நீதியின் கடவுள் நீதியின் கடவுள்   (https://bibleinsideout.com/wp-content/uploads/2024/05/Bible-Verses-about-Judgment3.jpg)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 58-1, நீதியின் தேவன் நித்தமும் இருக்கிறார்!

நமக்கு அநீதி இழைக்கப்பட்டு நீதி வழங்கப்படாத போதெல்லாம் மனம் தளர்ந்துவிடாமல் தாவீதைப்போல் இறைவனிடம் சரணடைவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 58-1, நீதியின் தேவன் நித்தமும் இருக்கிறார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நம்பகத்தன்மையை நமதாக்குவோம்!' என்ற தலைப்பில் 57-வது திருப்பாடலில் 7 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இந்நாளில் 58 -வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடர்வோம். 'பொல்லாரின் தண்டிப்புக்காக வேண்டல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 11 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. மன்னர் சவுல் தாவீதின்மீது காழ்ப்புணர்வுகொண்டு அவரைக் கொல்லத் தேடியது நாம் அறிந்ததே. மன்னர் சவுல் தனது ஆயுத பலத்தால் தாவீதைப் பிடித்துக் கைதுசெய்வதற்குப் போராளிகளை அனுப்புவதற்கு முன்பு, சட்டத்தின் வழியாக அவருக்கு எதிராக ஒரு செயல்முறையை உருவாக்கினார். அதன்படி, தாவீது தன் தரப்பு வாதத்தை எடுத்து வைக்காத வகையில் கண்டனம் செய்யப்பட்டார், மேலும் உயர் அமைப்பால் அல்லது உச்சநிலை அமைப்பால் (நமது நட்டு உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் போல) தாவீது ஒரு துரோகியாக அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் நீதித்துறை நீதிமன்றம் தாவீதை ‘ஒரு சட்டவிரோத ஓநாய்’ அல்லது ‘ஓநாய்களின் தலைவன்’ என்று அறிவித்தது. இதன்படி, தாவீதைப் பார்க்கும் எந்த மனிதனும் அவரைக் கொல்லலாம் (கண்டதும் சுட உத்தரவு போன்று), யாராலும் அவரைப் பாதுகாக்க முடியாது. சபை பெரியவர்கள், சவுலின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த மசோதாவை நிறைவேற்றிய வேளை, தாவீது இந்தத் திருப்பாடலை எழுதியதாக விவிலியப் பேராசிரியர்கள் கருதுகின்றனர். தனக்குப் பதிலாகவோ அல்லது தனது வாரிசுக்கு எதிராகவோ தாவீது ஆட்சி அரியணையில் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, சவுல் தனக்கு உதவிய தாவீதுக்கு எத்தனைவிதமான கொடியத்திட்டங்களைத் தீட்டுகிறார் பாருங்கள்! ஆனாலும் மனம் தளராத தாவீது தனது கற்பாறையும் கேடயமுமான கடவுள்மீது நம்பிக்கைகொண்டு தன்னைக் காத்துக்கொள்ள விழைகிறார்..

இந்தப் பின்னணியில் இப்போது இத்திருப்பாடலின் முதல் 5 இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். பக்திநிறைந்த உள்ளமுடன் இப்போது இறைவார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். “ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு உண்மையில் நீதியானதா? மாந்தர்க்கு நேர்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றீரா? இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்; நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள். பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்; பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர். அவர்களது நச்சுத்தன்மை நாகத்தின் நஞ்சு போன்றது; செவிட்டு விரியன் தன் காதை அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச் செவிடாக்கிக் கொள்கின்றனர். பாம்பாட்டியின் மகுடியோசை அவ்விரியனின் காதில் விழாது; அவன் திறமையுடன் ஊதினாலும் அதற்குக் கேளாது” (வச. 1-5)

முதலாவதாக, "ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு உண்மையில் நீதியானதா? மாந்தர்க்கு நேர்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றீரா? இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்; நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள்" என்று கூறுகின்றார் தாவீது. அவர் இப்படிக் கூறுவதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்பதை சற்றுமுன் தொடக்க உரையில் கேட்டோம். ஆக, பணக்காரருக்கு ஒரு சட்டம் ஏழைக்கொரு சட்டம் என்பது அன்றுமட்டுமல்ல, அது இன்றும் தொடர்வதைப் பார்க்கின்றோம்.  ஏழைக்கொரு நீதி பணக்காரனுக்கொரு நீதி, பணம் கொடுப்பவனுக்கொரு நீதி பணம் கொடுக்க மறுப்பவனுக்கொரு நீதி, அடாவடித்தனம் செய்பவனுக்கொரு நீதி அப்பாவிக்கொரு நீதி என்று இன்றைய நம் இந்தியாவில் பல்வேறு வகையான சட்டங்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று காலங்காலமாக கூறப்பட்டு வந்தாலும், அது இன்றுவரை ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது.  

