கிறிஸ்தவ சித்ரவதைகளை குறிக்கும் சின்னம் கிறிஸ்தவ சித்ரவதைகளை குறிக்கும் சின்னம்  (AFP or licensors)

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் உலகில் அதிகரித்து வருகின்றன

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகஸ்ட் 2022 மற்றும் ஜூன் 2024க்கு இடையில் 18 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 60 விழுக்காடு அதிகரித்துள்ளன

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

பல்வேறு நாடுகளில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி   ஏறக்குறைய   மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில்   கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று, உலகளவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது குறித்த அறிக்கை   ஒன்றை  வெளியிட்டுள்ளது Aid to the Church in Need  என்னும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கை,  எதேச்சதிகாரம் அல்லது தீவிரவாதிகளின் தாக்குதல்களால் விசுவாசிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், ஆகஸ்ட் 2022 மற்றும் ஜூன் 2024க்கு இடையில் 18 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்   60  விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள்  துன்புறுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர் என்றும், ஆலயங்கள் எரிக்கப்படுத்தல், கிறிஸ்தவ பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுதல்,  விசுவாசிகள் தங்கள் நம்பிக்கைகளுக்காக கொல்லப்படுதல் போன்ற வன்முறைகள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்து வருவதாகவும்   இலண்டனில்  வெளியிடப்பட்ட அறிக்கையின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.

புர்கினா பாசோ, நைஜீரியா, மொசாம்பிக் போன்ற நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தப்படுவதுடன், சீனா, எரித்திரியா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள் அரசின் எதிரிகளாக நடத்தப்படுவதாகவும், அங்கு அவர்கள் அதிகளவில் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

மத சுதந்திர மீறல்கள் மோசமடைந்துள்ள ஒரு நாடான ஈராக்கின் எர்பில் பேராயர் Bashar Warda அவர்கள், இஸ்லாமிய குழு  நூறாயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை வெளியேற கட்டாயப்படுத்திய பத்தாண்டுகளுக்கு பிறகு, தாங்கள் அனுபவித்த இனப்படுகொலை தொடர்ந்து ஒரு நீண்ட நிழலை ஏற்படுத்துகிறது என்றும்,  கிறிஸ்தவர்களின் இடம்பெயர்வு, அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்  நகரங்களில்  திருஅவையின்  அழிவு கிறிஸ்துவின் காலத்திற்கு கொண்டு செல்கிறது என்றும் கூறியுள்ளார்.

இந்த  அறிக்கையைப் படிக்கும் அரசு அதிகாரிகள்  அல்லது பிற தலைவர்கள் யாராக இருந்தாலும், கிறிஸ்தவ துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகளுக்கு உதட்டளவில் அல்லாமல் செயலில் அதிகம் சேவை புரிய வேண்டும் என்பதே தனது ஜெபம் என்றும் கூறியுள்ளார் பேராயர் Warda.

மேலும், ஈராக்கில் தங்களுக்கு நடந்தது போன்று  வேறு எங்கும் நடக்காமல் தடுக்க, இது போன்ற அறிக்கைகளில் கொடுக்கப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கைகளின் பேரில் அனைவரும் செயல்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்துள்ளார் பேராயர்.

இஸ்லாமியக் குழுக்களின்  எழுச்சியால் ஏற்பட்ட பயங்கரத்தையும், அதிலும் உலகெங்கிலும் உள்ள சகோதர சகோதரிகள் காட்டிய   கருணை, நம்பிக்கை ஆகியவற்றையும் தான்  இன்னும் நினைவில் வைத்திருப்பதாக கூறிய பேராயர்  Warda அவர்கள், தொடர்ந்து துன்புறும் அனைவருக்காகவும் ஜெபிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2024, 15:10