இந்திய தலித்களின் உரிமை வேண்டி போராட்டம் இந்திய தலித்களின் உரிமை வேண்டி போராட்டம்  (AFP or licensors)

மதம் மாறியதால் தலித் மக்களின் சமூக நிலை மேம்படவில்லை

தலித் இந்துக்கள், புத்தமதத்தினர் மற்றும் சீக்கியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், அதே சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட தலித் மக்களின் வழிவந்த தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் இனத்திற்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படவேண்டும் என திருஅவை பிரதிநிதிகள் குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வு அவையிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

இந்திய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆய்வு அவையின் தலைவரான முன்னாள் தலைமை நீதிபதி K. G. பாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்த இந்திய திருஅவையின் 15 பேர் அடங்கியக் குழுவில் இடம்பெற்ற அருள்பணி அந்தோனி ராஜ் தும்மா அவர்கள், இவ்வவை தங்களின் விண்ணப்பங்களுக்கு ஆர்வமுடன் செவிமடுத்ததாகவும், தேவையான விவரங்களை தங்களிடம் கேட்டு தெரிந்துகொண்டதாகவும் உரைத்தார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள், புத்தமதத்தினர் மற்றும் சீக்கியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அதே சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமா என்பதை ஆராய 2022ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் அரசு மூன்றுபேர் கொண்ட ஆய்வு அவையை முன்னாள் நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் நியமித்தது.

தலித் இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சலுகைகளை வழங்குவது குறித்த ஆய்வறிக்கையை அடுத்தமாதம் இவ்வவை சமர்ப்பிக்க உள்ள நிலையில் இந்திய கிறிஸ்தவர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழு முன்னாள் நீதிபதியை சந்தித்து தங்கள் விண்ணப்பங்களை முன்வைத்துள்ளது.

தலித் மக்களை அனைத்து வளர்ச்சிகளிலும் பங்கேற்கும் வகையில் வழங்கப்படும் சலுகைகள் அனைத்து தலித் மக்களுக்கும் உரியது என இந்திய அரசியலைப்பு உரைக்கின்றபோதிலும், 1950ஆம் ஆண்டு அரசுத்தலைவர் ஆணைப்படி, இந்த சலுகைகள் இந்து தலித் மக்களுக்கென மட்டுமே ஒதுக்கப்பட்டன. அதன் பின் இருமுறை இடம்பெற்ற சட்ட திருத்தங்கள் வழியாக தலித் இனத்தைச் சேர்ந்த புத்தமதத்தினரும் சீக்கியர்களும் இணைக்கப்பட்டனர்.

தலித் இன கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என 2004ல் இரங்கநாத் மிஸ்ரா குழுவும், 2005ல் Rajinder Sachar குழுவும் பரிந்துரை செய்துள்ளபோதிலும் அதனை ஏற்றுக்கொள்ள மோடி அரசு மறுத்தே வந்துள்ளது.

140 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் 20 கோடியே 10 இலட்சம் தலித் இன மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் 2 கோடியே 50 இலட்சம் கிறிஸ்தவர்களுள் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் தலித் மற்றும் பழங்குடி இனங்களைச் சேர்ந்தவர்கள்.

(UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2024, 16:45