திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – யூபிலி ஆண்டு ஆணைமடல் பகுதி - 1
மெரினா ராஜ் – வத்திக்கான்
"எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; (உரோமர் 5:5). என்ற தலைப்பில் யூபிலி ஆண்டிற்கான ஆணை மடல் ஒன்றினைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024 ஆம் ஆண்டு மே 9 வியாழனன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவின் திருப்புகழ் மாலை வழிபாட்டிற்குப் பின்னர் எடுத்துரைத்து வெளியிட்டார். அந்த ஆணை மடலில் இடம்பெற்றுள்ள கருத்துக்களின் அடைப்படையில் அதன் முதல் பகுதியை இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.
இந்த மடலை வாசிப்பவர்களின் இதயமானது எதிர்நோக்கால் நிரப்பப்படும் என்ற தலைப்புடன் ஆரம்பமாகும் இந்த மடலின் முதல் பகுதியானது திருத்தூதர் பவுலின் வார்த்தைகளான எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற வரிகளுடன் ஆரம்பமாகின்றன. நம்பிக்கையின் அடையாளமாக திருத்தூதர் பவுல் உரோமின் கிறிஸ்தவ சமூகத்திற்கு துணிவை ஊட்டுகின்றார். இந்த எதிர்நோக்கானது வரவிருக்கும் யூபிலியின் முக்கிய செய்தியாகும். பண்டைய கால பாரம்பரியத்தின்படி ஒவ்வொரு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி கொண்டாட திருத்தந்தை அழைக்கிறார். யூபிலி ஆண்டை சிறப்பிக்க வாழ உரோம் நகருக்கு வரும் அனைத்து திருப்பயணிகளையும், திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுலின் நகரமான உரோமிற்கு வருகை தர இயலாமல் அவரவருக்குக் குறிக்கப்பட்ட தலத்திருஅவைகளில் சிறப்பிக்க இருக்கும் அனைவரையும் நினைத்துப் பார்க்கின்றேன். மீட்பின் கதவான இயேசுவுடனான ஒரு வாழும் சந்திப்பாக தனிப்பட்ட சந்திப்பாக, தருணமாக மீட்பின் பாதையாக இந்த யூபிலி ஆண்டு இருக்கும். அவருடன் இணைந்து திருஅவை எப்போதும் எங்கும் எல்லாருக்கும் நமது எதிர்நோக்கை அறிவிக்கும் பணியைச் செய்யும்.
ஒவ்வொரு நபரின் இதயத்திலும் பொதிந்திருப்பது எதிர்நோக்கு என்னும் ஆசை, நல்ல எதிர்பார்ப்பு. எதிர்காலத்தை சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்ற, சவாலுக்கு ஆளாகின்றவர்களை நாம் அடிக்கடி சந்திக்கிறோம், அவர்களுக்கு எதுவுமே மகிழ்ச்சியைத் தருவதில்லை. இத்தகைய அனைவருக்கும் புத்துயிர் அளிக்க யூபிலி ஆண்டு ஒரு சந்தர்ப்பமாக இருக்கின்றது. அதற்கான காரணங்களைக் கண்டறிய கடவுளுடைய வார்த்தை நமக்கு உதவுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்