ஆதிகால நற்செய்தி அறிவிப்பு ஆதிகால நற்செய்தி அறிவிப்பு  (© Victoria and Albert Museum )

விடை தேடும் வினாக்கள் – சீசருக்கா? கடவுளுக்கா?

பதில்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அடுத்தவரை இடித்துக் காட்டுவதற்காக கேள்விகள் கேட்கும்போது, அது ஆணவத்தை வளர்க்கும் வாய்ப்பாக மாறும் ஆபத்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, மத்தேயு நற்செய்தியில் காணப்படும் இரு நிகழ்வுகள் குறித்து, அதாவது இயேசு வெவ்வேறு காலங்களில் கேட்ட ஒரே கருத்தைக்கொண்ட இரு கேள்விகள் குறித்து இன்று நோக்குவோம்.

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா? என்று கேட்டனர். அவர், “ஆம், செலுத்துகிறார்” என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, “சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?” என்று கேட்டார். “மற்றவரிடமிருந்துதான்” என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், “அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல. ஆயினும், நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே, நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து” என்றார் (மத் 17:24-27).

இயேசு வரி செலுத்தியதைப் பார்க்கும் நாம், இதற்குப்பின் பரிசேயர்கள், இயேசு வரி செலுத்துகிறார் என்பதை அறிந்திருந்தும்,  இயேசுவை சோதிக்கும் விதமாக உரோமையருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா என்ற கேள்வியை மறைமுகமாகக் கேட்டு அவரைச் சிக்க வைக்கப் பார்க்கின்றனர்.

இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கும் நோக்கத்துடன் பரிசேயர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் சீடரை அவரிடம் அனுப்பி  "போதகரே, நீர் உண்மையானவர். எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை கற்பிப்பவர். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என்று எங்களுக்குச் சொல்லும்'' என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம், "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள், "சீசருடையவை'' என்றார்கள். அதற்கு அவர், "ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று அவர்களிடம் கூறினார் (மத்தேயு 22:15-21).

கேள்விகள் கேட்பது அறிவை வளர்க்க நாம் பயன்படுத்தும் சிறந்த கருவி. இயற்பியலில் சிறந்து விளங்கிய இஸிடோர் இஸாக் ராபி (Isidor Isaac Rabi) அவர்கள், நொபெல் விருது பெற்றபோது வழங்கிய ஒரு பேட்டியில், தான் அறிவியலில் ஆர்வம் கொண்டதற்கு, தன் தாயே முக்கியக் காரணம் என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் இஸிடோர் பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும், அவருடைய தாய் அவரிடம் அன்று பள்ளியில் அவர் என்ன படித்தார், எப்படி நடந்து கொண்டார் என்றெல்லாம் கேட்காமல், “இன்று நீ பள்ளியில் நல்லதொரு கேள்வியைக் கேட்டாயா?” என்று மட்டும் கேட்பாராம். நல்ல கேள்வியைக் கேட்பதற்கு தன் தாய் ஒவ்வொரு நாளும் தன்னை ஊக்கப்படுத்தியதே, தன்னை, அறிவியலில் ஆர்வம் கொள்ளவைத்தது என்று இஸிடோர் அவர்கள் சொன்னார்.

நமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள கேட்கப்படும் கேள்விகள், அறிவியலாளர் இஸிடோரைப்போல், நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறது என்பதை இடித்துக் காட்டுவதற்காக கேள்விகள் கேட்கும்போது, நம் கேள்வி-பதில் பரிமாற்றம், அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஆணவத்தை வளர்க்கும் வாய்ப்பாக மாறும்.

'சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர்? - இதுதான் அவர்கள் இயேசுவிடம் வைக்கும் கேள்வி. இந்தக் கேள்விக்கு 'ஆம்' என்று சொன்னால், 'இயேசு மெசியா அல்ல!' என்று இவர்கள் சொல்லத் தொடங்குவார்கள். 'இல்லை' என்று சொன்னால், 'உரோமைக்கு எதிரான தீவிரவாதி!' என்று இவர்கள் பட்டம் கட்டுவர். பழிதீர்ப்பர். இப்படி எந்தப் பதில் சொன்னாலும் அவர் அகப்பட்டு விடுவார். எளிமையாய்த் தோன்றினாலும், மிகவும் சிக்கலான கேள்வி அது. பதில் ஆம் அல்லது இல்லை என வரும். எப்படி வந்தாலும் இயேசு மாட்டுவார் என்பது தான் அவர்களுடைய எண்ணம். இயேசுவை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்பது எதிரிகளின் திட்டமாக இருந்தது. அதற்காக பல சிக்கலான கேள்விகளை இயேசுவின் முன்னால் வைப்பார்கள். அவர் அந்த கேள்விகளை மிகவும் ஞானத்துடன் எதிர்கொள்வார். கேள்விக்குக் கேள்வியையே பல நேரங்களில் பதிலாய்க் கொடுப்பார். பதில்களை விட கூர்மையாய் அவரது கேள்விகள் அமைந்து விடுவதுண்டு.

இயேசு வார்த்தைகளைக் கொண்டு மனிதர்களை அளவிடுபவர் அல்ல, மனிதரின் சிந்தனையை அறிந்து அவர்களை எடை போடுபவர். கேட்பவர்களின் நோக்கம் அவருக்குப் புரிந்தது. எனவே அவர் அவர்களைப் பார்த்து வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?  என்றார்.

'போதகரே' என்று தன்னை அழைத்தவர்களை 'வெளிவேடக்காரர்களே' என அழைக்கிறார். 'ஆசிரியரே' என அழைத்தால் 'மாணவர்களே' என்றுதானே அழைக்க வேண்டும்? இயேசுவின் இந்த ஒரு வார்த்தையே அவர்களுக்குப் பதிலாக அமைந்துவிடுகிறது. உள்ளே ஒன்றும் வெளியே மற்றொன்றுமாக வாழ்வதுதான் வெளிவேடம்.

மேலும், 'ஏன் என்னை சோதிக்கிறீர்கள்?' என்று கேட்டு, பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை 'சோதித்ததை' சுட்டிக்காட்ட விவிலியம் பயன்படுத்தும் அதே வார்த்தையே இங்கும் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். அதாவது, அன்று தங்கள் முரட்டுத்தனத்தாலும், பிடிவாத குணத்தாலும் மக்கள் கடவுளைச் சோதித்தனர். இன்று அதே வேலையை பரிசேயர்களும், ஏரோதியர்களும் செய்கின்றனர்.

இயேசு தனது பதிலில், வரி செலுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரம் எதை யாருக்கு செலுத்தவேண்டும் என்பதை ஒரு ஆன்மிக பாடமாய் அங்கே விளக்கினார்.

உலகின் சட்டதிட்டங்கள் சீசருக்குரியவை. வரி வசூலிப்பது மன்னனின் வழக்கம். மன்னனுடைய சட்டங்களின் படி நடப்பது மக்களின் கடமை. அதை எதையுமே இயேசு வேண்டாம் என மறுதலிக்கவில்லை. அதே நேரம், எதை சீசருக்குக் கொடுக்க வேண்டும், எதை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும் என்கிறார்.

இயேசுவின் காலத்தில் இஸ்ரயேல் மற்றும் யூதா உரோமையர்களின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஆக, கோயிலும் உரோமையர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. உரோமையர்கள் மட்டுமே கோவில் வரியிலிருந்து விலக்கு பெற்றிருந்தனர். மேலும், யூதர்களின் ஆலயமாகவே அது இருந்தாலும் அவர்கள் அந்த ஆலயத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால், இயேசு இங்கே ஒரு மௌனப் புரட்சி செய்கின்றார். தன் பதிலின் வழியாக,  ஏரோதியர்களின் சூழ்ச்சியை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல், சீசரும் கடவுளின் ஆளுகைகளுக்குள் உட்பட்டவர், அவரும் கடவுளுக்கு முதலில் அடிபணிந்து நடக்கட்டும் என்று மறைமுகமாகச் சொல்கிறார்.

