தாவீதின் இறைவேண்டல் தாவீதின் இறைவேண்டல்  (https://inspiredscripture.com/psalm-6/media/image1.jpg)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-3, தாழ்மையில் தலைநிமிர்வோம்!

நமது எதிரிகளுக்கும் தீயவர்களுக்கும் அடிபணிந்துவிடாமல் உயிருள்ள கடவுளுக்கு என்றும் உண்மையுள்ள ஊழியர்களாகப் பணியாற்றுவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-3

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீயவர்களுக்கும் நன்மை செய்வோம்!' என்ற தலைப்பில் 59-வது திருப்பாடலில் 6 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். நமது தியானச் சிந்தனையின் இறுதியில், தீமை செய்யும் தீயவருக்கும் பொல்லாருக்கும் நன்மை செய்யும் தாவீதின் உன்னதமான உளப்பாங்கை நாமும் அணிந்துகொள்ள இறையருள்வேண்டி மன்றாடினோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 11 முதல் 13 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இறைபிரசன்னதில் அவ்வார்த்தைகளை இப்போது வாசிக்கக் கேட்போம். "அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்; இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்; என் தலைவரே! எங்கள் கேடயமே! அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும். அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே; அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக! அவர்கள் சபிக்கின்றனர்; அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர். ஆகவே, வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்; இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்; அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும் அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்" (வச 11-13). தனது எதிரிகளின் கொடுஞ்செயல்கள், திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கடவுளிடம் முறையிட்ட தாவீது அரசர், தான் குற்றமற்றவன், பாவமற்றவன் என்பதை எடுத்துரைத்து தன்னைக் காக்குமாறு இறைவேண்டல் செய்தது குறித்து கடந்த வாரம் சிந்தித்தோம். அதனைத் தொடர்ந்து மீண்டுமாகத் தனது எதிரிகளைக் குறித்துப் பேசுகிறார் தாவீது. இப்போது ஒரு கதையுடன் நமது தியானச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

ஓர் ஆசிரமத்தில் துறவி ஒருவர் தனது நான்கு சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். அவர் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்படுத்தும் அருமையான பணிகளையும் செய்து வந்தார். அவருடைய வழிகாட்டுதலில் அம்மக்கள் மனநிறைவுடன் வாழ்ந்து வந்தனர். தனது சீடர்களுக்கு நாள்தோறும் சிறப்பான போதனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி வந்தார் அவர். ஒருநாள், சீடர்களில் ஒருவர், "குருவே, அநியாயக்காரர்களுக்கு இறைவன் எவ்விதம் தண்டனை அளிப்பார்" என்று கேட்டபோது, "அதை நீயே ஒருநாள் அறிந்துணர்த்துக்கொள்வாய்" என்று கூறினார். கேள்விகேட்ட அந்தச் சீடர் ஒருநாள், தனது அறையின் ஜன்னல் வழியே ஆளரவமற்ற ஒரு பாதையையும், அதன் அருகிலிருந்த பெரிய ஆலமரம் ஒன்றையும், அதிலிருந்த பல்வேறு பறவையினங்களையும் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தார். அப்போது பெரிய நாகப்பாம்பு ஒன்று அம்மரத்தின் அருகிலிருந்த கரையான் புற்றுக்குள் புகுந்ததும் அதிலிருந்த ஆயிரக்கணக்கான கரையான்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கண்ணிமைக்கும் நேரத்தில் அப்புற்றிலிருந்து வெளியேறி பஞ்சாய்ப் பறந்து சென்றன. இதைக் கண்ட சீடன் அப்படியே பதறிவிட்டான். “என்ன கொடுமை இது! மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அக்கறையான் கூட்டத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேற்றிவிட்டதே சுயநலம் கொண்ட இந்த நாகப்பாம்பு! இது பெரும் அக்கிரமம் இல்லையா! இதைக் கேட்பதற்கு ஆள் இல்லையா” என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தார் அச்சீடர். அப்போது தற்செயலாக குரு அப்பக்கம் வர, நடந்த பாம்பின் அநியாயச் செயலை பதற்றமுடன் அவரிடம் விவரித்தார்.. உடனே அவரை சாந்தப்படுத்திய குரு, "அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அன்று மாலை அங்கே பெரும் மழைப் பெய்தது. அப்போது ஏற்பட்ட சிறுவெள்ளத்தால் அக்கறையான் புற்றுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் அதிலிருந்த நாகப் பாம்பு சட்டென வெளியேறி சாலையில் ஊர்ந்துசென்றது. அது அந்த மண் சாலையைக் கடந்து எதிர்புறமிருந்த காட்டிற்குள் செல்ல விரைந்தது. அப்போது அவ்வழியே வந்த இளைஞன் ஒருவன் அந்த நாகப் பாம்பை கண்டதும், பயந்து ஓடிவிடாமல் அருகிலில் கிடந்த பெரியதொரு கம்பை எடுத்து அதன் தலையில் ஓங்கி ஒரு அடிப்போட்டான். அவ்வளவுதான், அது அப்படியே சுருண்டு விழுந்து இறந்தது. அதனை அப்படியே மண்சாலையின் ஓரமாகத் தள்ளிவிட்டு தான் வந்த வழியே போய்விட்டான் அவ்விளைஞன். இந்தக் காட்சிகளையெல்லாம் அச்சீடர் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவழியாக மனதில் அமைதி ஏற்பட, அவர் உள்ளே ஓடிச்சென்று தனது குருவை அழைத்துவந்து நடந்த அனைத்தையும் காட்டினார். குரு பதிலேதும் சொல்லாமல் சிறிது புன்னகைத்துவிட்டு அப்படியே உள்ளே போய்விட்டார். அக்கிரமக்காரர்களையும் அவர்கள் செய்யும் அக்கிரமச்செயல்களையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று குரு அடிக்கடி கூறியதை அப்போது நினைவுகூர்ந்து மகிழ்ந்தார் அச்சீடர்.

