சவுல் மன்னரின் கோபம் சவுல் மன்னரின் கோபம் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-4, ஆன்ம பசியைப் போக்குவோம்!

ஆதிகாரம், ஆணவம், பழிதீர்த்தல் ஆகிய இவ்வுலகிற்கான பசியை தீர்த்துக்கொள்ள முயலாமல், ஆண்டவர்மீதான ஆன்மிகப் பசியைத் தீர்த்துக்கொள்ள முயல்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-4. ஆன்ம பசி

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘தாழ்மையில் தலைநிமிர்வோம்!’ என்ற தலைப்பில் 59-வது திருப்பாடலில் 11 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். நமது தியானச் சிந்தனையின் இறுதியில், நாமும் நமது எதிரிகளுக்கும் தீயவர்களுக்கும் அடிபணிந்துவிடாமல் உயிருள்ள கடவுளுக்கு என்றும் உண்மையுள்ள ஊழியர்களாகப் பணியாற்ற இறையருள்வேண்டி மன்றாடினோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 14 முதல் 17 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது இறையமைதியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். “அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் இரைதேடி அலைகின்றனர்; வயிறு நிறையாவிடில், முறுமுறுக்கின்றனர். நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு!” (வச 14-17)

நாம் தியானிக்கும் இறைவசனங்களில் முதலில், “அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின், நாய்களைப்போல குரைத்துக் கொண்டு நகரினுள் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் இரைதேடி அலைகின்றனர்; வயிறு நிறையாவிடில், முறுமுறுக்கின்றனர்" என்ற தாவீதின் வார்த்தைகள் குறித்து சிந்திப்போம். இந்த வார்த்தைகள் முன்னரே, அதாவது, இத்திருப்பாடலின் 6-வது இறைவசனத்திலேயே கூறப்பட்டுவிட்டது. இங்கே அதே வார்த்தையை மீண்டும் தாவீது கூறுகின்றார் என்றால், அந்தளவுக்குத் தாவீது மன்னர் சவுலாலும் அவரது படைவீரர்களாலும் துயருற்றுருக்கின்றார் என்பது திண்ணமாகத் தெரிகிறது. மேலும்,  "வயிறு நிறையாவிடில், முறுமுறுக்கின்றனர்" என்று தனது எதிரிகளைக் குறித்து குறிப்பிடுகின்றார் தாவீது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? பாசியாய் இருக்கும் ஒருவர் எப்படி நடந்துகொள்வார் என்பது நமக்குத் தெரியும். அவர் பசியைப் போக்கிக்கொள்ள எல்லா வழிகளிலும் முயன்று பார்ப்பார். அப்படி இல்லையென்றால், அவர் முறுமுறுத்துக்கொண்டே இருப்பார் அல்லது திட்டிக்கொண்டே இருப்பார். ஒருவேளை இது உச்சக்கட்டம் அடையும்போது அது அவரை சமூகக் குற்றங்களைப் புரியும் அளவிற்குக் கூட மாற்றிவிடலாம். எடுத்துக்காட்டாக, வசதிபடைத்த ஒருவர் நன்றாக சாப்பிடக்கூடியவர். அவருக்கு நேரத்திற்கு நேரம் அதாவது, பசிக்கும்போதெல்லாம் தேவையான அளவிற்கு உணவளிக்க வேண்டும். இல்லையேல் அவர் எப்படி நடந்துகொள்ளவார் என்பது நமக்குத் தெரியும் அல்லவா? அதுபோலத்தான் தாவீது குறிப்பிடும் நபர்களும். ஆக, பசி என்பது எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் அது ஆளையும் சூழலையும் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் பசி என்பது இருப்பவனையும் இல்லாதவனையும் சமநிலைப்படுத்திவிடுகிறது. ஆனால் இருப்பவர் உடனே தனது வயிற்றை நிரப்பிக்கொள்கிறார். இல்லாதவர் அதற்கான தேடலில் ஈடுபடுகிறார். ஆனால் இங்கே, "வயிறு நிறையாவிடில், முறுமுறுக்கின்றனர்" என்று தாவீது கூறுவது மன்னர் சவுலின் அதிகார மற்றும் ஆணவப் பசியையும், அவரது படைவீரர்களின் பழிதீர்க்கும் பசியையும் எடுத்துக்காட்டுகிறது. அதிலும் குறிப்பாக, ஆணவப் பசி என்பது மிகவும் ஆபத்தானது. வயிற்றுப் பசியைக் கூட ஒருவிதத்தில் தீர்த்துவிடலாம், ஆனால் ஆணவப் பசியை ஒருபோதும் தீர்க்கவே முடியாது. வயிற்றுப் பசி தன்னை மட்டுமே பாதிக்கும். ஆனால் அதிகாரப் பசி என்பது தன்னையும் தாண்டி எல்லோரையும், ஏன், அவர் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும் மிகுந்த பாதிப்பிற்குள்ளாக்கும் என்பது திண்ணம். இஸ்ரயேல், உக்ரைன் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த அதிகாரப் பசிதான். நமது பாரதப் பிரதமர் மோடியை பெரிதும் பாதித்திருப்பதும் இந்த அதிகாரப் பசிதான் என்பதை பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் நாள்தோறும் சமூகச் சிந்தனையாளர்களும், சமூகச் செயல்பாட்டாளர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த பொதுத் தேர்தலின்போது அவர் நடந்துகொண்டவிதம், பேசிய வெறுப்புப் பேச்சுக்கள் அனைத்தையும் கண்டு நாம் அதிர்ந்துபோனோம். உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், ஏறக்குறைய அதிகாரப் பசிக்கு அடிமைப்பட்டவர்கள் அனைவருமே இத்தகைய அணுமுறைகளைத்தான் கையாண்டிருக்கின்றனர் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

