மக்கள் யாரும் போரை விரும்பவில்லை - லெபனோன் பேராயர்
ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்
லெபனோனின் மக்கள் யாரும் போரை விரும்பவில்லை என்றும், ஆயிரக்கணக்கான லெபனோன் மக்கள் இஸ்ரேலிய எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களை விட்டு வெளியேறி, பெய்ரூட் அல்லது வடக்கே உள்ள பிற நகரங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் மாரனைட் பேராயர் சார்பெல் அப்துல்லா.
லெபனோனில் உள்ள ஹெஸ்பொல்லாவின் (Hezbollah) தொலைத்தொடர்புக்கான கட்டிடத்தை குறிவைத்துத் தாக்கிய இஸ்ரயேலின் குண்டுவெண்டிப்புகளைத் தொடர்ந்து, அந்நாட்டில் நிலவி வரும் சூழல் குறித்து இவ்வாறு கூறியுள்ளார் லெபனோனின் டயர் உயர் மறைமாவட்ட மாரனைட் பேராயர் சார்பெல் அப்துல்லா.
2023 ஆம் ஆண்டு, அக்டோபர் 8ஆம் தேதி முதலிலிருந்தே, இஸ்ரேலிய தற்காப்புப் படைகளுக்கும் (IDF) ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே ஏற்படும் அன்றாட மோதல்கள் ஒரு கடுமையான வாடிக்கையாகிவிட்டது என்றும், இச்சூழலில், செப்டம்பர் 17, மற்றும் செப்டம்பர் 18 அன்று ஹெஸ்பொல்லாவின் தொலைத்தொடர்பு கட்டிடத்தின் மீதான இஸ்ரயேலின் தாக்குதல்கள் கவலை மற்றும் உறுதியற்ற நிலையை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார் பேராயர் அப்துல்லா.
இஸ்ரேல் தங்கள் படையின் ஒரு பகுதியினரை லெபனோனின் வடக்கு நிலப்பரப்பில், மீண்டும் நிலைநிறுத்துவதற்கான இஸ்ரேலின் அறிவிப்பானது, இஸ்ரேலுக்கும் லெபனோனுக்கும் இடையே ஒரு பெரிய அளவிலான போரின் அச்சத்தை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார் பேராயர் அப்துல்லா.
போரினையும், இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரமடைவதையும் மக்கள் யாரும் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள பேராயர் அப்துல்லா அவர்கள், இந்த கடினமான சூழலிலும் அப்பகுதியில் தங்கியிருக்கும் கிறிஸ்தவ மக்கள் இறைவேண்டலில் நிலைத்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தெற்கு லெபனோனில் உள்ள ஹெஸ்பொல்லா பகுதிகள் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது IDF புதிய வான்வழித் தாக்குதல்களையும் அறிவித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
2006ஆம் ஆண்டு ஏற்பட்ட போரின் வலுவான தாக்கங்கள் இன்னும் தங்கள் மனதையும் இதயத்தையும் விட்டு நீங்காத நிலையில், மீண்டும் ஒரு போரினை தங்களால் எதிர்கொள்ள இயலாது என்று கூறியுள்ள லெபனோன் நாட்டின் பிரதமர் நஜிப் மிகாட்டி அவர்கள், லெபனோன் நாட்டிற்கு எதிரான இஸ்ரேலின் தொழில்நுட்பப் போரினை, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு நிறுத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்