பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு : இல்லற வாழ்வின் மையம் "ஈருடல் ஓருயிர்"
செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
(வாசகங்கள் I.தொநூ 2:18-24 II. எபி 2:9-11 III. மாற் 10:2-16)
இன்று பொதுக் காலத்தின் 27-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கணவன்-மனைவிக்கு இடையே இருக்கவேண்டிய புனிதமான அன்பைப் போற்றுகிறது. பொதுவாக, கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால்தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். மேலும் தம்பதிகளுக்குள் சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதுதான் அவர்களுக்கிடையே இடைவெளி உண்டாகிறது. இப்போது ஒரு நிகழ்வுடன் நமது மறையுரைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு சந்தேகம் ஒன்று எழுந்தது. ‘இவ்வளவு நாள் எனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன். என்னுடைய கணவனுக்கு என்னுடனான வாழ்க்கை அலுப்புத் தட்டி இருக்குமோ’ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை, தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதைப் பார்க்க ஆர்வம் கொண்டாள் அவள். எனவே, அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சிறிய காகிதத்தில் குறிப்பொன்றை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள். கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில், "உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகிச் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம்" என்று எழுதி இருந்தது. கணவன் அந்தக் குறிப்பை படித்துவிட்டு அதன் பின்புறத்தில் ஏதோ எழுதிவிட்டு தன் கைபேசியை எடுத்து பேசினான். "கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு" என்று சொல்லிக்கொண்டே கதவைத் தாளிட்டுவிட்டு வெளியேறினான். உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தாள். அவர் தன்னைத் தேடவில்லை, தன்னைக் குறித்துக் கொஞ்சம் கூட வருத்தப்படவும் இல்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் தான் எழுதியிருந்த அந்தக் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அதனை எடுத்துப் படித்தாள். அதில், "ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்குப் பசிக்குது, கடைக்கு போய் எனக்குப் பிடித்த காய்கறி வாங்கி வாறேன். வழக்கம்போல எனக்குப் பிடிச்சமாதிரி நல்லா சுவையா சமைச்சுக் கொடு. உனக்கு ஏதாவது வேண்டும் என்றால் எனக்கு போன் பண்ணு, வாங்கிட்டு வாறேன். சரியா.... இந்த உலகத்தில உனையவிட வேறு எதையும் நாம் பெரிசா நேசிக்கல.. எனக்கு எல்லாமே நீதான் செல்லம். என் அன்பு முத்தங்கள்!" என்று எழுதி இருந்தான். இதைக் கண்டதும் மனைவிக்கு ஒரே ஆனந்தம். தனது கணவனின் உண்மையான அன்பில் அப்படியே பரவசப்பட்டுப்போனாள் அவள். கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே நன்கு பராமரித்தால் மட்டுமே அது எப்போதும் செழிப்போடும் உயிர்ப்போடும் நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க அன்பும், ஆதரவும், கரிசனையும், அக்கறையும், உழைப்பும், தேவைப்படுகிறது. இதுகுறித்து அவர்கள் சிந்தித்தாலே போதும் அவர்கள் இருவரும் எப்போதும் ஈருடல் ஓருயிராக வாழலாம்.
இதன் பின்னணியில் இன்றைய நற்செய்தி வாசகத்திற்கு வருவோம். இது இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதியில் மண விலக்குக் குறித்த பரிசேயர்களின் கேள்வியும், இரண்டாம் பகுதியில் இதுகுறித்து சீடர்களுக்கு விளக்கமளித்தலும் இடம்பெறுகிறது. இப்போது முதல் பகுதியை வாசிப்போம். பரிசேயர் அவரை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
மண விலக்கு குறித்த படிப்பினையை மாற்கு நற்செய்தியாளர் ஏன் இப்பகுதியில் வைத்தார் என்பது விவிலிய அறிஞர்களுக்கே ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. இயேசு எருசலேம் செல்லும் வழியில், பரிசேயர்கள் இந்தக் கேள்வியை எழுப்புவதன் வழியாக எருசலேமில் அவர் சந்திக்கவிருக்கின்ற எதிர்ப்புகளுக்கு ஒரு முன்னடையாளமாக இது இருக்கலாம், அல்லது, சீடத்துவ வாழ்வு என்பது, இல்லற வாழ்விலும் பல்வேறு தியாகங்கள் தேவைப்படுகின்றன என்பதைத் தனது சீடர்களை அறிந்துகொள்ளச் செய்யும் ஒரு முயற்சியாகவும் கூட இது இருக்கலாம்.
