தடம் தந்த தகைமை - விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பரிசேயர் உம் வார்த்தையைக் கேட்டு மனவேதனை அடைந்தனர் என்பது உமக்குத் தெரியுமா? என சீடர்கள் கேட்க, இயேசுவோ, என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும் (மத் 15:12&13) என பதிலுரைத்தார்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரையாடும் பழக்கம் இயேசுவுக்குள் இல்லை. பரிசேயரின் உண்மைக்குப் புறம்பான, தங்கள் போதகத்திற்கு எதிரான வெளிவேடமிக்கச் செயல்முறைகளை இயேசு நேரடியாகச் சுட்டிக்காட்டினார். அத்தகு வாழ்க்கைப் பாதையினின்று வெளியேற வழிகாட்டினார். அவர்களோ உண்மை எனும் ஒளி நோக்கித்
திரும்பி, திருந்தி வரத் தயங்கினர். தங்கள் தவறுகளைச் சிறிதும் ஏற்காமல், தங்களையும், தங்கள் இனத்தையும் இயேசு காயப்படுத்தி களங்கப்படுத்தினார் எனப் பழித்துப் பேசினர்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே – நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே.
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே – அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே! என்ற ஒளவையாரின் மூதுரை பரிசேயரின் மனங்களுள் நுழையவில்லை. நல்ல மனநிலை இல்லாதவர்களால் நல்லவற்றைப் பார்ப்பதும், ஏற்பதும் எளிதன்று. பிறருக்கு நாம் வழங்கும் மிகப் பெரிய பரிசு, பாராட்டு.
இறைவா! எதனையும் நேர்நிலை உணர்வோடு சொல்லவும், செயல்படவும் மனவுறுதி தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்