ஊர்பி எத் ஓர்பி ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்) ஊர்பி எத் ஓர்பி ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் (கோப்புப்படம்)  

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – நிறைபேறுபலன்கள்

இந்த யூபிலி ஆண்டில் நாம் பல பக்தி முயற்சிகளையும் இறைஇரக்கச்செயல்களையும் செய்வதன் வழியாக கடவுள் தரும் இந்த நிறைபெறுபலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 என்ற தலைப்பின் கீழ், யூபிலி ஆண்டு குறித்த பல்வேறு கருத்துக்களை அறிந்துகொண்டு வரும் நாம், இந்த யூபிலி ஆண்டில் நாம் பெற்றுக்கொள்ள இருக்கும் நிறைபேறுபலன்கள் என்ன? அதனை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? என்பது பற்றி இன்றைய நம் நிகழ்வில் காணலாம். நமதாண்டவர் இறைவனின் இரக்கம் எல்லைகளற்றது என்பதை மீண்டும் மீண்டும் நாம் நமது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் வழியாகக் கண்டுணர்வதற்கு, யூபிலி ஆண்டும் இந்த யூபிலி ஆண்டில் நமக்கு கிடைக்கும் நிறைபெறுபலன்களும் உதவுகின்றன. எதிர்நோக்கின் திருப்பயணிகளாக கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நடைபோட வேண்டும் என்பதனையே இந்த யூபிலி ஆண்டானது நமக்கு வலியுறுத்துகின்றது.

இந்த யூபிலி ஆண்டில் நாம் பல பக்தி முயற்சிகளையும் இறைஇரக்கச்செயல்களையும் செய்வதன் வழியாக கடவுள் தரும் இந்த நிறைபெறுபலன்களை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக யூபிலி ஆண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பிக்கப்படும் திருத்தலங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்ளுதல், திருஅவையின் புனித இடங்களை தகுந்த பக்தி மற்றும் செப மனநிலையுடன் சந்தித்தல், பிறரன்புச்செயல்கள், தவ ஒறுத்தல்கள் போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளுதல் போன்ற மூன்றின் வழியாக நாம் நிறைபெறுபலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.    

உரோம் நகரிலுள்ள நான்கு பெரிய பெருங்கோவில்களான தூய பேதுரு பெருங்கோவில், மேரி மேஜர் பெருங்கோவில், தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவில், புனித பவுல் பெருங்கோவில் ஆகியனவும், இயேசுவின் கல்லறை இருக்கும் எருசலேமில் உள்ள பேராலயம், இயேசு பிறந்த இடமாகிய பெதல்கேமில் உள்ள பேராலயம், நாசரேத்தூரில் உள்ள மங்களவார்த்தை செப பேராலயம், மற்றும் தலத்திருஅவைகளில் ஆயர்களால் குறிக்கப்பட்டுள்ள புனித தலங்கள் ஆகியனவையும் யூபிலி கொண்டாட்டங்கள் இடம்பெறும் முக்கிய தலங்களாக, குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த புண்ணிய தலங்களில் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றபின் திருப்பலி, திருவழிபாட்டுச் சடங்குகள், சிலுவைப்பாதை, செபமாலை போன்ற பக்தி முயற்சிகளில் பங்குபெறுபவர்களுக்கு இந்த பரிபூரண பலன் கிட்டும்.

புனித இடங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்து பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு, இந்த யூபிலி ஆண்டில் நிறைபேறுபலன்களைப் பெறலாம். தேவையில் இருப்பவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உதவுதல், ஏழைகளுக்கு உதவுதல், மத மற்றும் பிறரன்பு அமைப்புகளுக்கு ஆதரவளித்தல், தன்னார்வப் பணியாளர்களாகச் சேவையாற்றுதல் போன்றவை இந்த யூபிலி ஆண்டில் நாம் கட்டாயம் செய்ய வலியுறுத்தப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2024, 11:37