தடம் தந்த தகைமை : எஸ்தர் அரசி ஆதல்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்த் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார். அவ்வமயம் மன்னருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த பணியாளர் அவரை நோக்கிக் கூறியது: ‘அரசராகிய உமக்கென அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்களைத் தேடுவார்களாக! அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து மாநிலங்களிலும் அழகும் இளமையும் கொண்ட கன்னிப் பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டும்படி மேற்பார்வையாளர்களை மன்னர் நியமிப்பாராக! சூசான் அரண்மணையின் அந்தப்புரத்தில் மன்னரின் அண்ணகரான ஏகாயிடம் அப்பெண்களை ஒப்படைத்து, தூய்மைப்படுத்தும் பொருள்களை அவர்களுக்குத் தர ஆவன செய்வாராக! மன்னரின் கண்களில் இனியவளாய்க் காணப்படுகின்ற இளம் பெண்ணே வஸ்திக்குப் பதிலாக அரசி ஆவாள்.’ இது மன்னருக்கு நலமெனப் பட்டதால் அவரும் அவ்வாறே செய்தார்.
மன்னரின் சொற்களும் ஆணையும் அறிவிக்கப்பட்டபொழுது, இளம் பெண்கள் பலர் சூசான் அரண்மனைக்குள் ஒன்று சேர்க்கப்பட்டு ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்தரும் அவ்வாறே அரண்மனையில் அந்தப்புரப் பொறுப்பேற்றிருந்த ஏகாயிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிகாயிலின் புதல்வியும், மொர்தக்காயின் வளர்ப்பு மகளுமாகிய எஸ்தர் மன்னருக்கு முன்னே செல்லும் முறை வந்தபொழுது, பெண்களைக் கண்காணிக்கும் அரச அண்ணகர் ஏகாயின் அறிவுரையைத் தவிர வேறெதையும் நாடாமல், காண்போர் அனைவரின் கண்களிலும் அவர் தயவு பெற்றிருந்தார். அகஸ்வேரின் ஆட்சியின் ஏழாம் ஆண்டில், பத்தாம் மாதமாகிய தேபேத்து மாதத்தில், அகஸ்வேரின் அரச மாளிகைக்குள் எஸ்தர் அழைத்துச் செல்லப்பட்டார். பெண்கள் அனைவரிலும் எஸ்தரையே மன்னர் மிகுதியாய் விரும்பினார். கன்னிப் பெண்கள் அனைவருள்ளும் அவரே மன்னரின் கண்களில் மிகுதியான தயவு பெற்றார். எனவே அவர் அவரது தலைமீது அரசியின் மகுடம் வைத்து, வஸ்திக்குப் பதிலாக அவரை அரசி ஆக்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்