தடம் தந்த தகைமை - கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
என் மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக்கல்லைக் கட்டி, கடலில் தள்ளி விடுவதே அவர்களுக்கு நல்லது. (மாற் 9:42)
தம் பணிவாழ்வில் சின்னஞ்சிறாருக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர் இயேசு. மனித ஆளுமை துளிர்க்கும் அச்சிறு பருவத்தில் வாழும் கலையைப் பக்குவமாகப் பகிரப் பணித்தார். ஏனென்றால் சிறார் வாழ்வின் யுக்திகளைப் புத்தகங்களிலிருந்து கற்பதைவிடத் தாங்கள் பார்த்துப் பழகும் மனிதர்களிடமிருந்தே ஏராளம் கற்கின்றனர். அந்தக் கற்றல் தாகத்திலிருக்கும் அச்சிறாருக்கு மிகத் தேவையானது மாதிரியான வாழ்வே.
இயேசு சுட்டும் சிறார் என்போர் சமூகத்தின் விளிம்புநிலை மாந்தரே. அவர்களே இயேசுவை நம்பினர், பின்தொடர்ந்தனர், புதுவாழ்விற்கான வழி தேடினர். ஆனால் மறைநூலும் சட்டங்களும் கரைத்துக் குடித்தவர்கள் என்ற போர்வையில் வாழ்ந்தவர்கள் இந்த எளியோரைத் தவறாக வழிநடத்தினர். பொய் புரட்டுகளைப் புனைந்து பாமரரை அடிமைகளாகவும் தங்களை ஆள்வோராகவும் தக்கவைத்துக் கொண்டனர். அத்தகையோருக்கான தண்டனையே எந்திரக்கல் கட்டி கடலில் தள்ளுதல். அந்தக் கல் நமக்குத் தேவையா என்று சிந்திப்பது நன்று. சிறாரைச் சிறந்தவர்களாக்க ஒரே வழி நாம் சிறந்தவர்களாக வாழ்தலே.
இறைவா! ஒவ்வொரு குழந்தையும் உம் அன்பின் நீட்சி என்பதை உளமுணர்ந்து செயல்பட வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்