பாலஸ்தீனியர்களின் பெருந்துயர் முடியும்போதே அமைதி திரும்பும்
ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்
இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு எதிராக பல ஆண்டுகளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் தற்போது தீவிரமடைந்து இஸ்ராயேல் இராணுவம் அழிவையும் மரணத்தையும் விதைத்து வருவது, அமைதிக்கு இட்டுச் செல்லாது, ஏனெனில், பாலஸ்தீனிய மக்களின் பெருந்துயர் முடிவுக்கு வரும்போதே அமைதி திரும்பும் என்றார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முன்னாள் முதுபெரும்தந்தை Michel Sabbah.
ஓர் ஆண்டிற்கு முன் இஸ்ராயேலின் யூதர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல், உலகப் போர் என்னும் படுகுழியை நோக்கி, முழு உலகையும் இழுத்துச் செல்லும் மரணம் மற்றும் அழிவின் பாதையைத் திறந்துள்ளது என்ற அச்சத்தை வெளியிட்ட முதுபெரும்தந்தை Sabbah, மற்றும் “Christian Reflection” என்ற அமைப்பு, இங்கு நிகழும் மரணம் ஒரு கடுமையான தொடர் நிகழ்வாகிறது என்றும், இங்குள்ள மக்கள் கவலை மற்றும் அச்சத்தால் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், புனித பூமி முழுவதும் இடிபாடுகளுக்கு உள்ளான நிலையில் குறிப்பாக காஸாவில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக தினமும் துயருற்று வருவதாகவும், வீடுகள், மருத்துவமனைகள் பள்ளிகள் என அனைத்தும் இடிபாடுகளின் குவியலாக உள்ளன என்றும் கூறியதோடு நோய், பட்டினி, நம்பிக்கையின்மை தங்களை ஆட்சி செய்கிறது என்றும் இவர்கள் விவரித்துள்ளனர்.
போர் நிறுத்தம், மற்றும் இந்த பேரழிவை நிறுத்துவதற்கான உலகளாவிய அமைப்புகளின் அழைப்புகள், அழிவை ஏற்படுத்துபவர்களை தடுப்பதற்கான எந்தவித அர்த்தமுள்ள முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்தவர்களின் உதவியற்ற, துயரமான இந்நிலையிலும் உயிர்த்த கிறிஸ்துவில் நம்பிக்கையுடன் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்றும் இவர்கள் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து கொண்டிருப்பது மதப்போர் அல்ல என்று வலிறுத்தியதுடன் நீதி, ஒன்றிப்பு, அமைதி, மற்றும் விடுதலையின் பக்கம் நாம் நிற்க வேண்டும் என்றும், மரணம் மற்றும் அழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் இஸ்லாமியர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைவருடனும் நிற்க வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளனர் இவர்கள்.
எல்லா மனிதர்களும் நேசிக்கப்பட வேண்டும், எல்லோரும் சமமானவர்கள், கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள், கடவுளின் குழந்தைகள் மற்றும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்று உயிர்த்த கிறிஸ்துவின் நம்பிக்கை நமக்குக் கற்பிக்கிறது என்பதை மனதில்கொண்டே, பள்ளிகள் மருத்துவமனைகள் என அனைத்திலும் கிறிஸ்தவம் பாகுபாடற்ற சேவையைப் புரிந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலஸ்தீனிய மக்களின் துயரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே அமைதி சாத்தியமாகும் என்று கூறியதுடன், தற்காலிக போர் நிறுத்தம் அல்லது இடைக்கால தீர்வுகள் அல்ல, இரு தரப்பினர்களுக்கும் இடையில் ஒரு உறுதியான அமைதி ஒப்பந்தம் தேவைப்படுகிறது என்றும் விவரித்துள்ளது.
இந்த போரின் மூல காரணம் பாலஸ்தீனிய மக்கள் தங்கள் நிலத்தில் சுதந்திரமாகவும் சமமாகவும் வாழ்வதற்கான உரிமையை மறுப்பதே என்பதை அங்கீகரித்து உலகளாவிய சமூகம் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்