தடம் தந்த தகைமை - தந்தை செய்பவற்றை மகனும்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
முப்பத்தெட்டு ஆண்டுகளாய் உடல் நலமற்றவருக்கு ஓய்வு நாளில் நலம் கொடுத்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்திட, இயேசுவோ, ‘மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும். தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார் (யோவா 5:19) என பதிலளித்தார்.
‘என் விருப்பப்படி நான் எதையும் செய்வேன்’ என்ற தன்மயப் போக்கு உலகெங்கும் இன்று மையம் கொண்டுள்ளது. இயேசு யூதர்களுக்கு விடுத்த இப்பதிலில் அவர் தந்தையைச் சார்ந்திருந்தார் எனப் பொருள் கொண்டாலும் இது அவரது ஆழ்ந்த அர்ப்பண வெளிப்படுத்தல் என்றும் புரிந்துகொள்ளலாம். இதன் வழியாக வானகத் தந்தையிடம் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையையும் எடுத்தாள்கிறார்.
கடவுளை இயேசு 'அப்பா' உறவில் ஆளாக்கிப் பார்த்ததோடு, பின்பற்ற வேண்டிய ஓர் 'ஆசானாக' ஏற்கிறார். படைப்பின் தொடக்கத்திலிருந்து இப்பெரும் பிரபஞ்சத்தை வாஞ்சையோடு வழிநடத்தும் கடவுளின் யுக்திகளையும், நுணுக்கங்களையும், அணுகுமுறைகளையும் அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டார். அதனை வரலாறாக்கத் துணிவும் பூண்டார். தந்தை - மகன் உறவை குரு - சீடன் நிலைக்குட்படுத்தி, தன்னைப் பணியாளராக மாற்றிய இயேசுவின் பார்வை நம் பயணப் பாதையாகட்டும்.
எப்படித்தான் கீழே விழுந்தாலும் நன்மனிதர்கள் எழுந்து நடந்து கொண்டே இருப்பார்கள். உடன் வாழ்வோரைத் திருப்திப்படுத்துவதற்கென்றே அன்றாடம் நாம் செய்பவைகள் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவா! உம் விருப்பத்தை நிறைவேற்றத் துணிந்த இயேசுவைப் போலச் செயலாற்றும் மன உறுதி எனக்குத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்