இப்போது இத்திருப்பாடலின் இறுதிப் பகுதிக்குச் செல்வதற்கு முன்பு, மன்னர் சவுலின் மனநிலையை இன்னும் சற்று புரிந்துகொள்ள விழைவோம். அவர் ஏன் இந்தத் தரம்தாழ்ந்த நிலைக்குத் தன்னையே ஆட்படுத்திக்கொண்டார், எது அவரது ஞானக் கண்களை மறைத்தது, தாவீது என்ற தனி ஒருவனுக்காக அவர் ஏன் தன்னையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்குத் தள்ளப்பட்டார், கடவுளால் விரும்பித் தேர்வுசெய்துகொள்ளப்பட்ட சவுல், ஏன் அவராலேயே வெறுத்தொதுக்கப்பட்டார், என்ற கேள்விகளுக்கு விடை தேடினோம் என்றால், ஆண்டவரின்மீது கொண்டிருக்க வேண்டிய பசியை விட, ஆட்சி அதிகாரத்தின்மீதும் ஆயுதங்கள்மீதும் அவர் கொண்டிருந்த கோரப் பசிதான் முக்கிய காரணம் என்பதை நாம் அறிய வருகின்றோம். குறிப்பாக, தன்னை இஸ்ரேல் மக்களின் அரசராக ஆட்சியில் அமரவைத்த கடவுளை நம்புவதைவிட ஆயுதங்களை நம்பி செயல்பட்டார். கடவுளை மட்டுமே தனது ஒப்பற்ற செல்வமாக கொள்வதைக் காட்டிலும் போரிட்ட இடங்களில் எல்லாம் கொள்ளைப் பொருள்களைத் தனது செல்வங்களாகக் கவர்ந்துகொண்டார் சவுல். ஆக, இவைகள்தாம் அவரது உயிருக்கு உலைவைத்தன.