இந்தச் சிந்தனைகளின் அடிப்படையில் பார்க்கும்போதும் யூதச் சமுதாயத்திலும் ஆணாதிப்போக்குகள் அதிகம் தலைதூக்கியிருந்தன. பரிசேயர் இயேசுவிடம் எழும்பும் கேள்வியைக் கொண்டே இதனை நாம் புரிந்துகொள்ளலாம். மணவிலக்கு மற்றும் மறுமணம் குறித்து இணைச்சட்ட நூலில் பார்க்கும்போது பரிசேயரின் மனநிலை என்னவென்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது (காண்க. இச 24:1-5). இந்தப் பகுதியின் அடிப்படையில்தான் மணவிலக்கு குறித்த சிந்தனைகள் யூத மக்களிடையே வெகுவாகப் பரவியிருந்தது. ஆணாதிக்கச் சமுதாயத்தின் பாதிப்பை இங்கே நாம் பார்க்கின்றோம். இதைக் கடின உள்ளம் எனக் கண்டித்து மோசே ஏற்றுக்கொண்டதைத்தான், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்" என்று இயேசு இங்கே எடுத்துக்காட்டுகிறார். மேலும், இறைவாக்கினர் மலாக்கியாவின் நூலில், ஆண்டவரதுப் பலிபீடத்தை அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புவதாகக் கூறும் அவர், அதற்கான காரணத்தையும் எடுத்துக்காட்டுகிறார். அப்பகுதிக்கு இப்போது செவிசாய்ப்போம். "உனக்கும் உன் மனைவிக்கும் உன் இளமையில் நிகழ்ந்த திருமணத்திற்கு ஆண்டவர் சாட்சியாய் இருந்தார். அப்படியிருக்க, உன் துணைவியும் உடன்படிக்கையால் உன் மனைவியுமான அவளுக்கு நீ நம்பிக்கைத் துரோகம் செய்தாயே. உங்களை ஒன்றாக இணைத்தவர் அவரே, வாழ்வின் ஆவியும் அவரே. அவர் நாடுவது தம் மக்களாக வாழும் குழுந்தைகளை அன்றோ? ஆதலால், எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருப்பதில் கவனமாய் இருப்பானாக. 'ஏனெனில், “மணமுறிவை நான் வெறுக்கிறேன்” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர். “மணமுறிவு செய்கிறவன் வன்முறையை மேலாடை கொண்டு மறைக்கிறான்” என்கிறார் படைகளின் ஆண்டவர். ஆகையால் எச்சரிக்கையாயிருங்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள்" (காண்க மலாக்கி 2:14-16). மலாக்கியாவின் இந்தப் வார்த்தைகளை யூதர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், சட்டத்தின் வலிமை இறைவாக்கையும் தாண்டியிருந்ததால் மணவிலக்கு யூத வாழ்வில் நிலைத்துவிட்டது என்பதையும் புரிந்துகொள்வோம்.
ஆனால் அதேவேளையில், பெண்களைக் குறித்து யூதர்களின் கடினமனப்போக்கை எடுத்துக்காட்டும் இயேசு, ஆண்-பெண் உறவுக்கு அடித்தளமாக எடுத்துக்காட்டப்படும் யூதச் சட்டத்தின் முதல் நூலாகக் கருதப்படும் தொடக்க நூலிலிருந்து, படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்று அவர்களின் அறிவிற்கு எட்டுமாறு சுட்டிக்காட்டி கணவன்-மனைவிக்கு இடையே இருக்கவேண்டிய பிணைப்பை எடுத்துரைக்கின்றார். இதன் அடிப்படையில்தான், இன்றைய இரண்டாம் வாசகத்தில் "இயேசு துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது. கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை" என்று கூறுகின்றார் புனித பவுலடியார்.
