நற்செய்திப் பணிக்கான அர்ப்பணிப்பை ஆழப்படுத்த அழைக்கும் மாதம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மறைப்பணி மாதம் என்றழைக்கப்படும் இந்த அக்டோபர் மாதத்தில் உலகளாவிய திருஅவையானது நற்செய்தியைப் பரப்பும் பணிக்கான புரிதலையும் அர்ப்பணிப்பையும் ஆழப்படுத்த நம்மை ஒன்றுபடுத்துகின்றது என்றும், செபமாலை அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தப்படும் இம்மாதத்தில் அவரைப்போல துணிவுடன் திருஅவைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பேராயர் பீட்டர் மச்சாடோ
அண்மையில் பெங்களூர் உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்ற மறைப்பணி மாத துவக்கக்கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பெங்களூர் உயர்மறைமாவட்டப் பேராயர் பீட்டர் மச்சாடோ.
இன்றைய உலகில் மறைப்பணியானது முக்கியத்துவம் பெற்றது, நம்பிக்கை மற்றும் அன்பின் செய்தியை பரப்புவதில் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்று மக்களுக்கு அழைப்புவிடுத்த பேராயர் அவர்கள், இம்மாதத்தில் செபம், சிந்தனை மற்றும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொருவரும் அவரவர் தனித்துவமான வழிகளில் கிறிஸ்துவின் மறைப்பணியாளர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திருஅவை வரலாற்றின் மிகத்துணிவான பெண்ணாக, சீடர்களுடன் இருந்து தூயஆவியின் கொடைகளைப் பெற வழிவகுத்த அன்னை மரியா போல நாமும் துணிவுள்ளவர்களாக திருஅவையின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும் என்றும், இயற்கையின் மதிப்பையும் சுற்றுச்சூழலைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்த புனித பிரான்சிஸ் அசிசியின் வலியுறுத்தியபடி வாழவும் வலியுறுத்தினார் பேராயர் மச்சாடோ.
மறைப்பணிகளின் பாதுகாவலரான புனித குழந்தை இயேசுவின் தெரசா போன்று பணிமுயற்சிகளின் வெற்றிக்காக துன்பத்தையும் தியாகத்தையும் ஏற்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய பேராயர் அவர்கள், எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் சிறப்பிக்க இருக்கும் யூபிலி 2025 ஆம் ஆண்டு குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்