எளிய அடையாளங்கள் எளிய அடையாளங்கள்  (ANSA)

விடை தேடும் வினாக்கள் - இத்தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?

பரிசேயர்களுக்கு தாங்கள்தான் பெரியவர்கள், தங்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை என்ற கர்வம் இருந்தது. தங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் எனக்கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்புள்ளங்களே,

பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்; வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.

அவர் பெருமூச்சுவிட்டு, "இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார் (மாற்கு 8:12).

அடையாளம் ஒன்றை யூதர்கள் இயேசுவிடம் எதிர்பார்த்தார்கள். அது, அவர்தான் மெசியா என்பதை உறுதிசெய்யும் அடையாளம்.

அவர்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டது என்பதை உறுதிபடக் கூறிய இயேசு, அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி மறு கரைக்குச் சென்றார், என மாற்கு நற்செய்தியில் தொடர்ந்து வாசிக்கிறோம். இந்த தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்? என்ற கேள்வி குறித்து இன்றைய நம் நிகழ்ச்சியில் நோக்குவோம்.

இயேசு ஏற்கெனவே நிறைய அற்புதங்களைச் செய்திருந்தார். ஆனால், வேத அறிஞர்களுக்கும் பரிசேயர்களுக்கும் அது போதுமானதாக இருக்கவில்லை. அவர் அற்புதங்கள் செய்வதை அவர்கள் நேரில் பார்க்கவில்லையென்று வைத்துக்கொண்டாலும், அதற்கெல்லாம் கண்கண்ட சாட்சிகள் பலர் இருந்தார்கள். இருப்பினும் நம்பாது அடையாளம் ஒன்று கேட்ட யூதத் தலைவர்களிடம் இயேசு, “இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது” என்கிறார் மத்தேயு நற்செய்தியில் (மத் 12:39). இயேசு பிற்பாடு உயிர்த்தெழுந்தபோது, இந்த ‘யோனாவின் அடையாளத்தை’ யூதத் தலைவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள். அவர்கள் மனம் திருந்தி, தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அதற்கும் காரணம் இருந்தது. பரிசேயர்களுக்கு தாங்கள்தான் பெரியவர்கள், தங்களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை என்ற கர்வம் இருந்தது. அவர்கள் தங்களை ஆபிரகாமின் பிள்ளைகள் எனக்கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

பசியாயிருந்ததால் இயேசுவின் சீடர் கதிர்களைக் கொய்து தின்னதை ஓய்வு நாளில் செய்யக்கூடாத செயல் என குற்றஞ்சாட்டியவர்கள், ஒய்வு நாளில் குணமாக்கியதையே குற்றம் என்றவர்கள், பேய்களின் தலைவனைக் கொண்டு பேய் ஓட்டுவதாக இயேசுவையே குற்றஞ்சாட்டியவர்கள், பதில் தெளிவாகத் தெரிந்திருந்தும் இயேசுவை சிக்க வைப்பதற்காக கேள்வி கேட்டவர்கள், தங்கள் சுமைகளை பிறர் தோள்மேல் சுமத்துபவர்கள், விருந்துகளிலும் ஆலயங்களிலும் முதல் இடத்தை விரும்புபவர்கள், பொது இடங்களில் செபம் செய்வதாகக் காட்டிக்கொள்பவர்கள், குருட்டு வழிகாட்டிகளாயிருந்து கொசுவை வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குபவர்கள், நியாயமாகக் கேள்வி கேட்டவர்களைக்கூட தேவாலயத்திற்கு வெளியே தள்ளிவிடுபவர்கள், இறைவார்த்தையைவிட தங்கள் பாரம்பரியத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர்கள் என பரிசேயர்களுக்கு இத்தனைப் பின்னணி இருக்கும்போது, புதிதாக ஓர் அடையாளத்தைக் காட்டினால் அவர்கள் மனம் திரும்பிவிடுவார்களா?. அப்படியெனில் இதுவரை இயேசு செய்த புதுமைகள் குறித்து அவர்களுக்குத் தெரியாதா?.

பரிசெயர்கள் குறித்து முற்றிலும் அறிந்திருந்த இயேசு, இயற்கைக்கு மாறான எந்த அரிய பெரிய அடையாளமும் கொடுத்து யாரையும் கவர்ச்சியால் கவர விரும்பவில்லை. எனவே எந்த அடையாளமும் கொடுக்கப்படமாட்டாது என்று உறுதிபடச் சொல்லிவிட்டார்.

இயேசு வாழ்ந்த காலத்தை நாம் கொஞ்சம் உற்று நோக்கினோமென்றால், இயேசுவை சுற்றியிருந்தவர்கள், சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் உட்பட, அவரைப்பற்றி தெரிந்து வைத்திருந்தார்களேயொழிய, அவரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காணலாம். ஒருவரைப்பற்றி நாம் பலவிடயங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும், அவரின் தனித்தன்மையை அடையாளம் கண்டுகொண்டு ஏற்கிறோமா என்பது முக்கியத்துவம் நிறைந்தது. ஒருவரைப்பற்றி எல்லாம் தெரியுமென நாம் எண்ணிக்கொண்டு, அவரைக் குறித்த முற்சார்பு எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொள்வதைப்போல், இயேசுவின் காலத்தில் அவரது ஊர்மக்களும், பரிசேயர்களும் 30 ஆண்டுகளாக தங்களுக்குத் தெரிந்த இயேசுவைப்பற்றி மேலோட்டமாக தெரிந்திருந்தார்களேயொழிய, அவர் யார் என்பதை அவர்கள் புரிந்துவைத்திருக்கவில்லை.