மண விலக்கு குறித்து சிந்திக்கும்போது நமது சமுதாயத்தின் பெண்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட முந்தைய நிலையையும் தற்போதையை நிலையையும் நினைவு கூறலாம். இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட, பெண்களுக்கு எதிராக நிகழும் ஆணாதிக்கப் போக்குகளைப் பார்க்கும்போது நம் மனம் மிகுந்த கவலைக்குள்ளாகிறது. அப்படியென்றால், பண்டைய காலம் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் யூகித்துப் பார்த்துக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறவேண்டும் என்ற கொடிய பழக்கத்தை இதற்கொரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். பொதுவாக, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் ஆணாதிக்கப்போக்குகள் எல்லா மதங்களிலும் நிலவுகிறது என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும். அவ்வாறே பெண்களை பெயர்சொல்லி அழைக்கும் விதமும் கூட அருவறுக்கத்தக்கதாகதான் இருக்கின்றது என்ற உண்மையை நம்மால் மறக்க முடியுமா? இன்றும்கூட நம் சமுதாயத்தில் கைம்பெண்களுக்கு எதிராக எத்தனை அடக்குமுறைகள், பாலியல் வன்மங்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதை நாம் அறிவோம். அதுவும் அந்தக் காலத்துக் கிராமத்து கூட்டங்களில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அநியாயத் தீர்ப்புகள் எத்தனை எத்தனை! 'அவன் ஆம்பள... என்னவேண்டுமானாலும் செய்வான்... நீ பொம்பள.. அதனால இப்படித்தான் இருக்கணும்' என்ற வார்த்தைகளை எனது கிராமத்தில் நான் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஆனால், இன்று நிலைமை ஓரளவு மாறியிருக்கிறது என்றாலும், இந்நிலை முற்றிலும் மாற வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கின்றது.
"திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது. முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல, மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது" என்று தனது திருமடலில் பெண்களுக்கு அறிவுறுத்தும் புனித பேதுரு, "அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்" என்று ஆண்களுக்கு இருக்கவேண்டிய கடமைகளையும் எடுத்துக்காட்டுகிறார். இல்லற வாழ்வு என்பது கணவன் 50 விழுக்காடும் மனைவி 50 விழுக்காடும் பங்களிப்பு செய்ய வேண்டும். இது ஒருவர் மட்டுமே சுமக்கவேண்டிய வாழ்வு அல்ல, மாறாக இருவரும் இணைந்து சுமக்க வேண்டிய வாழ்வு. இன்பம் வரும்போதும் துன்பம் வரும்போதும் ஒன்றித்துப் பயணிக்க வேண்டும். இது எப்படி சாத்தியமாகும் என்றால் கடவுள்மீதும் ஒருவருக்கொருவர்மீதும் கொள்ளும் உண்மையான அன்பால் மட்டுமே சாத்தியம். இந்த அன்பு மட்டுமே மற்ற எல்லா பண்புகளுக்கும் ஊற்றுக்கண்ணாக அமைகிறது. அதாவது, அன்பிலிருந்து பிரமாணிக்கம், நம்பிக்கை, நன்னடத்தை, பகிர்தல், கரிசனை, அக்கறை, பொறுமை, நிதானம், ஏற்றுக்கொள்ளல், விட்டுக்கொடுத்தல் ஆகிய நற்குணங்கள் ஊற்றெடுக்கின்றன. அதேவேளையில், இப்பண்புகள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கோலோச்சும்போது, மணவிலக்கிற்கு அடிப்படைக் காரணங்களாக அமையும் பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, தன்னலம், எரிச்சல், பிரிவினை, பிளவு, சண்டைச்சரவு, சந்தேகம் ஆகியவற்றை அவைகள் அழித்தொழித்துவிடுகின்றன. இத்தகைய நற்பண்புகளைத்தான் திருக்குடும்பத்தின் தலைவர்களாகிய யோசேப்பும் அன்னை மரியாவும் கொண்டிருந்தனர். ஆகவே, குடும்ப உறவில் அனைத்துத் தம்பதியினரும் 'ஈருடல் ஓருயிர்' என்ற உன்னத நிலையில் வாழ்வதற்கான அருளை இந்நாளில் இறைவனிடம் கேட்டுச் செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்