை நிர்வகிப்பதே சுதந்திரம் ஆகும் என்பார் ஆங்கிலேய பொருளாதார நிபுணர் ஹெரால்ட் லாஸ்கி.

இயற்கை சுதந்திரம்,  குடிமைச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், தனிப்பட்ட சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், நிதி சுதந்திரம், குடும்பம் சார்ந்த சுதந்தரம், தேசிய சுதந்திரம்,  பன்னாட்டு சுதந்திரம் என எத்தனையோ சுதந்திரங்கள் பற்றி நாம் பேசி வருகிறோம். இங்கு சுதந்திரம் வேண்டுமா அடிமைத்தனம் வேண்டுமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்பது முன்னரே வரையறுக்கப்பட்டது. ஏனெனில், அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் இன்றும் நடந்துகொண்டிருக்கும் உரிமைப் போராட்டங்கள் இதைத் தான் நமக்குச் சொல்லித் தருகின்றன. தங்கள் சுதந்திரச் சிறகுகள் நறுக்கப்பட எவரும் முன்வந்து கொடுப்பதில்லை.

நமக்கு பிடித்தது அல்லது பிடிக்காதது என்ற வரையறைக்குள் உள்ளவைகளை நம் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நாம் விரும்பியதை செய்வதுதான் நம் சுதந்திரம் என்றால், அந்த விருப்பத்திற்கு நாம் அடிமையாகிவிடோம் என்றுதானே பொருள். எனவே, நம் விருப்புகளும் வெறுப்புகளும் நம் வேலிகளா அல்லது சுதந்திரமா? என ஆழமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. நமக்குப் பிடித்ததை மட்டுமே நாம் செய்வதென்பது நம் சுதந்திரமா அல்லது கட்டுப்பாடா? சூழ்நிலைக்கு ஏற்றார்போல் முடிவெடுத்து செயல்படுவதுதானே சுதந்திரத்தின்  உண்மை நிலையை உணர்த்தும்.

பாரத சுதந்திரம்

சுதந்திரத்தின் பலனையும், இன்பத்தையும் அனுபவிக்கிற நாம் அதைப் பெற நமது முன்னோர்களுக்கு ஏற்பட்ட வலிகளையும், துன்பத்தையும் இப்போதாவது நினைவுகூர வேண்டும். அதுவே சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அம்மாமனிதர்களுக்கு நாம் செலுத்தக்கூடிய மரியாதையாகும். ஏனெனில், இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறக் கொடுத்த விலை அளவிடற்கரியது. இலட்சோபலட்சம் பேர் தங்களது இன்னுயிரை நீத்து இருக்கிறார்கள். 2000 மைல்களுக்கு அப்பால் உள்ள, இன்றும் நினைவுச் சின்னமாக விளங்கும் அந்தமான் சிறைகளில் அடைப்பட்டு தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் முடித்துக் கொண்டவர்கள் ஆயிரமாயிரம் பேர். இந்தியாவிற்கு சுதந்திரம் ஏதோ கேட்டவுடன் கிடைத்து விட்டது போல பலரும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், சுதந்திரத்திற்காக நடைபெற்ற சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவை அகிம்சை போராட்டங்கள் தான் எனினும், இந்த சத்தியாகிரக போராட்டத்திற்குப் பின்னால் உயிர்த்தியாகம் செய்தோரின் எண்ணிக்கை ஒன்றிரண்டு அல்ல, பல கோடிகளைத் தாண்டும். ஆம், 1608-ல் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் அவர்கள் வெளியேறிய 1947-ஆகஸ்ட்-14 ஆம் நாள் நள்ளிரவு வரையிலும் இந்திய மக்கள் மீதான ஆங்கிலேயர்களின் நேரடி மற்றும் மறைமுக மனிதநேயமற்ற போர் முறைகளால் எத்தனை கோடி மக்களை இழந்திருக்கிறோம் என எண்ணிப் பார்த்திருக்கிறோமா?.

உலகம் முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா மட்டுமல்லாது மேலும் 5 நாடுகள் தங்களது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடுகின்றன. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பானின் ஆளுகையில் இருந்து விடுதலைப்பெற்ற தென் கொரியா, வட கொரியா, 1971-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலைப் பெற்ற பஹ்ரைன், பிரான்ஸிடம் இருந்து 1960-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்ற காங்கோ, ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்து 1866-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-15-ஆம் தேதி விடுதலை பெற்ற லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகளும் இந்தியாவோடு, வரும் வியாழனன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றன.

பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள் என வேறுபாடுகள் பல இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தை ஒரு மனதாக அனைவரும் ஏற்று இந்தியாவில் சுதந்திரதினம் கொண்டாடப்படுகின்றது.

சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவுக்கு 1947 ஆகஸ்ட் 15 என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளானது. ஆனால் இன்றும் சாதி, ஊழல், மதம் எனும் வேறு பல எஜமானர்களுக்குக் கீழே கைகட்டி அடிமையாய் நிற்கிறது.

அண்மைக்காலங்களில் நாம் மத அடிப்படையில் பிரிக்கப்படுகிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மதம் தொடர்பில்லாத ஒரு நிகழ்வு குறித்து கருத்து எழுதுபவர்கள்கூட எப்படியாவது மத விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதை பல வேளைகளில் காணமுடிகிறது. விமர்சகர்கள் தான் அப்படி எழுதுகிறார்கள் என்றால், நடுநிலை நாளிதழ் என சொல்லிகொண்டு ஒரு பத்திரிகையே இதைத்தான் செய்து வருகிறது. சில அரசியல்வாதிகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் ஆற்றிய பங்கு என்ன என்றுகூட கேள்வியெழுப்புகிறார்கள்.

