நைஜீரியாவில் வெள்ளத்தால் 10 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
வடக்கு நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தால் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என கவலையை வெளியிட்டார் நைஜீரிய ஆயர் Oliver Dashe Doeme.
கத்தோலிக்கப் பிறரன்புப் பணிகளை ஆற்றிவரும் Aid to the Church in Need (ACN) என்ற நிறுவனத்திடம், வடக்கு நைஜீரியாவில் உள்ள மைதுக்குரி மறைமாவட்டத்தின் ஆயர் Dashe Doeme அவர்களும், அம்மறைமாவட்டத்தின் துணை ஆயர் John Bakeni அவர்களும், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினர்.
பெருவெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிர்களும் உடைமைகளும் இழக்கப்படவில்லை என்றாலும் சாதாரணமான மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், நகரத்தின் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பகுதிகள் தண்ணீரில் முழ்கியுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் அகதிகள் மறு வாழ்வு மையத்தில் தங்கியுள்ளனர் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், கனமழையால் Maiduguri மறைமாவட்டத்தின் தெற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் துணை ஆயர் Bakeni தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போர்னோ(Borno) மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை நிறுவனம், பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வீடுகளில் சிக்கியிருந்த 3600க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றும், தற்போது நீர் வடிய தொடங்கிவிட்டது என்றும் ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் போர்னோவின் தலைநகர் Maiduguriயில் Boko Haram என்னும் வடகிழக்கு நைஜீரிய இஸ்லாமிய தீவிரவாத குழுவினரின் தாக்குதலால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ACN கத்தோலிக்கத் தொண்டு நிறுவனம், தொடர்ந்து எல்லாவிதமான அவசர உதவிகளையும் வழங்கி வருவதுடன், தற்போது பெருவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், உணவு, நலவாழ்வு, உறைவிடம் ஆகிவற்றை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள Maiduguriயில் வாழும் மக்களுக்காக தொடர்ந்து ஜெப உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், இந்த இக்கட்டான சூழலிலும் அன்னை மரியா அவர்களோடு இருக்கிறார் என்றும், இந்த அனுபவத்திலிருந்து மாட்சியுடன் வெளியே வருவோம் என்றும் நம்பிக்கையை வெளியிட்டார் ஆயர் Dashe Doeme.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்