இறைவனோடு ஒப்புரவாதல் இறைவனோடு ஒப்புரவாதல்  (Copyright (c) 2020 Porstocker/Shutterstock. No use without permission.)

தடம் தந்த தகைமை - உங்கள் வலக் கன்னத்தில் அறைபவருக்கு....

மன்னிப்பு, அன்பு, இரக்கம், உதவுதல், உடனுழைத்தல் எனும் உயர் பண்புகளால் மனிதம் உயர வேண்டுமென ஏங்கினார் இயேசு. காலம் செல்லச்செல்ல கலாச்சாரமும் மனிதப்படுத்தப்படுவதே நலமான வளர்ச்சி.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக்கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள் (மத் 5:38,39) என்றார் இயேசு.

மாறுபட்ட வாழ்க்கை வாழ வழிகாட்டும் மாற்றுச் சிந்தனைகள் பொதிந்த போதனைகள் இவை. யூத சமூகத்தில் நடைமுறையிலிருந்த சட்டங்களுக்கு முற்றிலும் முரணானவை. கி.மு. 1792 - 1750 வரை பாபிலோனியாவை ஆண்ட ஹமுராபி என்ற அரசரால், தண்டனையின் அளவு, அடைந்த இழப்பைவிட அதிகமாகிவிடக் கூடாது எனும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டதே 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' சட்டம்.

அக்காலத்தில் நீதியை நிலைப்படுத்த இச்சட்டம் தேவைப்பட்டது. ஆனால், இயேசுவின் பார்வையில் அச்சட்டம் இன்னும் நீட்டப்பட வேண்டியதில்லை. மன்னிப்பு, அன்பு, இரக்கம், உதவுதல், உடனுழைத்தல் எனும் உயர் பண்புகளால் மனிதம் உயர வேண்டுமென ஏங்கினார். காலம் செல்லச்செல்ல கலாச்சாரமும் மனிதப்படுத்தப்படுவதே நலமான வளர்ச்சி. எனவே எப்போதும் எல்லாவற்றிற்கும் பழிவாங்கும் இழிமனம் களைந்து சகோதரத்துவம் மலர ஆசைப்பட்ட இயேசுவின் கனவுகளே இப்போதனைகள். தீங்கு செய்தோரை பழிவாங்காமல் வாழ்தலே தலைசிறந்த பழிவாங்கல்.

இறைவா! பழிசுமத்தலும் பழிவாங்கலும் பெரும்பாவங்கள் என மனமுணர்ந்து பணிவோடு வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2024, 14:12