இயேசுவின் திருவுருவம் இயேசுவின் திருவுருவம்  (©Viggo Rognes - stock.adobe.com)

தடம் தந்த தகைமை - அழியாத உணவுக்காக உழையுங்கள்

உணவைத் தேடியே நாளும் பொழுதும் உலகம் நகர்கிறது. அழிந்து போகும் உணவுக்கான தேடல் நியாயமென்றாலும் அழியா உணவைத் தேட வலியுறுத்துகின்றார் இயேசு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள், அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார் என்கிறார் இயேசு (யோவா 6:27).

உலகம் ஒவ்வொரு நாளையும் பலவிதமான எதிர்பார்ப்புகளோடு தொடங்குகிறது. நிறைவேறாக் குறைகளோடு நிறைவு செய்கிறது. மனித வாழ்வில் எவ்வளவு பெற்றாலும் உயிர் வாழ உணவு இல்லையேல் வாழ்வே இருண்டு போகிறது. அவ்வாறு உண்ணும் உணவில் ஒரு துளி விடம் சேர்ந்தால் மரணம். காலம் கடந்தால் பல கோளாறுகள், உண்ணவில்லையென்றால் கெட்டுப்போதல், சேமிப்புக் கிடங்கில் அழிவுகள், உபரி உணவு கழிவாக்கிக் கொட்டுதல் என உணவின் கதை தொடர்கிறது.

இந்தக் கதைகளைச் சுமக்கும் உணவைத் தேடியே நாளும் பொழுதும் உலகம் நகர்கிறது. அழிந்து போகும் உணவுக்கான தேடல் நியாயமென்றாலும் அழியா உணவைத் தேட வலியுறுத்துகின்றார் இயேசு. எது அழியா உணவு? உயிர் தரும் வார்த்தை, உள்ளம் தொடும்

உறவாடல்கள், வாழ்வளிக்கும் நேயச் செயல்கள், தேவைக்கேற்ற தானங்கள், நீதிக்கான நிலைப்பாடுகள், இறைவாழிட இயற்கைப் பேணல் போன்ற யாவும் அழியா உணவின் சிறுசிறு அடையாளங்கள். அவற்றோடு நாமும் அணி சேர்வோம். வாழ்வதற்காகவே உணவு, உணவுக்காக வாழ்வு இல்லை.

இறைவா! உம் வார்த்தையை உணவாக்கி, உயிரூட்டும் செயல்களாக்கி வாழ வள்ளன்மை தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2024, 13:26