போரில் மன்னர் தாவீது போரில் மன்னர் தாவீது 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 60-1, கன்மலையாய்க் காக்கும் கடவுள்

நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் கலங்காதிருப்போம். கன்மலையாம் கடவுள் எல்லாவிதமான இன்னல்களிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் நமக்கு விடுதலை அளித்துக் காப்பார்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 60-1

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘ஆன்ம பசியைப் போக்குவோம்!’ என்ற தலைப்பில் 59-வது திருப்பாடலில் 14 முதல் 17 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்தோம். நமது தியானச் சிந்தனையின் இறுதியில், ஆதிகாரம், ஆணவம், பழிதீர்த்தல் ஆகிய இவ்வுலகிற்கான பசியைத் தீர்த்துக்கொள்ள முயலாமல், ஆண்டவர்மீதான ஆன்மிகப் பசியைத் தீர்த்துக்கொள்ள இறையருள் வேண்டி மன்றாடினோம். இவ்வாரம் 60-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'விடுதலைக்காக மன்றாடல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 12 இறைவசனங்களைக் கொண்டுள்ள சிறியதொரு திருப்பாடல்தான். 'ஆராம் நகராயிம், ஆராம் சோபா என்ற அரசுகளோடு தாவீது போர் புரிகையில், யோவாபு திரும்பி வந்து உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெட்டி வீழ்த்தியபோது படிப்பினையாகத் தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்' என்று துணைத் தலைப்பிடப்பட்டுள்ளதால், எந்தப் பின்னணியில் இந்தத் திருப்பாடல் எழுதப்பட்டுள்ளது என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ‘லீலிமலர்’ என்ற மெட்டு என்று தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. "உடன்படிக்கையின் லில்லி" என்பதன் பொருள் என்ன? லில்லி மிகவும் அழகான மலர். "உடன்படிக்கையின் லில்லி" என்பதை இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, அவர்கள் வார்த்தைகளைப் பாடக்கூடிய இசையின் பெயராக இருக்கலாம். அல்லது அவர்கள் பாடும்போது இசையமைக்க பயன்படுத்தக்கூடிய இசைக்கருவியின் பெயராக இருக்கலாம்.  

தாவீது போரில் ஈடுபட்டிருந்தார். அவர் வீட்டிலிருந்து வெகு தொலைவில், அதாவது, யூப்ரத்தீசின் நதிக்கு அருகில் இருந்தார். அப்படியென்றால், அவர் பாபிலோனில் இருந்தார் என்று அர்த்தப்படுகிறது, இதன் பழைய பெயர் மெசபதோமியா மற்றும் நவீனப் பெயர் ஈராக். தாவீது அரசர் எங்கிருந்தார் என்பதை சாமுவேல் இரண்டாம் நூல் எடுத்துரைக்கின்றது. யூப்பரத்தீசு நதியருகே தனது ஆட்சியை மீண்டும் அமைக்கச் சென்ற சோபா மன்னன் இரகோபின் மகன் அததேசரையும் தாவீது தோற்கடித்தார். தாவீது அவனிடமிருந்து ஆயிரத்து எழுநூறு குதிரை வீரர்களையும், இருபதாயிரம் காலாள் படையினரையும் சிறைப்பிடித்தார். நூறு தேர்களுக்குத் தேவையானவற்றைத் தவிர மீதியான தேர்க்குதிரைகளைத் தாவீது நரம்பறுக்கச் செய்தார் (காண்க 2 சாமு 8:12). தாவீது மீண்டும் அரண்மனைக்குத் திரும்பும் வழியில் அவர் சிரியர்களுடன் போரிட்டார். இது நடந்து கொண்டிருக்கும் போது, இஸ்ரேலின் பழைய எதிரி ஏதோம் எருசலேமைத் தாக்கத் தொடங்கினான். ஆகவே, ஏதோமியருடன் போரிடுவதற்குத் தாவீது தனது படைவீரர்களில் ஒருவரை இராணுவத்தின் ஒரு பகுதியுடன் அனுப்பினார். அவர்கள் எருசலேம் சென்று, ஏதோமியர்களைத் தோற்கடித்து 12,000 பேரைக் கொன்றனர். இது சாக்கடலுக்கு அருகில் உள்ள உப்புப் பள்ளத்தாக்கில் நிகழ்ந்தது.

