இறைவனை  நோக்கி செபிக்கும் தாவீது அரசர் இறைவனை நோக்கி செபிக்கும் தாவீது அரசர் 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-2, தீயவர்களுக்கும் நன்மை செய்வோம

தீமை செய்யும் தீயவருக்கும் பொல்லாருக்கும் நன்மை செய்யும் தாவீதின் உன்னதமான உளப்பாங்கை நாமும் அணிந்துகொள்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 59-2, தீயவர்களுக்கும் நன்மை செய்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘துன்பத்திலும் தூயோராய் வாழ்வோம்!’ என்ற தலைப்பில் 59-வது திருப்பாடலில் 1 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். அன்றைய தியானச் சிந்தனையின் இறுதியில், நமது அன்றாட வாழ்வில், யார் நமக்கு என்ன தீங்கு செய்தாலும் அவர்களை வெறுக்காது அன்புசெய்யும் தூய உள்ளத்தை நமக்கு வழங்கிடுமாறு இறையருள்வேண்டி மன்றாடினோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 10 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர். அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை; ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?’ என்கின்றார்கள். ஆனால், ஆண்டவரே, நீர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றீர்; பிற இனத்தார் எல்லாரையும் பார்த்து நீர் ஏளனம் செய்கின்றீர்; நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்; ஏனெனில், கடவுளே! நீரே என் அரண். என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார்” (வச. 6-10).

இத்திருப்பாடலின் தொடக்க முதல் தனது எதிரிகளின் கொடிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் விவரித்து வரும் தாவீது அரசர், தொடர்ந்து வரும் இறைவார்த்தைகளிலும் அவர்களின் தீய வழிமுறைகளை எடுத்துரைத்து கடவுள் தன்னைப் பாதுகாக்குமாறு வேண்டுகிறார். தாவீதின் இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அவர் மன்னர் சவுலுக்கு செய்த நற்காரியம்தானே! சவுலின் நன்றிமறந்த செயல்தானே தாவீதுக்கு இத்தனை பெரிய  துயரங்களைக் கொண்டு வந்தது? இதன் பின்னணியில் இப்போது சிறியதொரு கதையுடன் இன்றைய நமது விவிலியத் தேடல் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம்.

முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தார்  ஒரு மனிதர். அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. உடனே அவர் பயத்துடன் ஓடத் தொடங்கினார். “மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்ற குரல் கேட்டது. தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றார் அவர். அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது. மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு… நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்” என்றது. அதற்கு அம்மனிதர், “நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?” என்றார்.

“மனிதர்களைக் கொல்லும் பழக்கம் எங்களுக்கு உண்டுதான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று நைசாகப் பேசியது சிங்கம். சிங்கத்தின் வார்த்தைகளை உண்மையென்று நம்பிய அவர், கூண்டின் கதவைத் திறந்தார். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் அம்மனிதர் மேல் பாய்வதற்குத் தயாராயிற்று. இதனைக் கண்ட அவர், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன் பேச்சை நம்பிதானே உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேன். அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி” என்று கேட்டார். அதற்கு சிங்கம், “என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எப்படி நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்றுதானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று நீ பகுதித்தறிந்திருக்க வேண்டாமா? முட்டாள்தனமான உன் செயலுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?” என்றது. அப்போது அம்மனிதர், “கடவுள் உன்னைத் தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா?” உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல,” என்றார்.  

அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது. "இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதர் நடந்த கதை அனைத்தையும் நரியிடம் கூறினார். "எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இம்மனினுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செயலுக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்கிறாய் நரியாரே...'' என்று கேட்டது. அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்துவிட்டது. ஆகவே, உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல்பட்டது நரி. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து. "நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியாது. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி. உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.

"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...'' "எந்தக் கூண்டிற்குள்?'' என்று கேட்டது நரி. "அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம். "எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்று நரி கேட்க, சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் தக்க சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது. "நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம். "நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் இம்மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்று கூறியது நரி.

நாம் தியானிக்கும் இன்றைய இறைவார்த்தைகள் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதியில், எதிரிகளின் கொடிய நடவடிக்கைகளைப் எடுத்துரைக்கும் தாவீது, இரண்டாவது பகுதியில், கடவுளின் அருள்கர உதவியை நாடுகிறார். முதலில், “அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர்" என்கிறார் தாவீது. நாயின் பொதுவான பண்புகள் என்னவாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இரவெல்லாம் குரைத்துத் திரியும் நாய்கள் பகலெல்லாம் தூங்கிவழியும். ஒவ்வொரு நாளும் மாலை நேரம் வந்துவிட்டாலே போதும் தங்களின் குரைக்கும் வேலையைத் தொடங்கிவிடும். நல்லார் பொல்லார் என அறியாது, பார்க்கும் எல்லாரையும் குரைக்கும். இதனால், சிலவேளைகளில் ஒன்றுமறியா குழந்தைகள் கூட பாதிப்பைச் சந்திக்கும். நாயின் இன்னொரு முக்கியமான குணங்களில் ஒன்று, அது தனது இனத்தைச் சேர்ந்த மற்றொரு நாயை பெரும் எதிரியாகத்தான் பாவிக்கும். இதனை நாம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பலமுறை பார்த்திருப்போம். தனது எதிரிகள் இத்தகைய மனநிலையைக் கொண்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே “அவர்கள் மாலைவரை காத்திருந்து, அதன்பின் நாய்களைப் போலக் குரைத்து கொண்டு நகரினுள் சுற்றித் திரிகின்றனர்” என்று உருவகமாக கூறுகின்றார் தாவீது. மேலும் "தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்" என்றும், "வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்" (காண்க திபா 22:16,20) என்றும், தாவீது அரசர் 22-வது திருப்பாடலில் உரைப்பதைப் பார்க்கின்றோம்.