ஒரு நாட்டுக்குடிமகன் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய வரியை செலுத்துவது அவன் அந்த நாட்டுக் குடிமகன் என்பதைப் பெருமையோடு நிலை நிறுத்தும் விடயம். ஆனால் நமது அரசாங்கங்கள் அதை கழுதைமேல் சுமத்திய பொதியாக மாற்றிவிடுகின்றன. காரணம், நாம் வியர்வை சிந்திக் கட்டும் நம் வரிப்பணம் பதவியில் உள்ளவர்களின் வெட்டி சவால்களுக்கும், வீண் பயணங்களுக்கும் செலவழிக்கப்படுகிறது. ஆனால் அதற்காக ஒருவர் வரிப்பணம் செலுத்த முடியாது என கொடி பிடிக்க முடியுமா என்ன? கண்டிப்பாக முடியாது. அரசாங்கம் நம் பணத்தை எவ்வாறு செலவிடுகிறது என்பதில் நாம் உடன்படவில்லை என்றாலும், கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கடமை வரிகளை செலுத்தி அதை நேர்மையாக செய்ய வேண்டும். வரிதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. ஆனால், மக்களுக்கு தேவையற்ற சுமைகளைச் சுமத்தி அவர்கள் படும் துன்பத்தில் பங்கேற்காத அரசு அவர்களின் வருமானத்தில் பங்குகேட்டு அவர்களுக்குப் புதிய திட்டங்களால் இன்னும் சுமையை அதிகமாக்குவது அரங்கேறுவது வருத்தமாக இருக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் நல்லதொரு குடிமகனாகவும் இருக்க வேண்டும் என்பதை இயேசுவே தெள்ளத்தெளிவாகச் சொல்லிச் சென்று விட்டார். அதிகாரிகளுக்குக் கீழ்ப்படியும் கடமை குடிமக்களுக்கு உண்டு என்பதை விவிலியத்தின் வேறு பகுதிகளிலும் காண்கிறோம். எடுத்துக்காட்டாக,  உரோமையருக்கு எழுதிய திருமடலில் புனித பவுல், "கடவுளிடமிருந்து வராத அதிகாரம் எதுவுமில்லை. இப்போதுள்ள ஆட்சிப் பொறுப்புகளைக் கடவுளே ஏற்படுத்தினார். அதிகாரிகள் உங்களுக்கு நன்மை செய்வதற்கென்றே கடவுளால் ஏற்படுத்தப்பட்டவர்கள். அதனால் மனச்சான்றின் பொருட்டு நீங்கள் அவர்களுக்குப் பணிந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் பணியை ஆற்றும்போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள். ஆகையால் நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுங்கள். தலைவரி செலுத்த வேண்டியோருக்கு தலைவரியையும் சுங்கவரி செலுத்த வேண்டியோருக்கு சுங்கவரியையும் செலுத்துங்கள்' (உரோமையர் 13,1,4-7) என்று கூறுவது, இறைவன் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர் நல்ல குடிமகனாகவும் செயல்படவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள்' - என்ற இயேசுவின் வார்த்தைகளை மேலோட்டமாக வாசித்தால் இயேசு சீசரையும் கடவுளையும் ஒரே இடத்தில் ஒரே தளத்தில் வைப்பது போல இருக்கிறது. 'ஒருவர் இரண்டு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அவர் ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்' என்று சொல்லிய இயேசு, 'நீங்கள் சீசருக்கும், கடவுளுக்கும் பணிவிடை செய்யுங்கள்' என்று சொல்வாரா? நிச்சயமாக இல்லை. இதே வார்த்தைகளுடன் நம் வாழ்வை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பணம், காணிக்கை போன்றவற்றைக் கடவுளுக்குக் கொடுத்து, அதில் ஒரு மனநிறைவைக் காண்கின்றோம். அப்படியே இயேசுவை வாயால் புகழ பரிசேய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். அதே நேரம், நமது இதயத்தை சீசருக்குக் கொடுக்கிறோம். உலக கேளிக்கைகள், சிற்றின்பங்கள், உல்லாசங்கள், மனிதநேயமற்ற செயல்கள் என நமது இதயத்தை உலகத்தின் இயல்புகளால் நிரப்பி வைக்கிறோம். இங்குதான் இயேசு நம்மைப் பார்த்து கேட்கிறார், எந்த இடத்தை சீசருக்கு கொடுக்கிறாய், எதனை கடவுளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறாயா என்று.

சிந்திப்போம்! நாணயத்தில் சீசரின் முகம் இருக்கட்டும்! நம் இதயத்தில் இயேசுவின் முகம் நிலைக்கட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 October 2024, 12:43