கன்மலையாய்க் காக்கும் கடவுள்.        கன்மலையாய்க் காக்கும் கடவுள்.   (https://i.ytimg.com/vi/Pf9iGXV8i_o/maxresdefault.jpg)

விவிலியத் தேடல்: திருப்பாடல் 60-2, கடவுளின் பிரமாணிக்கம்!

தாவீது அரசரைப் போன்று, நாமும் நமது இறைநம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டு புதிய வாழ்வைத் தொடங்குவோம்.
திருப்பாடல் 60-2, கடவுளின் பிரமாணிக்கம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கன்மலையாய்க் காக்கும் கடவுள்!’  என்ற தலைப்பில் 60-வது திருப்பாடலில் 1 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் கலங்காதிருப்போம். கன்மலையாய்க் காக்கும் கடவுள் நம்மைக் கைவிடவே மாட்டார். அவர் எல்லாவிதமான இன்னல்களிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் நமக்கு விடுதலை அளித்துக் காப்பார் என்று இறைவேண்டல் செய்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 6 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். "உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்! கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்;  வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன். கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா; யூதா என் செங்கோல்! மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன். அரண்சூழ் நகரினுள் என்னை இட்டுச் செல்பவர் யார்? ஏதோம் வரை என்னைக் கூட்டிச் செல்பவர் யார்? கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ! எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்; கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்” (வச.6-12).

முதலில், "உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!" என்ற வார்த்தைகளில் தாவீதின் இறைநம்பிக்கை வெளிப்படுவதைக் காண முடிகிறது. துறவியரின் வாழ்வில் அவர்களுக்குப் பெரும் வெற்றியை அளிப்பது, நம்பிக்கை நிறைந்த இந்த இறைவேண்டல்தான்.  இந்த இறைநம்பிக்கை நமது வாழ்வின் மையமாக வேண்டும். இரண்டாவதாக "கடவுள் தமது தூயகத்தினின்று இவ்வாறு உரைத்தார்;  வெற்றிக் களிப்பிடையே செக்கேமைப் பங்கிடுவேன்; சுக்கோத்துப் பள்ளத்தாக்கை அளந்து கொடுப்பேன். கிலயாது என்னுடையது; மனாசேயும் என்னுடையதே; எப்ராயிம் என் தலைச்சீரா; யூதா என் செங்கோல்! மோவாபு எனக்குப் பாதம்கழுவும் பாத்திரம்; ஏதோமின்மீது என் மிதியடியை எறிவேன்; பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்" என்று தாவீதுக்கு கடவுள் அளிக்கும் பதில்மொழி குறித்து சிந்திப்போம்.. கடவுளின் இந்த வார்த்தைகளில் அவரது பிரமாணிக்கம் நிறைந்திருப்பதைப் பார்க்கின்றோம். கடவுள் எப்போதும் சொன்ன சொல் தவறாதவர், அவரது வாக்குப்பிறழாமை என்றென்றும் போற்றத்தக்கது. "மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை"  (காண்க எசா 55:10-11) என்று இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவனே உரைக்கும் வார்த்தையை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மேலும் "என் பேரன்பை தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்; என் வாக்குப்பிறாழாமையினின்று வழுவமாட்டேன். என் உடன்படிக்கையை நான் மீறமாட்டேன். என் வாக்குறுதியை நான் மாற்றமாட்டேன். ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்; ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்" (காண்க. திபா 89:33-35) என்று தாவீது அரசரும் தனக்கு இறைவன் வாக்குறுதி அளித்ததாக எடுத்துரைக்கின்றார். ஆக, கடவுள் உரைக்கும் இந்த வார்த்தைகளில் எல்லாம், அவரது நன்மைத்தனமும் பிரமாணிக்கமும் மிகுந்திருப்பதைக் காண்கின்றோம். மேலும் இந்த இறைவார்த்தைகளில் இஸ்ரயேலுக்குள்ளும், எதிரி நாடுகளிலும் உள்ள பகுதிகளை விவரிப்பது, தாவீது எழுப்பிய கேள்விகளுக்குக் கடவுள் பதிலளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இங்கே தாவீது தான் ஓர் அரசர் என்றோ, தான் ஒருவனால்தான் இந்த வெற்றிகளெல்லாம் குவிந்தன என்றோ மமதை கொள்ளவில்லை. மாறாக, தான் பெற்ற இந்த வெற்றிகள் அனைத்திற்கும் கடவுள்தான் காரணம் என்பதை எடுத்துரைக்கின்றார்.

