தடம் தந்த தகைமை : எஸ்தருக்காக செபிக்க யூதருக்கு அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அரசர் முன்னிலையில் தம் மக்களுக்காகப் பரிந்து பேசுமாறு வேண்டிய மொர்தக்காயின் வார்த்தைகளை அத்தாக்கு எஸ்தரிடம் சென்று எடுத்துரைத்தார். எஸ்தர் மறுபடியும் அத்தாக்கு வழியாக மொர்தக்காய்க்குச் சொல்லி அனுப்பியது: ‘‘மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும் மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்; இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும் மாநில மக்கள் அனைவரும் அறிவர்.'’
அவரும் எஸ்தரின் வார்த்தைகளை மொர்தக்காயிடம் அறிவித்தார். அதற்கு மொர்தக்காய் எஸ்தரிடம் அறிவிக்கும்படியாகக் கூறியது: '‘அனைத்து யூதருள்ளும் அரச மாளிகையில் உள்ள நீ மட்டும் காப்பாற்றப் பெறுவாய் என உனக்குள் கற்பனை செய்யவேண்டாம். ஏனெனில், இவ்வமயம் நீ மௌனமாய் வாளாவிருப்பின், விடுதலையும் பாதுகாப்பும் யூதருக்குப் பிறிதொரு இடத்தினின்று தோன்றும். ஆனால் நீயும் உன் தந்தையின் வீட்டாரும் அழிவீர். யார் அறிவார்? ஒருவேளை இதுபோன்ற நேரத்திற்கெனவே நீ அரசியாகி உள்ளாய் போலும்!'’.
இதைக் கேட்ட எஸ்தர் மொர்தக்காயிடம் சொல்லும்படியாகக் கூறியது: '‘சூசானில் காணப்படும் அனைத்து யூதரையும் ஒன்று சேர்ப்பீராக! எனக்காக நோன்பிருந்து மூன்றுநாள் இரவு பகல் உண்ணாமலும், குடியாமலும் இருப்பீராக! நானும் என் செவிலியரும் அவ்வாறே நோன்பிருப்போம். சட்டத்திற்குப் புறம்பே எனினும் நான் மன்னரிடம் செல்வேன்! அழிவதாயின் அழிகின்றேன்.'’ மொர்தக்காய் அவ்வாறே சென்று, எஸ்தரின் வாக்கின்படியே அனைத்தையும் செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்