மொசாம்பிக் பேராயர் Inácio Saúre மொசாம்பிக் பேராயர் Inácio Saúre 

பன்னாட்டு அமைப்புகள் மொசாம்பிக் அகதிகளை மறந்துள்ளன

ஏழ்மையாலும், வேலைவாய்ப்பின்மையாலும், உள்நாட்டுப்போர் பதட்ட நிலைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மொசாம்பிக் இளையோர், தொடர்ந்து ஏமாற்றங்களையேச் சந்திக்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மொசாம்பிக் நாட்டின் வடபகுதியில் உள்ள Cabo Delgado மாவட்டத்தில் இடம்பெறும் மோதல்களால் அடைக்கலம் தேடி Nampula மாவட்டத்திற்குள் புகுந்துள்ள மக்களை அனைத்துலக சமுதாயமும் கைவிட்டுவிட்டதால் தலத்திருஅவையின் உதவிகளை நம்பியே அவர்கள் வாழ்வதாக மொசாம்பிக் ஆயர் பேரவைத்தலைவர் பேராயர் Inacio Saure அவர்கள் தெரிவித்தார்.

நாட்டிற்குள் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுள் பெரும்பான்மையினரை வரவேற்றுள்ள நம்பூலா மாவட்டம், தன்னிலையிலேயே அதிக அளவு மக்களை உள்ளடக்கிய மாவட்டமாக இருப்பதால் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன என்ற நம்பூலா உயர்மறைமாவட்ட பேராயரும், மொசாம்பிக் ஆயர் பேரவைத்தலைவருமான பேராயர் Saure அவர்கள், அகதிகள் அடைக்கலம் தேடி வந்தபோது உதவிபுரிய வந்த பன்னாட்டு உதவி அமைப்புகள் அனைத்தும் தங்கள் உதவிகளை குறைத்துள்ளதால், தலத்திருஅவையை மட்டும் சார்ந்து இம்மக்கள் வாழ்வதாகத் தெரிவித்தார்.   

நம்பூலா மாவட்டத்தில் 8000 மக்கள் அகதிகளாக வாழ்ந்துவந்த நிலையில் தற்போது 6000க்கும் சிறிது அதிகமான மக்களே வாழ்ந்து வந்தாலும், பன்னாட்டு உதவி அமைப்புகள் இம்மக்களை முற்றிலுமாக மறந்து விட்டதுபோல் தெரிவதாக உரைத்தார் பேராயர்.

மறைமாவட்ட மற்றும் தேசிய அளவிலான காரித்தாஸ் அமைப்புகளின் வழி அகதிகளுக்கான உதவிகளை ஆற்றிவருவதாகவும், பன்னாட்டு உதவி அமைப்புகளின் நிதியுதவிகள் குறைந்துள்ளதால் காரித்தாஸ் அமைப்புகளும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக உரைத்த மொசாம்பிக் ஆயர் பேரவைத்தலைவர், வடபகுதியின் மோதல்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதாகவும் கவலையை வெளியிட்டார்.

ஏழ்மையாலும், வேலைவாய்ப்புகளின்மையாலும், உள்நாட்டுப்போர் பதட்ட நிலைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கும் இளையோர், நகர்களுக்கு புலம்பெயர்ந்துச் சென்று ஏமாற்றங்களையேச் சந்தித்துவருவதால், அவர்களுக்கு பயிற்சி முகாம்களை அமைக்க தலத்திருஅவை முயன்றுவந்தாலும், அதனிடம் போதிய நிதி வசதிகள் இல்லை என கவலையை வெளியிட்டார் பேராயர் Saure.

உயர்ந்த தரத்துடன் கல்வியை மக்களுக்கு வழங்கிவரும் கத்தோலிக்கப் பள்ளிகள், தற்போது அரசின் வரிவிதிப்பால் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார் ஆயர் பேரவைத் தலைவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2024, 15:34