குண்டுவெடிப்பு நிகழ்ந்த தூய செபஸ்தியார் கோவில் (கோப்புப் படம்) குண்டுவெடிப்பு நிகழ்ந்த தூய செபஸ்தியார் கோவில் (கோப்புப் படம்)  (Madusanka Siriwardana)

2019 குண்டு வெடிப்பு உண்மைகள் வெளியிடப்படுவது ஒரு முன்நிபந்தனை

2019ன் தாக்குதல் தொடர்பாக பல ஆண்டுகளாக நடத்தப்படும் விசாரணை குறித்தும், அரசியல் ஆதாயங்களுக்காக இது பயன்படுத்தப்படுவது குறித்தும் இலங்கை திருஅவை கவலை

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு  உயிர்ப்பு ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டுமென்று, இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம், திருஅவையால் நடத்தப்படும் CSR என்னும் சமூக மற்றும் மதங்களுக்கான மையம் வலியுறுத்தியுள்ளதாக யூக்கா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

விசாரணை குறித்த உண்மை தகவல்களை திருத்தி அமைத்தல், ஆதாரங்களை அழித்தல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தெரிவிக்கும் நபர்களைப் பழிவாங்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பரிந்துரைகளின் பட்டியல் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது CSR அமைப்பு.

பாகுபாடற்ற நீதிபதிகள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட, முழுமையான அதிகாரம் பெற்ற ஆணையம் ஒன்று தற்போது அவசியம்  என்று செப்டம்பர் 16 அன்று கூறிய CSRன் ஆய்வுக்குழு, இதுவரை  சேகரிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் பகிரங்கப்படுத்தவும், உண்மையை வெளிக்கொணர தீவிரமான விசாரணை நடத்தப்படவும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இஸ்லாமியக் குழுவான National Thowheed Jamathஐச் சேர்ந்த 9 தற்கொலைப் படையினர்  2019 ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறன்று, 3 தேவாலயங்கள் மற்றும் 3 உயர்தர விடுதிகளை குறிவைத்து தாக்கியதுடன், 37 வெளிநாட்டவர் உள்பட 279 பேரைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றிபெறும் 38 வேட்பாளர்களில் ஒருவர் தங்களுக்கு நீதி வழங்குவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும், தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங் அவர்களும் இத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதாகவும்  செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

அரசியல் ஆதாயங்களுக்காக இந்த தாக்குதலை  அடுத்தடுத்த அரசுகள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய கத்தோலிக்க  திருஅவை மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள், இத்தாக்குதல் தொடர்பாக பல ஆண்டுகளாக நடத்தப்படும் விசாரணை குறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் யூக்கா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

2019ன் குண்டுவெடிப்பு நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போதும் நீதி கிடைக்காமல் காலம் கடந்து வருவதாக கவலைத் தெரிவித்த குருநாகல் பொதுநிலை மறைப்பணியமைப்பு, நேர்மையான மனசாட்சியுடன், நாட்டிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கக்கூடிய அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தலைவரைத் தேர்ந்தெடுக்க மக்கள் தங்கள்  வாக்குகளை பயன்படுத்த வேண்டும்  என்றும்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட, கொழும்புவை சேர்ந்த சுரினி பெர்னாண்டோ என்பவர் உரைக்கையில், புதிய தலைவரை  பொறுப்பேற்க வைப்பதன் வழியாக, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு  நீதியை பெறுவது உங்கள் கடமை என்று நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையும், "இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது பற்றிய உண்மையை அரசு வெளிப்படுத்தும்வரை நீதிக்காகப் போராட உள்ளதாகவும் UCA செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மேலும், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டங்கள் செப்டம்பர்  18ஆம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்றும்  செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2024, 14:36