கல்லறை திருநாள் கல்லறை திருநாள் 

வாரம் ஓர் அலசல் – நவம்பர் 2. இறந்தோர் நினைவு நாள்

இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்‌தை உயிர்த்தெழச்‌ செய்தார்‌. அவ்வாறு நாமும்‌ புது வாழ்வு பெற்றவர்களாய்‌ வாழும்படி திருமுழுக்கின்‌ வழியாய்‌ அவரோடு அடக்கம்‌ செய்யப்பட்டோம்‌.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இன்று இருப்போர் நேற்று இருந்தோரை நினைவுகூறும் நாள் இந்நாள். அவர்கள் நேற்று நம்மோடு, நமக்காக இருந்ததால், இன்றும் என்றும் அவர்கள் நம்மோடும் நமக்காகவும் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவுறுத்தும் நாள் இது.

சீடன் ஒருவன் தன் குருவிடம் கேட்டான்,  "உலகிலேயே அதிசயமான விடயம் எது? என்று.  குரு அவனிடம், "தன் கண்முன்னே உலகத்தார் ஒவ்வொருவராக இறந்தாலும், தாம் மட்டும் இறக்கமாட்டோம் என்பதுபோல் மனிதர் வாழ்வதே, உலகில் அதிசயமான விடயம்" என்றார். நவம்பர் 2ல் நாம் இறந்த அனைத்து விசுவாசிகளையும் நினைவு கூர்கிறோம். ஆனாலும் நாமும் ஒருநாள் இறப்போம் என்கிற உண்மை மட்டும் ஏனோ நம்மை தொடுவதில்லை. பிறப்பும் இறப்பும் இன்றும் இறைவன் கையில்.

திருமுழுக்கினால்‌ கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும்‌ நாம்‌ அனைவரும்‌ அவருடைய சாவிலும்‌ அவரோடு இணைந்திருக்கிறோம்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்‌தை உயிர்த்தெழச்‌ செய்தார்‌. அவ்வாறு நாமும்‌ புது வாழ்வு பெற்றவர்களாய்‌ வாழும்படி திருமுழுக்கின்‌ வழியாய்‌ அவரோடு அடக்கம்‌ செய்யப்பட்டோம்‌. ௮வர்‌ இறந்தது போலவே நாமும்‌ அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழந்தது போலவே நாமும் அவரோடு உயிர்த்தெழுவோம் (உரோ. 6:3-5) என்கிறார் புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில்.

இறந்தோர்‌ நினைவு என்பதன்‌ அர்த்தமே, நம்மை விட்டுப்‌ பிரிந்தவர்‌, இறைவனோடு என்றென்றும்‌ வாழ்கிறார்‌; அந்த வாழ்வை நினைத்து, இறைவனின்‌ முடிவில்லா வாழ்வுக்கு நன்றி கூறுவதே இறந்தோரின்‌ நினைவைச்‌ சிறப்பிப்பதாகும்‌.

நேற்று நம்மோடு இருந்த இவர்கள் நமக்கு வாழ்வில் வழி காட்டியவர்கள், நமக்கு வழி விட்டவர்கள் மற்றும் வழித்துணையாக வருபவர்கள்.

இவ்வுலக வாழ்வு கல்லறையோடு முடிவடைவதில்லை, அதையும் தாண்டி ஒரு வாழ்வு உண்டு. இறைவனோடு நாம் வாழப்போகும் அந்த வாழ்வு, இவ்வுலக வாழ்வுக்குப் பொருள் தருகிறது என்ற எண்ணத்தை, இந்த நினைவுநாள் நம் மனதில் ஆழமாகப் பதிக்கிறது.

"பொழுது விடிந்ததும், இரவுக்காக ஏற்றிவைத்த மெழுகுதிரியை அணைப்பதுபோலத்தான் ஒரு கிறிஸ்தவரின் மரணம்" என்ற உருவகம், மறுவாழ்வில் நாம் தொடரப்போகும் உயர்ந்ததொரு வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். மரணம் என்பது ஓர் எதார்த்தம். மரணம் வாழ்வின் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. இருப்பினும் மண்ணில் பிறக்கும் ஒவ்வோர் உயிரும் இறப்பைச் சந்தித்தே ஆகவேண்டும்.

இறப்பு என்றால் வாழ்க்கை முடிந்து விட்டது என்பதல்ல. இறப்பு என்பது ஒரு வெற்றிடம் ஆகிறது. இங்கு இறக்கக்கூடிய ஒவ்வோர் ஆன்மாவும் விண்ணுலகில் பிறக்கிறார்கள். மண்ணுலகில் மறையக் கூடிய ஓர் ஆன்மா விண்ணகத்தில் புதிதாகப் பிறக்கிறது. இதுவே நமது திருஅவை நமக்கு கற்பிக்கக் கூடிய ஆழமான மறையுண்மையாக உள்ளது.

ஒவ்வொரு நாளும் நாம் நமது இறப்பை எதிர்நோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கிறோம். நாம் அனைவரும் கண்டிப்பாக ஒருநாள் இந்த மண்ணை விட்டு  மறைந்துபோவோம். மறைவதற்குள் நாம் கண்டிப்பாக பலவிதமான நல்ல செயல்களை செய்தாகவேண்டும்.

நமது சாவை அழிவாகப் பார்ப்பதைவிட நிலை வாழ்வுக்குச் செல்லும் வழியாகப் பார்க்க அழைக்கப்படுகின்றோம்.

இறந்த அனைத்து விசுவாசிகளின் நினைவுநாளை திருஅவை நவம்பர் 2ல் கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளிலே நம்முடைய குடும்பங்களில், சமுதாயத்தில் வாழ்ந்து மரித்த அனைத்து ஆன்மாக்களுக்காக அதிலும் சிறப்பாக உத்தரிக்கிற தலத்தில் இருக்கக்கூடிய ஆன்மாக்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம்.

இறந்த அனைத்து ஆன்மாக்களுடைய நினைவுநாளைக் கொண்டாடும் வேளையில் இறந்த அவர்களுக்காக ஜெபிப்போம். அத்தோடு நாம் வாழும் இந்த மண்ணுலக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம். அன்பு செய்து வாழ்வோம். இறந்த விசுவாசிகள் என்றும் நமக்கு வழித்துணையாக வருவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2024, 14:32