பிலிப்பீன்ஸ் பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடும் மக்கள் பிலிப்பீன்ஸ் பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடும் மக்கள்   (AFP or licensors)

பழங்குடிஇன மக்களின் வாழ்வு மேம்பட உழைக்கும் கத்தோலிக்க சமூகம்

பழங்குடியின மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் மாதம் முழுவதும் தேசிய பழங்குடியின மக்களின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டதில் பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க சமூகமானது பல்வேறு நிகழ்வுகள், கூட்டங்கள், மற்றும் உள்ளூர் கொண்டாட்டங்கள் வழியாக பழங்குடியினர் வாழ்வு மேம்பட செயல்பட்டு வருகின்றனர் என்றும், நிலங்கள் மற்றும் கனிம வளங்கள் சுரண்டப்படுவது பற்றிய எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது சட்ட உரிமைகள் மற்றும் இயற்கை வள மையம். (LRC)

அக்டோபர் 31 வியாழன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள LRC அமைப்பானது மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் முதல் தரம் வாய்ந்த நிக்கல் என்னும் கனிமவளத்தை அதிகமாகக் கொண்ட பிலிப்பீன்ஸ் நாடு, உலக நாடுகளுக்கு அதனை வழங்குகின்ற, விநியோகிக்கின்ற நாடாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நிலஅபகரிப்பினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் நோக்கில் பிலிப்பீன்ஸில் உள்ள கத்தோலிக்க சமூகமானது அவர்களது அடிப்படை உரிமைகளும் மாண்பும் மதித்து போற்றப்படும் வகையில் சிறந்த பல முயற்சிகளை எடுத்து வருகின்றது என்றும் LRC தெரிவித்துள்ளது.

1997 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமைகள் சட்டத்தின் (IPRA) படி, பழங்குடியினர் "மூதாதையர் டொமைன் உரிமைச் சான்றிதழை" பெற்றால், அவர்களின் மூதாதையர் நிலங்களுக்கு சொத்துரிமை உண்டு என்றும், இந்த சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு நிலத்தைப் பாதிக்கும் சுரங்கம் போன்ற திட்டங்களை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ அதிகாரம் உண்டு என்றும் கத்தோலிக்க சமூகத்தார் வலியுறுத்தி வருகின்றனர்.  

உலகளாவிய அரங்கில் மூலப்பொருட்களின் முக்கிய விநியோகராக, பிலிப்பீன்ஸ் பன்னாட்டு அரங்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஏற்றமும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மணிலா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட சுரங்க சலுகைகள் அனைத்தும், பழங்குடியின மக்களுக்கு சிரமத்தையும், இடம்பெயர்வையும், வாழ்விட அழிவையும் ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுள்ளது LRC.

பழங்குடியின மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கப்பட்டு வருவதாகவும், 2023 ஆம் ஆண்டின் "பழங்குடி மக்களின் மாநில முகவரி" அறிக்கையின்படி, நிலம் மற்றும் சுற்றுச்சூழல் மோதல்கள் இந்த ஓராண்டில் 6 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

70,000 க்கும் மேற்பட்ட ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டு "பழங்குடிஇன மக்களின் வாழ்வில் நேரடி தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர்களின் வாழ்க்கை உண்மையில் ஆபத்தில் உள்ளது என்றும் LRC குறிப்பிட்டுள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மிண்டோரோ தீவுப்பகுதிகளில் 45,000க்கும் மேற்பட்ட பழங்குடியினர் நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மலைப்பாங்கான கார்டில்லெரா பகுதியில் பிலிப்பீன்ஸ் அரசாங்கம் 99 நீர்மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துரைத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 October 2024, 11:59