திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – யூபிலி ஆணைமடல் பகுதி 2

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற தலைப்பில் தனது ஆணை மடலினை வெளியிட்ட திருத்தந்தை அவர்கள் திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், உரோம் நகர மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பைப் பற்றி கூறுவதாக எடுத்துரைத்துள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்பு நேயர்களே திருஅவையில் யூபிலி ஆண்டு 2025ஐ முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஆணைமடலில் உள்ள கருத்துக்களைக் கடந்த வாரம் முதல் அறிந்துகொண்டிருக்கும் நாம் இன்றைய நிகழ்வில் அவ்வாணைமடலில் உள்ள எண் 2 உணர்த்தும் எதிர்நோக்கின் வார்த்தை என்ற தலைப்பின் கீழ் உள்ளக் கருத்துக்களைக் காண்போம்.

எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது என்ற தலைப்பில் தனது ஆணை மடலினை வெளியிட்ட திருத்தந்தை அவர்கள் திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், உரோம் நகர மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு ஆகியவற்றைப் பற்றி கூறுவதாக எடுத்துரைத்துள்ளார்.

நமது நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். இத்தகைய அருள்நிலையைப் பெற்றிருக்கும் நாம், இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது. ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. திருத்தூதர் பவுல் வழங்கும் பல நுண்ணறிவுகள் இவ்வார்த்தைகளில் உள்ளன. உரோமையர்களுக்கு எழுதிய திருமடல் அவருடைய நற்செய்தி நடவடிக்கையில் ஒரு உறுதியான நிலையைக் குறிக்கிறது. அதுவரை பேரரசின் கிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொண்ட அவருக்காக, இப்போது உரோம் காத்திருக்கிறது என்பது உலகின் பார்வையில் பிரதிபலிக்கிறது.

நற்செய்தி அறிவிப்பு என்ற பெயரில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரிய சவால், திருத்தூதர் பவுலின் பயணங்கள். தடைகள் அல்லது எல்லைகளை அறிந்துகொள்ள முடியாத ஒரு பயணம். உரோம் திருஅவை திருத்தூதர் பவுலால் உருவாக்கப்படவில்லை. இருப்பினும் அதை விரைவில் அடைய வேண்டும், இறந்த மற்றும் உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். எதிர்நோக்கின் அறிவிப்பானது வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கையின் அறிவிப்பாகவும், மாட்சியையும், புகழையும் கொண்டு வருகின்றதாகவும், ஒருபோதும் ஏமாற்றம் தராததாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அன்பினால் நிறுவப்பட்ட திருஅவை அது ஒருபோதும் ஏமாற்றம் தராது என்பதை தனது வார்த்தைகளாலும் செயல்களாலும் எடுத்துரைத்தார் திருத்தூதர் பவுல். ஏனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது என்பதை முழுமையாக அவர் நம்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 October 2024, 13:37