திருநற்கருணை ஆராதனை திருநற்கருணை ஆராதனை  (National Eucharistic Revival)

ஐந்தாவது தான்சானிய தேசிய திருநற்கருணை மாநாடு

ஒன்றிப்பின் உரையாடலுக்கு நம்மை அழைக்கும் திருநற்கருணை ஆண்டவரிடமே சமூகத்தை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

தான்சானிய சமூகம் மனித உரிமை மீறல்களின் அலையால் கவலையும், மிகுந்த அச்சமும்  அடைந்துள்ளது என்றும், கடத்தல்கள், கொலைகள், உரிமை மீறல்கள், பலவீனமானவர்களைத் துன்புறுத்துதல் போன்றவை பொதுவாகவே நடக்கின்றன என்றும் தெரிவித்தார் அருள்பணி Paulino Madeje  

உடன்பிறந்த உணர்வு உலகை குணப்படுத்தும், நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற முழக்கத்துடன்  அக்டோபர் 3 வியாழனன்று  ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற Dar Es Salaam இல் நடைபெற்ற 5வது தேசிய தான்சானிய திருநற்கருணை மாநாடு குறித்து இவ்வாறு கூறினார் தன்சானியாவின் கொன்சோலாத்தா மறைப்பணியாளர்கள் (Tanzanian Consolata Missionaries) என்ற இதழின் இயக்குனரான அருள்பணி Paulino Madeje.

மனித மாண்பை வளர்ப்பதற்கு கிறிஸ்தவ உடன்பிறந்த உணர்வு ஒரு முக்கியமான கருவி, நற்கருணை  மற்றும்  சிறிய அடிமட்ட சமூகங்கள், பெந்தகொஸ்தே மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் இன்றைய சவால்கள் ஆகிய தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

மனித மாண்பிற்கு எதிரான செயல்களை கண்டித்த தான்சானியா ஆயர் பேரவையானது, சமூகம் நலம் பெற வேண்டிய தேவையில் உள்ளது என்றும், ஒன்றிப்பின் உரையாடலுக்கு நம்மை அழைக்கும் நற்கருணை ஆண்டவரிடமே சமூகத்தை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது என்றும் மாநாட்டின் முடிவில் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது.

உடன்பிறந்த உணர்வு இயல்பாகவே மனிதனுக்குள் உள்ளது என்பதற்கும், மனிதன் இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளான் என்பதற்கும் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம் உடலாலும் இரத்தத்தாலும் நமக்கு ஊட்டமளித்து நம் சகோதரர் ஆகிறார் என்பதற்குமான தொடர்பை விளக்கிய Dar Es Salaam  உயர்மறைமாட்ட அருள்தந்தை அருள்பணி Joseph Mosha அவர்கள், காயப்பட்டிருக்கும் மனிதகுலத்தைத் குணப்படுத்த, கிறிஸ்தவ உடன்பிறந்த உணர்வை  நாம் அங்கீகரித்து நம்முடையதாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

சிறிய சமூகங்கள் நற்கருணையின் சமூகங்களாக இருக்க வேண்டுமெனவும் நம் வாழ்வின் எல்லாவற்றின் மையம் கிறிஸ்துவே என்றும் வலியுறுத்திய அருள்தந்தை Benno Kikudo அவர்கள், அன்றாட வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் எப்போதும் தீர்வுகளைத் தேடுகிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

பயனற்றவைகளில் நம்பிக்கை வைப்பதால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும், பொருளாதார ரீதியாக கொள்ளை அடிக்கப்படுகிறார்கள் என்று உணரும் போது  தங்கள் நம்பிக்கையில் தடுமாறுகிறார்கள் என்றும் கூறிய அருள்தந்தை Leonard Maliva அவர்கள், இந்த சவாலை எதிர்கொள்ள, இழந்த திருஅவையின் பிள்ளைகளை அடையாளம் கண்டு உதவுவதற்கான முயற்சியை கத்தோலிக்க திருஅவை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2024, 13:04