ஏழைகளின் பாதுகாவலர், விடுதலை இறையியலாளர் அருள்பணி குஸ்தாவோ
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஏழைகளின் பாதுகாவலரும் விடுதலை இறையியலாளருமான 96 வயது அருள்பணி (Gustavo Gutiérrez) குஸ்தாவோ கூட்டிரெஸ் அக்டோபர் 22 செவ்வாய்க்கிழமை இரவு பெருவில் உள்ள தூய டொமேனிக்கன் இல்லத்தில் காலமானது குறித்து ஆழ்ந்த வருத்தத்தினை இரங்கல் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் கர்தினால் பிலிப்பு நேரி ஃபெராவோ.
அருள்பணி குஸ்தாவோ கூட்டிரஸ் அவர்களின் இழப்பு திருஅவைக்கு மட்டுமல்லாது நீதி, அமைதி, மனித மாண்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய சமுதயாத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்துள்ளார் கோவா மற்றும் டாமன் உயர் மறைமாவட்டத்தின் பேராயரும் CCBI எனப்படும் இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் பிலிப்புநேரி ஃபெராவோ.
சின்னஞ்சிறிய என் சகோதரர்களுக்கு செய்ததெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க இரக்கமுள்ள செயல்களால் கிறிஸ்துவின் திசைகாட்டியாக கிறிஸ்துவின் கட்டளையை தன் வாழ்வில் கடைபிடித்த அருள்பணி கூட்டிரஸ் அவர்கள், விடுதலை இறையியலில் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியவர்.
அருள்பணி கூட்டிரஸ் அவர்களால் 1971 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விடுதலை இறையியலானது, இலத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும், பலர் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையை பூர்த்தி செய்வதற்கான திருஅவையின் செயல்பாடுகளில் புரட்சியை ஏற்படுத்தியது என்றும், அவரது வாழ்க்கை, ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்காக உறுதியாக அர்ப்பணிக்கப்பட்டது என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் ஃபெராவோ.
விடுதலையின் இறையியல் என்ற அவரது அற்புதமான படைப்பின் வழியாக, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் கிறிஸ்துவின் இருப்பைப் பற்றிய புதிய பார்வையை திருஅவைக்கு அறிமுகப்படுத்தினார் என்று எடுத்துரைத்துள்ள கர்தினால் ஃபெராவோ அவர்கள், 1968 ஆம் ஆண்டு கொலம்பியாவின் மெடலின் நகரில் நடைபெற்ற இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் மாநாட்டின் போது அவரது குரல் ஒரு முக்கிய பங்காற்றியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்வழியாக வறுமை மற்றும் அநீதிக்குத் தீர்வு காண்பதில் திருஅவையின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியதுடன், அநீதியின் கட்டமைப்புகளை எதிர்கொள்ளவும், குரலற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுடன் ஒன்றிணைந்து நடக்கவும் அருள்பணி குஸ்தாவோ உலகிற்கு வலியுறுத்தினார் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் ஃபெராவோ.
நம் காலத்து இறைவாக்கினராக இருந்த அருள்பணி குஸ்தாவோ அவர்களின் கருத்துக்கள் திருஅவையின் பணியினை ஆழமாக வடிவமைத்துள்ளன என்றும், ஒன்றிப்பு மற்றும் பணிக்கான புதுப்பிக்கப்பட்ட புரிதலுக்கு வழிவகுத்துள்ள என்றும் கூறியுள்ள கர்தினால் ஃபெராவோ அவர்கள், இரக்கமுள்ள நீதியுள்ள உலகிற்காக உழைக்க எண்ணற்றவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்