அடுத்து, "அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை; ‛நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?’ என்கின்றார்கள்"  என உரைக்கின்றார் தாவீது. இங்கே, "அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை" என்னும் வார்த்தைகள் வாள் எந்தளவுக்குக் கொடியதோ, அதே அளவுக்கு அவர்களின் வாயினின்று வெளிப்படும் சொற்களும் கொடியதாக இருக்கக் கூடியவை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஓர் உருவகமாக இதனைக் கூறுகின்றார் தாவீது.  பொதுவாக, நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பலநேரங்களில் கூரிய வாள்போன்றவையாக இருப்பதால், அவற்றை நாம் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பார்கள். இருவர் சேர்ந்து பேசும்போது ஆள்களைப் பொறுத்து அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் கணிக்கப்படுகின்றன. குறிப்பாக, நாம் எதிரியாகக் கருதுபவர்கள் கூடிவந்து நமக்கு எதிராகப் பேசும்போது அவர்களின் வார்த்தைகள் கொடிய கூரிய வாள்போன்றவையாகத்தான் இருக்க முடியும். காரணம், அவைகள் நம்மைப் பழிதீர்ப்பதற்காக உதிர்க்கப்படும் வார்த்தைகளாக இருப்பதால்தான் அவைகளைக் கூறிய வாள்போன்றவை என்று கருதுகின்றோம். இங்கே தாவீதும் அப்படி கருத்துவதாலேயே, "அவர்கள் வாய் பேசுவதைக் கவனியும்; அவர்களின் நாவின் சொற்கள் வாள் போன்றவை" என்கின்றார். மேலும் "நாங்கள் பேசுவதை கேட்கிறவர் யார்?" என்ற வார்த்தைகளில், தனது எதிரிகள் கொண்டிருக்கும் ஆணவத்தையும், அகங்காரத்தையும், திமிரையும், பழிவாங்கும் உணர்வையும் சுட்டிக்காட்டுகின்றார்.  

இப்படிப்பட்ட நெருக்கடியும் பேரச்சமும் நிறைந்த சூழலில், "கடவுளே! நீரே என் அரண். என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்; கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார்”  என்று கூறி தனது ஒப்பற்ற தலைவராம் என்றும்வாழும் கடவுளிடம் இறைவேண்டல் செய்கிறார். பொதுவாக, தாவீதின் திருப்பாடல்களை நாம் கூர்ந்து கவனித்தோம் என்றால், அவரின் இந்தப் பயன்பாட்டை நாம் கண்டுணர்ந்துகொள்ள முடியும். அதாவது, தனது எதிரிகளின் கொடிய திட்டங்களையும், செயல்பாடுகளையும், பண்புகளையும் அவர் தொடர்ந்து எடுத்துரைக்க மாட்டார். மாறாக, இடையிடையே தன்னைக் காக்குமாறு கடவுளின் பெருந்துணையையும் வேண்டி அவர்களின் தீய குணங்களை எடுத்துக்காட்டுவார். இவ்வாறு அவர் மாறி மாறி பாடிக்கொண்டே போவார். இப்படிப்பட்ட அவரது அணுகுமுறை வழியாக, அவர் தன்னை கடவுளுடன் அதிகம் நெருக்கமாக்கிக் கொள்ள விரும்புவதைப் பார்க்கின்றோம்.

மேலும் "பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன; உரிய நாளில் அவர்களின் கால்கள் தள்ளாடும்; அவர்களது அழிவுநாள் அண்மையில் உள்ளது; அவர்களுக்கு வரப்போகும் கொடுமைகள் தீவிரமாகின்றன” (காண்க. இச 32:35) என்ற இறைவார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, மன்னர் சவுல் உட்பட தனது எதிரிகளை தான் பழிதீர்க்க எண்ணாமல், அதனை ஆண்டவராம் கடவுளிடமே விட்டுவிட்டு, அவரது பேரருளால் தன்னையும் தன் ஆன்மாவையும் காத்துக்கொள்ள விரும்புகின்றார் தாவீது. ஆகவே, தாவீதிடம் விளங்கிய இத்தகைய உன்னதமான உளப்பாங்கை நாமும் அணிந்துகொள்ள இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2024, 12:06