தொடர் பழக்கவழக்கங்கள் தரும் சுகத்திற்கும், முற்சார்பு எண்ணங்களின் ஆதிக்கத்திற்கும் முதலிடம் கொடுக்கும்போது, புதியவனவற்றை ஏற்பதற்கு திறந்தமனம் கொண்டிருப்பது சிரமமாகின்றது என்பதை பரிசேயர்களிலும் நாம் காண்கிறோம். நம்மிலும் இது பலவேளைகளில் உண்மையாகிறது. பலவேளைகளில், மாற்றத்தைக் கொணரும் முயற்சிகளுக்கு நாம் தயங்குவதால், பழைய முற்சார்பு எண்ணங்களிலேயே தொடர ஆவல் கொள்வதும் இடம்பெறுகிறது.

இயேசு தரும் புதியவைகளுக்கும், அவை தரும் ஆச்சரியங்களுக்கும் நாம் முன்வரவில்லையென்றால், கடவுளுடனான நம் உறவு சோர்வுற்றதாய் மடிந்துவிடும் ஆபத்து உள்ளது. ஏனெனில் இயேசு தரவிரும்பும் அடையாளத்தை நாம் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். இயேசுவை பரிசேயர் ஏற்றுக்கொள்ளாததற்கு இருக்கும் முக்கிய காரணங்களுள் ஒன்று, இறைவன் மனுவுரு எடுத்ததை, குறிப்பாக, இறைவனை ஒரு மனித உடலுக்குள் குறுக்க முடியுமென்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததேயாகும். மற்றும் அவர்கள் எதிர்பார்த்திருந்தது, இவ்வுலகில் விடுதலையைத் தரும் ஒரு மன்னனை. உரோம் ஆட்சியாளர்கள் யூதர்களை அடக்கி ஆட்சிபுரிந்த அக்காலத்தில், மன்னராக மெசியா வந்து தங்களை விடுவிப்பார் என  மக்கள் நம்பினார்கள்.  யூதர்கள் மெசியாவின் வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்த காலம் அது. மெசியாவாகிய இயேசு வந்தார், ஆனால் பரிசேயர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவரை அடையாளம் கண்டுகொள்ள தங்களுக்கென ஓர் அடையாளம் கேட்டனர். ஆனால் இயேசு பிறந்த காலத்திலிருந்தே, விசுவாசமுடையவர்கள் அவரை எளிதாகக் கண்டு கொண்டனர். இடையர்கள் முதல் மூன்று ஞானிகள் வரை செய்தி அறிந்தவுடன் விசுவாசம் கொண்டனர். செய்தி கேட்டதுமே இடையர் விரைந்தனர், விண்மீன் எழக்கண்டதுமே ஞானிகள் புறப்பட்டுவிட்டனர். யூதர்கள் அனைவரும் மெசியாவின் வருகைக்காக எதிர்நோக்கி கொண்டிருந்தாலும், இயேசு பாலனை ஒரு யூத குழந்தையாய் கண்டாலும், அவரை ஏற்றுக்கொண்டவர்கள் மிகச் சிலரே, அதாவது, தெய்வக் குழந்தையாய் அடையாளம் கண்டுகொண்டவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவிலேயே இருந்தனர். முதலில் இடையர்கள், ஞானிகள் என இருந்தாலும், எந்தவித அடையாளமும், வானதூதரின் நேரடி அறிவித்தலும் இன்றி இரண்டு பேர் மட்டுமே குழந்தை இயேசுவை மெசியாவாக அறிந்துக்கொண்டது மட்டுமன்றி வெளிப்படுத்தவும் செய்தனர். “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று திருச்சட்டத்தில் எழுதியுள்ளதற்கு ஏற்ப குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க எருசலேம் கோவிலுக்கு கொண்டுவந்தபோது, அங்குதான் சிமியோனும், அன்னா என்னும் இறைவாக்கினரும் இயேசு கிறிஸ்து தான் மெசியா என அறிந்துகொண்டு அவரை புகழ்ந்து பாடினர். அதுமட்டுமல்ல, எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப் பற்றிப் பேசினர் எனவும் வாசிக்கிறோம்.

எருசலேம் கோவிலில் காத்திருந்த சிமியோனும் அன்னாவும் மெசியாவைக் கண்டுகொண்டனர். அந்த குழந்தை தான் மெசியா என அறிந்துகொண்டனர். தேவனை அறிந்து கொள்ளுவது மிகவும் முக்கியம். இங்கு அடையாளங்கள் இல்லை, ஆனால் கண்டுகொள்தல் இருந்தது. இத்தகைய ஒரு நிலைதான் நம்மிலும் உருவாக வேண்டும் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! (எபேசியர்:1:17) என வேண்டுகிறார் புனித பவுல்.