எல்லாருக்கும் சட்டம் ஒன்றே என்பதை அமல்படுத்துவதில் சிக்கல் எழுகிறது. காரணம், பணக்காரர்கள் கைதேர்ந்த வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டத்தின் நுண்ணிய ஓட்டை வழியாக தப்பிவிட முடியும், இல்லையெனில், வழக்கை ஆண்டு கணக்காக இழுத்தடிக்கலாம். அல்லது, அரசியல் செல்வாக்கு இருந்தால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடலாம். ரூ.9,000 கோடி கடனை செலுத்தாமல் இலண்டனுக்கு தப்பிச்சென்றார் விஜய் மல்லையா.  இவரைப்போலவே வங்கிகளில் பல கோடி ரூபாய்களை கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் இந்தியத் தொழிலதிபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விஜய் மல்லையாவை தொடர்ந்து நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளனர். இதுவரை 31 பேர் இவ்வாறு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அடுத்தபடியாக, காவல்துறையினரை உரிய வகையில் கவனித்துக் கொண்டாலே போதும் சட்டம் தங்களை நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பணக்காரர்கள் நினைக்கின்றனர். ஆனால் ஏழைகளுக்கு அத்தகைய கொடுப்பினை இல்லை. ஆக, சுரண்டிப்பிழைக்கும் பணக்காரர்களையும் தொழிலதிபர்களையும் விட்டுவிட்டு அப்பாவி ஏழைமக்களையே சட்டங்கள் தண்டிப்பதைப் பார்க்கும்போது ஒரு தன்னந்தனியாளாக தாவீது எத்தனை துயரங்களையும் மன உளைச்சல்களையும் சந்தித்திருப்பார் என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.

“வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி. மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே, நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! என்றும், நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா? தர்மத் தாயின் பிள்ளைகள் தாயின் கண்ணை மறைப்பதா? உண்மைதன்னை ஊமையாக்கித் தலைகுனிய வைப்பதா?" என்று கவிஞர் கண்ணதாசன் எழுதினார். ஒரு தனிமனிதனை வீழ்த்துவதற்கு, சட்டத்தை எப்படியெல்லாம் தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார் மன்னர் சவுல் என்பதைப் பார்க்கும்போது அந்நிகழ்வு நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. அதனால்தான் சட்டம் யார்பக்கம் செயல்படுகிறது என்பதை ஆய்வுசெய்து பார்க்க, சவுல் உள்ளிட்ட சட்டப் பாதுகாவலர்களுக்கு அழைப்புவிடுக்கும் தாவீது, "நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு உடந்தையாய் இருக்கின்றீர்கள்" என்றும் உண்மையை உள்ளவாறு துணிவுடன் எடுத்துரைக்கின்றார்.

இரண்டாவதாக, "பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்; பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்" என்று குறிப்பிடுகின்றார் தாவீது. இங்கே கருவிலிருந்தே பொல்லார் நெறிதவறி செல்கின்றனர் என்று அவர் கூறுவது நம்மைச் சற்று சிந்திக்க வைக்கிறது. அதாவது, தீயவர் ஒருவர் எப்படி கருவிலேயே நெறிதவறியவராக இருக்க முடியும் என்பதுதான். மேலும் பொல்லார் எந்தளவுக்குத் தீயகுணம் கொண்டவர்கள் என்பதையும், அவர்களின் நடவடிக்கை எந்தளவுக்குக் கொடூரமானதாக இருக்கும் என்பதையும் எடுத்துக்காட்டவே அவர் இப்படிக் கூறுவதாக நாம் உணர்ந்துகொள்வோம். அத்துடன், ஒரு தந்தை மிகவும் கொடியவராக, பொல்லாராக, தீயவராக இருக்கும் பட்சத்தில் அக்குணங்கள் அவருடைய பிள்ளைகளுக்கும் அவர்தம் தாயின் கருவிலேயே தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது என்ற அர்த்தத்திலும் இதனை நாம் புரிந்துகொள்வோம். அதைத் தொடர்ந்து, "அவர்களது நச்சுத்தன்மை நாகத்தின் நஞ்சு போன்றது” என்று தனது எதிரிகளின் குணங்களை நல்ல பாம்பிற்கு ஒப்பிட்டுக் கூறுகின்றார் தாவீது.  நாக பாம்பு என்பது, இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். இவை ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் கொடிய பாம்புகளாக கருதப்படும் நான்கு வகையான நச்சுப்பாம்புகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன என்பதைப் பார்க்கின்றோம். இதைவிட ஆபத்தானவை இராஜ நாகம். இவை   தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். உலகிலுள்ள நச்சுப்பாம்புகளில் இதுவே மிக நீளமானது. ஏறத்தாழ 6.7 மீட்டர் (22 அடி) வரை வளரக் கூடியது. பொதுவாக, அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் வீரியம் ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் மனித இறப்பு நேரிடும் வீதம் 75 விழுக்காடு வரை இருக்கிறது. அப்படியென்றால், நமது தாவீது அரசர் குறிப்பிடும் மனிதர்களின் நச்சுத்தன்மை எப்படி வீரியமிக்கதாக இருந்திருக்கும் பாருங்கள்!