கிறிஸ்தவர்களின் பங்களிப்பு

ஸ்டான்லி ஜோன்ஸ், C.F. ஆன்ட்ரூஸ், J.C. வின்ஸ்லோ, வர்ரியர் எல்வின், ரால்ப் ரிச்சர்ட் கைதாஹ்ன், எர்னெஸ்ட் போர்றேச்டார்-பேடன், ஜார்ஜ் தாமஸ், மது சுதன் தாஸ், காளி சரண் பேனர்ஜி, J.C.குமரப்பா, பவுல் ராமசாமி, வெங்கல் சக்கரி, K.T. பவுல் T.M. வர்கீஸ், A.J. ஜான், மஸ்கரினாஸ், பிலிப்போஸ் ஏலஞ்சிக்கல் ஜான், ஜோக்கிம்  ஆல்வா, திருமதி வயலெட் ஆல்வா, சிப்ரியன் அல்வாரெஸ், மார்செல் டி சூசா, ஜார்ஜ்  ஜோசப், C. சாமுவேல் ஆரோன், திருமதி கிரேசி ஆரோன் என்பவை மிகச்சில பிரபலமான பெயர்கள். ஆனால், பெயர் குறிப்பிடப்படாமலேயே சுதந்திரப் போராட்டத்தில் மடிந்தவர் எண்ணற்றோர். ஸ்வராஜ் இயக்கம்  (1905), ஒத்துழையாமை இயக்கம் (1920), மற்றும் வெள்ளையனே வெளியேறு  இயக்கம் (1942) என்பவைகளில் பல ஆயிரக்கணக்கான இந்திய கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் உயிரை கொடுத்துள்ளனர். பலர் குடும்பத்தை பிரிந்து சிறையில் மாண்டனர். அந்நாட்களில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனால் இவர்கள் பங்களிப்பு மிகப்பெரியது. 1887ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் தாக்கல் செய்த மூன்றாம் அரசியல் சாசனத்தில் 607 பேர் கலந்துகொண்டனர். இதில் 15 பேர் கிறிஸ்தவர்கள். இதைப்போன்று, 1889ஆம் ஆண்டு நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கில் கலந்துகொண்ட 10 பெண் தலைவர்களில் மூன்று பேர் கிறிஸ்தவ தலைவர்கள். இவர்கள்  பண்டித ரமாபாய் சரஸ்வதி, திருமதி திரயும்புக் மற்றும் திருமதி நிகம்பே. இது தவிர பல கிறிஸ்தவ இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இரவு பகல் பாராமல் போராட்டங்களில் கலந்துகொண்டன.

1973ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சுதந்திர போராட்ட தியாகிகள் பெயரை வெளியிட்டது. இதில் D. ஆர்தர் ஜெயகுமார் மற்றும் 103 பேர் கிறிஸ்தவர்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற கிறிஸ்தவர்களில் D. ஆர்தர் ஜெயகுமார் அவர்களின் பங்களிப்பு அளவிடமுடியாதது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

மதம் என்பதும் நாட்டுப்பற்று என்பதும் வேறு வேறு கோணங்கள். இரண்டும் ஒப்புமைப்படுத்த முடியாதவை. நல்ல கிறிஸ்தவனாக இருப்பவன் நல்ல தேசப்பற்றுடைவனாகவும் இருப்பான். நாடு முக்கியமா மதம் முக்கியமா என்ற கேள்வியை மற்றவர் முன் வைப்பதற்கு முன்னர் உங்களை நோக்கியேக் கேளுங்கள். நாட்டை விட மதம் முக்கியம் என சிலர் நினைப்பதால்தான், இந்த மதத்தைச் சேர்ந்தவன் மட்டும்தான் இந்த நாட்டின் குடிமகன் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டும் ஒன்று என குழப்பிக்கொண்டிருக்கிறோம்.

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது! கோபம், காமம், பணத்தாசை, புகழ் போதை, அதிகார மோகம் என அடிமைத்தனம் தன் தளங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர விடுபடுவதில்லை.

சுதந்திரம் என்பது என்ன

பட்டினியால் எவரும் சாகாத நாளே உண்மையான சுதந்திர நாள் என்பதை உணர்வோம். மதம், இனம், மொழி என்பவைகளை கடந்து இத்தேசக் குடிமகன் என்ற உணர்வில் ஒன்றிணைவோம். காந்தி, திலகர், படேல் போன்ற தலைவர்களும், பாரதி, சரோஜினி நாயுடு போன்ற கவிஞர்களும் தந்த எழுச்சி கொண்டு எழுவோம். முதியோருக்கும், பெண்களுக்கும் உரிய மரியாதையை கொடுப்பதோடு, பாலர் தொழிலாளர் முறைகளை ஒழித்து, இலஞ்சம் ஊழலை சமுதாயத்திலிருந்து வேரோடு அழித்தொழிக்கும் நாளே நம் சுதந்திர நாள். திரை மோக போதையிலிருந்து மீண்டு, நடிகர்களை, நடிகைகளை கடவுளாக துதிப்பதிலிருந்து விடுபட்டு, சுற்றுச்சூழலின் சமநிலை உணர்ந்து, செல்வந்தன்-ஏழை என்ற பெரும் இடைவெளியைத் தகர்த்து, பிறருக்காக நாம் வாழும்போதுதான் சுதந்திர நாள் பிறக்கிறது. அந்த விடியல் விரைவில் கிட்டும்.

உளம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை இன்றே நம் வாரம் ஓர் அலசல் நிகழ்ச்சி வழி சொல்லிக்கொள்கிறோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 August 2024, 13:36