புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மக்கள் புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மக்கள்  (AFP or licensors)

லெபனானில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் கத்தோலிக்க அமைப்பு

குண்டு வீச்சினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளுக்குள் தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தினால் லெபனானின் தலைநகர் பகுதியில் மக்கள் பலர் வீதிகளில் தங்கியுள்ளனர்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான கடுமையான மோதல்களின் காரணமாக ஏறக்குறைய 12 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதால் லெபனான் மிகப்பெரிய இடம்பெயர்வு நெருக்கடியை அனுபவித்து வருவதாக கத்தோலிக்க நிறுவனங்களும் ஐநா அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

அக்டோபர் 10 ஆம் தேதி வியாழனன்று Derdghaya வில் அகதிகள் தங்கியிருந்த இரண்டு திருஅவை கட்டிடங்கள் மீது இஸ்ராயேல் இராணுவம் நடத்திய  வான்வழித் தாக்குதலில் ஏறக்குறைய 8 பேர் உயிரிழந்ததாகவும், பங்கு அலுவலகம் மற்றும் கோவில் அழிவுக்குள்ளாகியுள்ளதாகவும்  உறுதி செய்துள்ளது Aid to the Church in need என்னும் நிறுவனம்.

லெபனானின் மக்கள் பலர் புலம்பெயர்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் மீண்டும் தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது.

குண்டு வீச்சினால் ஏற்படும் கட்டிட இடிபாடுகளுக்குள் தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தினால் லெபனானின் தலைநகர் பகுதியில் மக்கள் பலர் வீதிகளில் தங்கியுள்ளனர் என்றும், தங்குமிடங்கள் நிரம்பி வழிவதால், மலை கிராமங்களுக்குத் தப்பி ஓடுகின்றனர் என்றும் புனித பூமிக்கான தகவல் தொடர்புத் துறையின் தலைவர் Andrea Avveduto தெரிவித்துள்ளார்.

லெபனானின் தற்போதைய நிலைமை மிகவம் பேரழிவுகரமானது என்றும், இராணுவ தாக்குதல்  அதிகரிப்பட்டுள்ளதால்,  மக்கள் Beirutக்கு தப்பிச் சென்ற நிலையில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடம், போர்வைகள், படுக்கைகள், உணவு ஆகியவற்றை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் தாக்குதலால் நாட்டின் பலதரப்பட்ட மக்களும், பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையிலும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் உதவுவதைக் காண முடிகிறது என்றும், இச்செயல் நம்பிக்கையின் நல்ல ஓர் அறிகுறி என்றும் கூறினார்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியால் முடங்கிக் கிடக்கும் லெபனானின் நலவாழ்வு  அமைப்பு, இந்த மோதலால் வீழ்ச்சியின் விளிம்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஐ.நா. மற்றும் அரசு  அதிகாரிகள் கூறுகின்றனர்.

தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளைத் தவிர முற்றிலும் எல்லாம் இழந்த நிலையில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு மிகவும் தேவையான  மருத்துவ உதவிகளையும், பாதுகாப்பையும் லெபனானின் காரித்தாஸ் அமைப்பு வழங்கி வருகிறது.

போர்த் தாக்குதல்களால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு  1000க்கும் மேற்பட்ட தன்னார்வ இளையோர் உளவியல் மற்றும் சமூக உதவிகளை வழங்கி வருகின்றனர் என்று தெரிவித்தார்  லெபனான் காரித்தாஸ் அமைப்பின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் Mazen Moussawer.

லெபனான் காரித்தாஸ் அமைப்பின் நடமாடும் மருந்தகம், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று   தங்கள் வீடுகளை விட்டு வெளியேற இயலாத, வெகு தொலைவில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது என்றும், லெபனான் மக்களுடன் எப்போதும் நிற்பதாகவும்  தெரிவித்தார் அவர்.

லெபனானின் நாணயத்தின் மதிப்பு 90 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததும், அரசியல் பிரிவுகளின் முரண்பாடுகளும் நாட்டின் துயரத்தை அதிகரித்துள்ளன.

லெபனான் நாட்டின்  அரசியல் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உள் மற்றும் வெளிப்புற நம்பிக்கை கொண்ட ஒரு குடியரசுத் தலைவரைத்  தேர்ந்தெடுக்க  வேண்டும் என்று மேரனைட் கத்தோலிக்க திருஅவையின்  முதுபெரும் தலைவர், லெபனான் கர்தினால்   Bechara Rai கூறினார்.

அக்டோபர் 2023ல் போர் தொடங்கியதிலிருந்து லெபனானில் இதுவரை 2,100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் ஏறத்தாழ  10,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த மூன்று வாரங்களில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியபோது பெரும்பாலான உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2024, 15:43