இன்று நாம் தியானிக்கும் இறைவார்த்தைகளில் முதலாவதாக, "அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்; இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்; என் தலைவரே! எங்கள் கேடயமே! அவர்களை உமது வலிமையால் நிலைகுலையச் செய்யும்" என்கின்றார் தாவீது. இங்கே அவர் கூறும் வார்த்தைகள் நமக்குச் சற்று வியப்பை அளிக்கலாம். அதாவது, தாவீது ஏன் இவ்வாறு கூறவேண்டும் என்ற எண்ணம் நமக்கு மேலிடலாம். காரணம், நமது எதிரிகளின் அழிவு குறித்து பேசும்போது, அவன் ஒரேடியாக இல்லாது ஒழித்துபோய்விட வேண்டும், அவன் பெயரே அற்றுப்போய்விட வேண்டும், அவன் குடும்பமே தழைத்தோங்காமல் போய்விட வேண்டும் என்றெல்லாம் நாம் கூறுவதுண்டு. அதேவேளையில், ‘அவன் உடனேயே சாகக்கூடாது, வதைபட்டு, வேதனைப்பட்டு, அனுபவித்து சாகவேண்டும் என்றும் நம்மில் சிலர் சொல்வதுண்டு. இந்த இரண்டாம் வகையினரில்தான் தாவீது உடன்படுகின்றார். "அவர்களை ஒரேயடியாய்க் கொன்று விடாதேயும்" என்று இறைவேண்டல் செய்யும் தாவீது, "இல்லையேல், உம் வல்லமையை என் மக்கள் மறந்துவிடுவர்" என்று அதற்கான காரணத்தையும் முன்வைக்கின்றார். இங்கே தாவீதின் வார்த்தைகளை நாம் நேர்மறை கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும். அதாவது, ‘இதோ அந்தத் தீயவர்கள் அந்த மாசற்றவனை நோகச் செய்தனர், கொலைவெறிபிடுத்து அவனைக் கொல்லத் தேடினர். ஆனால் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார், அவர்களை இல்லாதொழித்துவிட்டார், அவனுக்குச் செய்த தீங்கிற்காகவும், துரோகச் செயல்களுக்காகவும் இப்போது நன்றாக அனுபவிக்கிறார்கள், கடவுள் எப்போதும் நல்லவர்கள் பக்கம் இருப்பார்’ என்று மக்களைச் சொல்லவைக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் இவ்வாறு தாவீது கூறுவதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். மேலும் ‘அத்தீயவர்களை நிலைகுலையச் செய்யும்’ என்கின்றார். இங்கே 'நிலைகுலையச் செய்யும்' என்ற வார்த்தை, அக்கிரமக்காரர்களான தனது எதிரிகள், மீண்டும் எழாதிருக்கட்டும், ஒன்றுமில்லாமல் போகட்டும், அழிந்தொழியட்டும், என்ற அர்த்தத்தில் இவ்வாறு உரைக்கின்றார்.

