கர்தினால் பிட்சபாலா கர்தினால் பிட்சபாலா 

கர்தினால் பிட்சபாலா: மத்தியக்கிழக்குப் பகுதி அமைதி இயலக்கூடியதே

கல்வி நிலையங்களில் விதைக்கப்படும் கலாச்சாரக் கனிகளின் வழி அமைதியைப் பெற்று நம்பிக்கையை சிறிது சிறிதாக கட்டியெழுப்ப முடியும் என்கிறார் கர்தினால் பிட்சபாலா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மத்தியக்கிழக்குப் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தம் வெகு தூரத்தில் இருப்பதாகத் தெரிந்தாலும், அமைதி என்பது இயலக்கூடியதே என எடுத்துரைத்தார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் பியெர்பத்திஸ்தா பிட்சபாலா.

உரோம் நகரில் “அமைதி இயலக்கூடியதா? மத்தியக்கிழக்கின் நெருக்கடி" என்ற தலைப்பில் இடம்பெற்ற அமைதி குறித்த வட்டமேசை மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் பிட்சபாலா அவர்கள், அமைதி என்பது இயலக்கூடியதே, ஏனெனில் கல்வி நிலையங்களில் விதைக்கப்படும் கலாச்சாரக் கனிகளின் வழி இதனைப் பெற்று நம்பிக்கையை சிறிது சிறிதாக கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

கர்தினால் பிட்சபாலாவுடன் இத்தாலியின் பொருளாதார அமைச்சர் ஜன்கார்லோ ஜியோர்ஜெத்தி மற்றும் பல தலைவர்கள் கலந்துகொண்ட இந்த வட்ட மேசை மாநாட்டிற்கு ஒருங்கமைப்பாளராகச் செயல்பட்ட வத்திக்கான் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப்பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னெல்லி அவர்கள், கடந்த ஆண்டில் உலகில் ஆயுத தயாரிப்புக்கு என மட்டும் இரண்டு டிரில்லியன் டாலர் செலவளிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இன்று மத்தியகிழக்குப் பகுதியின் அழிவுகள் பழைய ஏற்பாட்டு யோபுவை நினைவுபடுத்தி நிற்கின்றன என்ற அமைச்சர் ஜியோர்ஜெத்தி அவர்கள், முடிவற்றதாகத் தெரியும் இந்த மோதல்களை முடிவுக்குக் கொணர, நல்மனம் கொண்ட அனைத்து மக்களும் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

காசா பகுதியில் வெறுப்புணர்வுகள் அதிகரித்துவருவது குறித்தும், தொடர்தாக்குதல்கள் எவ்வகையிலும் அமைதி முயற்சிகளுக்கு உதவுவதில்லை எனவும், இஸ்ராயேலுக்கும் இலெபனானுக்கும் இடையே மோதல்கள் துவங்கும் ஆபத்து இருப்பது குறித்தும் கர்தினால் பிட்சபாலா அவர்கள் தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 September 2024, 15:27