இன்றும் பல கோடி மக்களுக்கு இயேசு ஓர் அந்நியராகவேத் தெரிகிறார். அப்படி ஒருவர் வாழ்ந்ததாக அவர்கள் நம்பலாம், ஆனால் தங்களுடைய வாழ்க்கைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்கள். வேறு சிலரோ, இயேசுவை பின்பற்றுவதாக சொல்லிக் கொள்ளும் கிறிஸ்தவர்களுடைய செயல்களைக் கண்டு, இயேசுவையே புறக்கணிக்கிறார்கள். ‘நாகசாகியில் அணுகுண்டு போட்டவர்கள் கிறிஸ்தவர்களாகிய இவர்கள்தான்’ என ஜப்பானியர் சிலர் எண்ணுவதுண்டு. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காண்பிக்கவும், எதிரியை அன்புகூரவும் சொல்லிக் கொடுத்த இயேசுவைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எப்படி இவ்வளவு பெரிய மனிதகுல நாசத்தை மனமொத்து செய்திருக்க முடியும் என எண்ணுவதில் வியப்பில்லை.

மனிதன் தன் வாழ்வில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டேயிருக்கிறான். ஒன்றைக் குறித்த தேடலில் நாம் திறந்த மனதுடன் இருந்தால்தான் உண்மையை கண்டுகொள்ள முடியும். பெரும்பாலான தேடல்களில் நமக்கு சார்பான ஒரு முடிவைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம், அப்படி அது அமையவில்லையெனில் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இதைத்தான் பரிசேயர்களும் செய்தனர். எத்தனையோ அடையாளங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஓர் உதாரணத்திற்கு நத்தனியேல் இயேசுவுடன் மேற்கொண்ட முதல் சந்திப்பைக் கொஞ்சம் அசை போடுவோம். "நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ?" என்ற சந்தேகத்தோடு இருந்த அவர், பின்னர்தான் இயேசுவை சந்தித்து, அவர் யாரென அறிந்துகொள்கின்றார். முதல் சந்திப்பிலேயே, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” (யோவா 1: 45-46) என்று அறிக்கையிடுகிறார். அவரால் அடையாளம் எதுவுமின்றி இயேசுவை கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், ஆயிரம் அடையாளங்கள் முன்னிருந்தும் பரிசேயர்களால் இயேசுவை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கடவுளைக் காண்பதற்குத் தேவையான உண்மையான, உள்ளார்ந்த கண்ணோட்டம் இல்லையெனில், அவர் குடியிருக்கும் இல்லத்திலும் அவரைக் காண இயலாமல் போகலாம்.

கடவுள் மனுவுருவானவர், ஏழ்மையானவர், கனிவானவர், நம் வாழ்வில் அவர் நுழைகிறார் என்பதை உணராமல் நாம் செயல்படும்போது, அவர் நம்மைக் கடந்து செல்வதை நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. நம் தினசரி வாழ்வில் எளிமையுடன் மறைந்திருந்து செயலாற்றும் இறைவனை வரவேற்க திறந்த உள்ளம் கொண்டவர்களாக, நம் முற்சார்பு எண்ணங்களிலிருந்து விடுதலைப் பெற்றவர்களாக செயல்பட வேண்டிய தேவை உள்ளது. ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள் (ஏசாயா 55:6), என்கிறார் இறைவாக்கினர் எசாயா.

நம் தேடுதல் உண்மையெனில், வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இறைவனை அடையாளம் கண்டுகொள்வோம். ஏனெனில், அன்றாட செயல்களை அற்புதமாக வழங்குவதன் வழியாக அடையாளங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் இறைமகன் இயேசு. இன்றும், வியத்தகு நிகழ்ச்சிகள் வழியாக அல்ல, அரிய பெரிய காரியங்கள் வழியாக அல்ல, மாறாக, ஒவ்வொரு சாதாரண நிகழ்வுகளிலும் அடையாளங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். மலரும் மொட்டும், விடியும் பொழுதும், பிறக்கும் குழந்தையும், இறக்கும் மனிதனும், உண்மைக்குச் சான்று பகர்வதும், அருளுரையும் ஆலோசனை வழங்குவதும் அடையாளங்களே. அத்தகைய அடையாளங்களை நாம் அடையாளம் காண்பதன் வழியாகத்தான் நம்மிடையே இறைவனின் பிரசன்னத்தையும் நாம் அடையாளம் காண முடியும்.

நம்பிக்கைக்கு அளிக்கப்படும் நன்கொடையாக, விசுவாசத்திற்கு தரப்படும் விருதாக, புதுமையை நோக்க வேண்டிய மனிதர்கள், அதனை ஒரு விசுவாசத்திற்கான முன் நிபந்தனையாக நோக்கத் தொடங்கினால் அது தவறே. பரிசேயர்கள் அடையாளம் கேட்டதும் இப்படித்தான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2024, 16:04