குறிப்பாக, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எப்படி யோசுவா வழியாக கடவுள் 12 குலத்தவருக்கும் அவர்களுக்கான நிலங்களையும், கடமைகளையும் பொறுப்புகளையும் பிரித்துக் கொடுத்தார் என்பதும் கடவுளுடைய வார்த்தைகளிலிருந்தே வெளிப்படுவதாகவும் எடுத்துரைக்கின்றார் தாவீது. மேலும், இவ்வுலகில் தனக்கு எதுவும் சொந்தமில்லை, இந்தப் பிறப்பு, பேர், புகழ், ஆட்சி அதிகாரம், வெற்றி, தோல்வி, இன்பம் துன்பம், இறப்பு, உயிர்ப்பு, நிலைவாழ்வு எல்லாமே கடவுள் தனக்கு அளித்தது என்றும், தான் எல்லாம் வல்ல கடவுளுக்கே முற்றிலும் சொந்தம் என்பதையும், கடவுள் உரைக்கும் இந்த வார்த்தைகள் வழியாக தாவீது உணர்ந்துகொள்வதைப் பார்க்கின்றோம். இதன் அடிப்படையில் பார்க்கின்ற போது, "மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. ஆனால், நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்” (காண்க 1 கொரி 3:21-23) என்று கூறும் தூய பவுலடியாரின் வார்த்தைகள் இங்கே மிகவும் ஒப்புநோக்கத் தக்கதாக உள்ளன.

இறுதியாக, "கடவுளே! நீர் எங்களைக் கைவிட்டு வீட்டீர் அன்றோ! கடவுளே! நீர் எங்கள் படைகளோடு புறப்படவில்லை அன்றோ!" என்று கடவுளிடம் முறையிட்டாலும், "எதிரியை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; மனிதர் தரும் உதவியோ வீண்; கடவுளின் துணையால் வீரத்துடன் போரிடுவோம்; அவரே நம் எதிரிகளை மிதித்து விடுவார்” என்ற வார்த்தைகள் வழியாக, மனிதர் கையால் முடியாத அனைத்தையும் கடவுளால் செய்து முடிக்க முடியும் என்று ஆணித்தரமாக நம்பிக்கைக்கொண்டு பாடி இத்திருப்பாடலை நிறைவுசெய்கின்றார் தாவீது.

வாழ்வில் தோல்விகளையே தொடர்ந்து சந்தித்த வந்த மனிதர் ஒருவர் இந்த வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டும் என்றெண்ணி ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது தான் இறப்பதற்கு முன்பு இறுதியாகக் கடவுளிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினார் அவர். “கடவுளே, நான் ஏன் இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?” என்று கேட்டார். அப்போது, கடவுள் வழங்கிய பதில் அவரை வியப்பில் வியப்பில் ஆழ்த்தியது. அவரிடம் கடவுள்,  “ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?” என்று கேட்டபோது, “ஆமாம்” என்று அவர் பதிலளித்தார். மேலும் கடவுள், “நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌லிரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான சூரிய ஒளி, தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன். புதர் செடியின் விதைகள் பூமியில் இருந்து விரைவாக முளைத்தெழுந்து இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை. இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடிகள் வேர் விட்டு பரவலாக வளர்ந்திருந்தன. ஆனாலும் மூங்கில் விதையிலிருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனைக் கைவிட்டுவிடவில்லை. மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை. ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தன. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன. இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை. தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்குப் பூமியில் அதன் வேர்களைப் பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியானதாக மாறின. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதைத் தொடங்கியது. 

எனது படைப்புகளுக்குப் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் வலிமையை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக அம்மனிதருக்குப் ப‌தில‌ளி‌த்தா‌ர் கடவுள். மேலும் “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சனைகளைச் சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ, வேதனையுற்றாயோ, அப்போதெல்லாம் நீ உனக்குள் வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய் என்பதை மறந்துவிடாதே. மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள். மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இப்போது உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான். நீ நன்றாக செழித்து வளர்ந்து உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் இந்தச் சமுதாயத்தையும் வளமாக்கு” என்று அம்மனிதரிடம் கடவுள் கூற, “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?” என்று அவர் கேட்டார் “மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று கடவுள் அவருக்கு நம்பிக்கை அளித்தார். கடவுளின் இந்த நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளால் புத்துணர்வுப் பெற்ற அவர், தனது பழைய வாழ்வைக் களைந்து, புதுவாழ்வைத் தொடங்கப் புறப்பட்டுச் சென்றார்.

தாவீது சோர்ந்துபோன வேளைகளில் எல்லாம், இக்கதையில் வருவதைப் போன்றுதான் அவருக்குக் கடவுள் வலிமையும், நம்பிக்கையும், புதுவாழ்வும் அளித்தார். ஆகவே, தாவீதைப் போன்று, நாமும் நமது இறைநம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டு புதிய வாழ்வைத் தொடங்குவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2024, 08:54