பேராசை பெருநட்டம் என்று கூறுவார்களே நம் முன்னோர்கள், அதுதான் இது. தூய ஆவியின் அருளைப் பெற்று இறைவாக்குரைக்கும் அளவிற்குப் பாராட்டப்பட்ட மன்னர் சவுல் (காண்க. 1 சாமு 10:9-13), அடிக்கடி தீய ஆவியால் அலைக்கழிக்கப்பட்டு பெயர், புகழ், அதிகாரம், ஆணவம், பேராசை, கொலைவெறி, பழிவாங்கும் உணர்வு ஆகிவற்றால் உந்தப்பட்டு கடவுளுக்கு எதிரானவராக மாறி தன் வாழ்வைத் தானே அழித்துக்கொண்டார். அடிப்படையில் பார்த்தோமென்றால், சவுலும் ஒரு வீரமான, விவேகமான, துடிப்பான, இறைபக்தி நிறைந்த மனிதராகத்தான் இருந்தார். அதாவது, தொடக்க காலங்களில் கடவுள் அவரை விரும்பக் கூடிய அளவிற்கு அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார் என்றுதான் கூற வேண்டும். ஆனால் கடவுளின் பெருந்துணையுடன் அரச பதவியில் அமர்ந்த அவர், மேற்கண்ட துர்குணங்களால் அந்தப் பதவியிலிருந்து அகற்றப்படும் அளவிற்கு மாறிப்போனார். தாவீதின் எதிரிகளில் ஒருவராக மிகவும் மோசமாக சித்தரிக்கப்படும் அளவிற்கு மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்டார். மறுபுறம் தாவீதைப் பார்க்கும்போது, அவர் சவுலுக்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தார். எந்தவொரு நிலையிலும் அவர் கடவுளைவிட்டு விலகவில்லை. தனது அரசப் பதைவியைவிட ஆண்டவரே மிகவும் முக்கியம் எனக் கருதினார். தான் ஓர் அரசர் என்பதைக் காட்டிலும் கடவுளே என்றென்றைக்கும் இப்பூவுலகின் அரசர் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். ஆயுதங்களைவிட ஆண்டவரையே நம்பியிருந்தார். அதனால்தான் மன்னர் சவுலாலும் அவரது படைவீரார்களாலும் ஏற்பட்ட அனைதுவிதமான நெருக்கடிகளிலும் ஆண்டவர் அவருக்குத் துணையிருந்து வெற்றியளித்தார்.

ஞானி ஒருவரிடம், “என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்றான் ஓர் அரசன். “உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?” என்று ஞானி கேட்டார். “என் நாட்டிற்கு அந்நியர் பகை இல்லை, கள்வர் பயம் இல்லை. நான் அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி வழங்கப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான். “அப்படியானால் ஒன்று செய்.  உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு” என்றார் ஞானி. “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன். “நீ என்ன செய்வாய்” என்றார் ஞானி. “நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்” என்றான் அரசன். “எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.  உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆட்சி செய்து வா.  நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளைப் பார்க்கிறேன்” என்றார்.  “சரி” என்றான் மன்னன். ஓராண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்த மன்னன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். “அது கிடக்கட்டும்” என்ற ஞானி “நீ இப்போது எப்படி இருக்கிறாய்” என்று கேட்டார். “‘நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றான் மன்னன். “முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா…..???” என்று கேட்டார் ஞானி. “இல்லை” என்றான் மன்னன். “அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்…..??? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்…….???” கேட்டார் ஞானி. விழித்தான் அரசன். ஞானி சொன்னார். “அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது என்னுயதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும்போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்” வாழ்வின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் என்ன ஓர் அருமையான கதை பாருங்கள்!

இறுதியாக, "நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு!” என்று கூறி இந்தத் திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. அவரிடம் ஆட்சி அதிகாரப் பசியோ, ஆணவப் பசியோ காணப்படவில்லை. அவரிடம் காணப்பட்டதெல்லாம் ஒரே ஒரு பசிதான். அது ஆண்டவர்மீதான அன்பு பசி மட்டுமே. அதனால்தான், “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்” (காண்க. திபா 34:8) என்று கூறி அவருடைய நிலைவாழ்வு தரும் அன்பை அள்ளிப் பருகி சுவைக்க நம்மையும் அழைக்கின்றார் தாவீது. ஆகவே, ஆதிகாரம், ஆணவம், பழிதீர்த்தல் ஆகிய இவ்வுலகிற்கான பசியைத் தீர்த்துக்கொள்ள முயலாமல், ஆண்டவர்மீதான ஆன்மிகப் பசியைத் தீர்த்துக்கொள்ள முயல்வோம். அதற்கான இறையருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2024, 07:39