எருசலேம் கோவிலில் இயேசு எருசலேம் கோவிலில் இயேசு 

தடம் தந்த தகைமை - மறைநூலும் எனக்குச் சான்று

நாம் அன்றாடம் வாழும் வாழ்வு பிறர் பின்பற்றும் இன்னொரு நூலாக வேண்டும். ஒருவரது அறிவுச் சுடரில் பிறக்கும் ஒளியில் தங்கள் விளக்குகளை ஏற்றுவதே அறிவின் பயன்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம்மறைநூலும் எனக்குச் சான்று பகர்கிறது. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை. (யோவா 5:39,40)

மறைநூலை மணிக்கணக்காக வாசிக்க வேண்டும். விரும்பிய பகுதிகளை மனனம் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். தான் விரும்பியபடி அதை விளக்க வேண்டும். அவ்வாறு விளக்குகையில் சில பகுதிகளை இங்குமங்குமாகக் கோடிட்டுக் காட்ட வேண்டும். இத்தகையோரை மிகச் சிறந்த மறைநூல் அறிஞராகச் சாதாரண மக்கள் தங்கள் மனம் பதித்தனர். மறைநூல் சுட்டிய வாழ்வளிக்கும் நெறியைச் சூசகமாக மறைத்து வைத்தனர் இயேசுவின் காலத்து மறைநூல் அறிஞர்கள்.

மறைநூல் மட்டுமல்ல, எந்த நூலாயினும் அதைக் கற்பதும் கற்பிப்பதும் கற்பவரின் பிழைப்புக்காக அல்ல, அது தனது மற்றும் பிறரின் நன்னெறிமிக்க வாழ்வுக்காகவே. அந்த வாழ்வையே இயேசு மறைநூல் வழியாக வலியுறுத்தினார். வார்த்தைகள் கோத்த நூல்கள் யாவும் வாழ்வளிப்பதாக அமைவதே நூலிற்கு அழகு. அவ்வாறே நாம் அன்றாடம் வாழும் வாழ்வு பிறர் பின்பற்றும் இன்னொரு நூலாக வேண்டும். ஒருவரது அறிவுச் சுடரில் பிறக்கும் ஒளியில் தங்கள் விளக்குகளை ஏற்றுவதே அறிவின் பயன்.

இறைவா! என் வாழ்வு நீர் விரும்பும் நூலாகவும், அதை உலகம் வாசித்து வாழ்வு பெறவும் வழிகாட்டும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2024, 13:51