உக்ரைன் பேராயர் Sviatoslav Shevchuk உக்ரைன் பேராயர் Sviatoslav Shevchuk  

உக்ரேனிய மக்களுக்கு ஜெபம், பொருள் உதவிகள் கேட்கும் பேராயர்

உக்ரைனில் ஏறக்குறைய 60 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை இனிவரும் நாட்களில் எதிர்கொள்வார்கள் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் பேராயர் Sviatoslav Shevchuk

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

போர்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய மக்களுக்கு ஜெபம் மற்றும் பொருள் உதவிகள் வழியாக ஆதரவு அளிக்குமாறு உலகளாவிய சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்  உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருஅவையின்  தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk.

இரஷ்யாவின் தொடர் தாக்குதலால், உக்ரைனின்  மக்களும், மனிதநேய நடவடிக்கைகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வரும் நிலைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனான உரையாடலை வத்திக்கான் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார் பேராயர்.

உக்ரைனின் நிலை, போரின் பேரழிவு, எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் ஆகியவைப் பற்றியும் திருத்தந்தையிடம் தெரிவித்ததாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உக்ரைன் மீதும், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன்  மக்கள் மீதும்  மிகுந்த அக்கறையும் கவலையும் கொண்டுள்ளார் எனவும் பேராயர் தெரிவித்தார்.

இச்சூழ்நிலையில், உக்ரேனிய திருஅவையின் வாழ்வு குறித்தும், குறிப்பாக, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரேக்க கத்தோலிக்க ஆயர்கள் பங்குபெறும் ஒருங்கியக்கம்  குறித்தும், நற்செய்தி அறிவிப்பு என்ற கருப்பொருளில் இறைவார்த்தையை எவ்வாறு அறிவிப்பது, நம்பிக்கையிழந்த மக்களுக்கு நம்பிக்கையின் செய்தியை எவ்வாறு கொண்டுச் செல்வது என்பது குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தெரிவித்ததாக பேராயர் Sviatoslav Shevchuk  அவர்கள் கூறினார்.

நவம்பர் 2022இல் இரஷ்யர்களால் கைது செய்யப்பட்ட  இரட்சகர் சபை அருள்பணியாளர்கள்  Ivan Haleta  மற்றும்  Bohdan Levytskyy  உட்பட 10   உக்ரேனிய மக்களை விடுவிக்க  உறுதுணையாக இருந்த ஆயர்கள்  மற்றும் அருள்பணியாளர்களின் வீரமிக்க சேவைக்கு  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்ததுடன் தனது ஜெபங்களையும், ஆசிர்வாதங்களையும் உறுதியளித்தார் என்றும் கூறினார் பேராயர்.

பசித்தவர்களுக்கு நாம் உணவளிக்க வேண்டும் என்று கூறிய பேராயர் Shevchuk அவர்கள், உக்ரைனில் ஏறக்குறைய 60 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை இனிவரும் நாட்களில் எதிர்கொள்வார்கள் என்றும், பாதிக்கப்படும்  மக்களுக்கு பொருளுதவியையும், ஒருமைப்பாட்டையும், ஜெபங்களையும் வழங்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2024, 15:38