இறுதியாக, "செவிட்டு விரியன் தன் காதை அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச் செவிடாக்கிக் கொள்கின்றனர். பாம்பாட்டியின் மகுடியோசை அவ்விரியனின் காதில் விழாது; அவன் திறமையுடன் ஊதினாலும் அதற்குக் கேளாது” என்று கூறி, விரியன் பாம்பையும் எதிரிகளுடைய குணங்களுடன் ஒப்பிடுகிறார் தாவீது. கட்டு விரியன், கண்ணாடி விரியன், செவிட்டு விரியன் என்று விரியன் பாம்புகள் மூன்றுவகை உள்ளன. அனைத்து வகை விரியன் பாம்புகளும் கொடிய நஞ்சுள்ளவை ஆகும். பாம்பு பிடிப்பவர் அவற்றைப் பிடிப்பதற்கு மகுடியை விநோதமாய் ஊதியதும், சில பாம்புகள் பாம்பாட்டியின் முன் ஓடிவந்து மகுடி இசைக்குத் தகுந்த மாதிரி இரசித்து ஆடும். அவற்றை அவர் சுலபமாகப் பிடித்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வார். இது முதல் வகை. இரண்டாவது வகை பாம்புகள் மகுடி ஊதுவதை இரசிக்காது எரிச்சலுடன் பாம்பாட்டியை எதிர்த்துத் தாக்கும். அவற்றை அவர் எப்படியாவதுப் பிடித்து கொன்று விடுவார். மூன்றாவது வகை ஒன்று உண்டு. பாம்பாட்டி எவ்வளவுதான் மகுடி ஊதினாலும் அதன் ஓசை அவ்விரியனின் காதில் விழாது அதைப் பிடித்து அடித்தால், காற்றடைத்த டியூப் போல அது துள்ளிக் குதிக்கும். அதை ‘செவிட்டு விரியன்’ என்பார்கள். அதை தீயிலிட்டுதான் எரிக்க வேண்டும். இங்கே தன்னை ஒழிக்கத் திட்டமிட்டும் மன்னர் சவுலையும் சட்டத்தின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிகொள்வோரையும் முதலில் நாகபாம்பிற்கும் பின்னர் செவிட்டு விரியனுக்கும் ஒப்பிடுகிறார். நஞ்சுள்ள நாக பாம்பைக் கண்டால்கூட தப்பித்துவிடலாம். ஆனால் பாம்பாட்டி எவ்வளவுதான் மகுடி ஊதினாலும் அதன் ஓசையை காதில் வாங்கிக்கொள்ளாத செவிட்டு விரியனைப் போல, தன் தரப்பு நியாயத்தை எவ்வளவுதான் எடுத்துக்கூறினாலும் அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளவும் மாட்டார்கள், தனக்கு நீதி வழங்கவும் மாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே தாவீது இவ்வாறு உரைக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்வோம்

ஆகவே, நமக்கு அநீதி இழைக்கப்பட்டு நீதி வழங்கப்படாத போதெல்லாம் மனம் தளர்ந்துவிடாமல் தாவீதைப்போல் இறைவனிடம் சரணடைவோம். நீதியின் தேவன் நித்தமும் நம்முடன் இருக்கின்றார், அவர் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 September 2024, 13:57