அடுத்து, "அவர்களின் வாய் பேசுவதும் நா உரைப்பதும் பாவமே; அவர்கள் தற்பெருமை அவர்களைச் சிக்கவைப்பதாக!"  என்கின்றார் தாவீது. இவ்விடத்தில் வாய் என்று சொல்லப்பட்டாலும், நா என்பது முக்கியத்துவம் பெறுகிறது. தங்களின் எண்ணத்தில் உதிக்கும் தற்பெருமை என்னும் தீயகுணம் வாயின் உள்ளிருக்கும் நா வழியாக செயல்பட்டு அவர்களைப் பாவத்தில் விழவைக்கிறது. அறியாமையில் இருந்து பிறப்பது தற்பெருமை. இது கடவுளை அறியும் அறிவு இல்லாத காரணத்தால் ஏற்படுகிறது. இந்தத் தற்பெருமையினால் ஆணவம் வருகிறது. எங்கு ஆணவம் உண்டாகிறதோ இயற்கையின் விதிப்படி அங்கு அதற்கு நேர் எதிரான ஒரு விளைவு தோன்றி அம்மனிதரை அழித்துவிடும். எனவே பெருமைப்பட்டவர் சிறுமைப்படும் காலமும் தானாக வந்து சேரும். எனவே இருக்கும்போது ஆடவும் வேண்டாம் இல்லாத போது வருத்தப்படவும் வேண்டாம். இயல்பாக வாழ்ந்து விடுவோம் அதுவே நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பொதுவாக, நமது செயல்கள் சிலவேளைகளில் தவறானதாக மாறலாம், ஆகவே, நல்லவர்களின் படிப்பினைகளுக்குச் செவிமடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத போதும், தனக்கு எல்லாம் தெரியும் என்ற தவறான கருத்தை எண்ணத்தில் உறுதியாகக் கொண்டிருக்கும்போதும், தனக்கு வலி தரும் விடயங்கள் யாவும் பிறருக்கும் வலி தரும் என்ற அறிவு இல்லாத போதும், எல்லோரது தன்னார்வத்துடன் கூடிய  ஒத்துழைப்புதான் வெற்றி தரும் என்ற அடிப்படை உண்மை புரியாத போதும், தற்பெருமை வெளிப்படுகிறது. இந்தக் காரியங்கள் அனைத்தும் மன்னர் சவுலுக்கு அப்படியே பொருந்தும். அதனால்தான், ஏதுமறியாத குற்றமற்ற தாவீது ஒருவரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக 3000 பேரைத் திரட்டிக்கொண்டு போய் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார். அதுமட்டுமன்றி, மாசற்ற மனிதரான தாவீதுமீது எண்ணற்ற பொய்குற்றம் சுமத்தி அவருக்கு அவப்பெயரைத் தேடிக்கொடுக்கிறார். 'காவல்துறையினர் கண்டதும் சுட உத்தரவு' என்று இன்று நாம் கேள்விப்படுகிறோமே அதுபோல, 'தாவீதை யார் கண்டாலும் கொல்லலாம்' என்ற கொடிய ஆணையைப் பிறப்பிக்கச் செய்த கல்நெஞ்சக்கார்தான் இந்தச் சவுல். அதனால்தான், "அவர்கள் சபிக்கின்றனர்; அடுக்கடுக்காய்ப் பொய் பேசுகின்றனர்" என்று அவர்களைப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்துகிறார் தாவீது. 

இறுதியாக, "வெகுண்டெழுந்து அவர்களை அழித்துவிடும்; இனி இராதபடி அவர்களை ஒழித்துவிடும்; அப்பொழுது, கடவுள் யாக்கோபின் மரபினரை ஆள்கின்றார் எனவும் அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்" என்று கூறி முடிக்கின்றார். ஆகவே, இந்த வார்த்தைகளைக கூறி தாவீது வேதனையுற்று கடவுளிடம் புலம்பக்கூடிய அளவிற்கு, சவுலும் அவரது படைவீரர்களும் அவரைப் புண்படுத்தியுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகிறது. மேலும் "அவரது அரசு உலகின் எல்லைவரைக்கும் உள்ளது எனவும் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்" என்ற தாவீதின் வார்த்தைகளில் அவரது தாழ்ச்சியும் ஏற்றுக்கொள்ளலும் வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். அதற்குக் காரணம், ‘தானொரு மாபெரும் இஸ்ரேல் மக்களின் அரசர், தனக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன, தனது அரசே எப்போதும் நிலையானது’ என்றெல்லாம் எண்ணி அகந்தை கொள்ளாமல், என்றும் வாழும் கடவுளின் அரசே என்றென்றைக்கும் நிலையானது என்பதைத் தெளிவுபட எடுத்துரைக்கின்றார். இன்னும் சொல்லப்போனால், தன்னை ஓர் அரசனாகக் கூட கருதாமல், என்றும் வாழும் ஒப்பற்ற அரசராகிய கடவுளுக்கு மட்டுமே ஓர் உண்மையுள்ள ஊழியனாகத் தன்னை தாழ்ச்சியுடன் காட்டிக்கொள்கின்றார். ஆகவே, நாமும் நமது எதிரிகளுக்கும் தீயவர்களுக்கும் அடிபணிந்துவிடாமல், உயிருள்ள கடவுளுக்கு என்றும் உண்மையுள்ள ஊழியர்களாகப் பணியாற்றுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

‘தாழ்மையில் தலைநிமிர்வோம்!’ என்ற தலைப்பில் இன்றைய விவிலியத் தேடல் நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 October 2024, 16:08