இத்தகையச் சூழலில் கடவுள் தன்னையும் தனது மக்களையும் கைநெகிழ்ந்துவிட்டாரோ என்று எண்ணித்தான் இத்திருப்பாடலை எழுதுகிறார் தாவீது. மேலும் ஏதோமின் தாக்குதலின் பின்னணி இதுவாகத்தான் இருக்கமுடியும் என்றும் நம்பினார். இதன் காரணமாகவே, "கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மேலும், ஏதோமியர்கள் இஸ்ரேயலில் உள்ள சில நகரங்களின் மதில்களை உடைத்திருக்க வேண்டும். அல்லது அங்கு வேறு ஏதோ நடந்திருக்க வேண்டும் என்றும் அவர் எண்ணம் கொண்டிருந்தார். அதனால்தான், "நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது" என்று உரைக்கின்றார். எருசலேமில் நிகழ்ந்த ஏதோமியரின் தாக்குதலால் நிலம் நகர்ந்து, மரங்களும் கட்டிடங்களும் விழுகின்றன. தரையில் வெடிப்புகளும் பள்ளங்களும் ஏற்பட்டு, அவற்றில் விலங்குகளும் மக்களும் விழுகின்றனர். தாவீதுக்கும் அவருடைய மக்களுக்கும் இதையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. ஆகவேதான், "நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது" என்கிறார் தாவீது. மேலும் இத்தகைய சூழல் மது அருந்திவிட்டு போதையில் இருப்பதைப் போன்றதொரு உணர்வைத் தருவதாகவும், “கடவுளே, இது ஏன் நடக்கிறது என்பதை இந்நேரம் வரை நாங்கள் அறிந்திருக்கவில்லை” என்று கூறும் தாவீது, “இதனை ஏன் அனுமதித்தீர்?” என்றும்  கேள்வியெழுப்புகின்றார். "உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்" என்ற தாவீதின் வார்த்தைகளில் அவரின் இந்த உணர்வு வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். இறுதியில், கடவுள் தாவீதிக்கும் அவர்தம் மக்களுக்கும் பதில்மொழி தந்தார் என்றும், அவர்களுக்கு வெற்றியளித்து உதவி செய்தார் என்றும் உரைக்கிறது இத்திருப்பாடல்.

இத்திருப்பாடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதற்பகுதியில் (1-5), போர்சூழல், அச்சம், கையறுநிலை ஆகியவற்றைக் குறித்து எடுத்துரைத்துக் கடவுளிடம் விண்ணப்பிக்கின்றார். இரண்டாவது பகுதியில் (6-9), கடவுள் தம் தூயகத்தினின்று அவரின் விண்ணப்பித்திற்குப் பதிலளிப்பதாகக் குறிப்பிடுகின்றார். மூன்றாவது பகுதியில் (10-12), போரில் வெற்றிபெற கடவுளின் பெருந்துணையை வேண்டி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. இப்போது இத்திருப்பாடலில் 1 முதல் 5 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். முதலில் அவ்வார்த்தைகளைப் பக்தியுடன் வாசிப்போம். "கடவுளே! நீர் எங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டீர்; எங்களை நொறுக்கிவிட்டீர்; எங்கள்மீது சீற்றம் கொண்டீர்; இப்பொழுதோ, எங்களை நோக்கித் திரும்பியருளும். நிலத்தை நீர் அதிரச் செய்தீர்; அதில் பிளவு உண்டாகச் செய்தீர்; அதன் வெடிப்புகளைச் சீர்ப்படுத்தும், அது ஆட்டம் கண்டுள்ளது; உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். உமக்கு அஞ்சி நடப்போர் எதிரிகளின் அம்பினின்று தப்பித்துக்கொள்ளுமாறு அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர். உம் அன்பர்கள் விடுதலை  பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!" (வச. 1-5).

இத்திருப்பாடல், தாவீது தனது வருத்தத்தையும் திகிலையும் வெளிப்படுத்துவதில் தொடங்குகிறது. இருந்தபோதிலும், அவருடைய வார்த்தைகள் கடவுளுடைய செயல்களின் அடிப்படையில் மட்டுமே பேசுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இச்சூழலில் கூட, தாவீதின் உள்ளுணர்வு இறைவனை எல்லாவற்றிக்கும் மேலானவராகப் பார்க்கத் தூண்டுகிறது. அதேவேளையில், கடவுள் தங்களுக்கும் தங்களின் மூதாதையருக்கும் அளித்த நிலம் எதிரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு பாழ்ப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார். இங்கே “உம் மக்களைக் கடும் துன்பத்தைக் காணச் செய்தீர்; மதியை மயக்கும் மதுவை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்" என்ற அவரின் வார்த்தைகள் அவர்கள் பெற்றுள்ள துன்பநிலையை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் கடவுள் தங்களை அவரின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும், இந்தச் சூழ்நிலையிலும் கூட, அவர் தம் மக்களை வழிநடத்துகிறார் என்பதையும் தாவீது அறிந்திருப்பதாகவே இந்த முதல் ஐந்து வசனங்களும் எடுத்துரைக்கின்றன.

அடுத்து, "உமக்கு அஞ்சி நடப்போர் எதிரிகளின் அம்பினின்று தப்பித்துக்கொள்ளுமாறு அவர்களுக்கெனக் கொடி ஒன்றை ஏற்றிவைத்தீர்" என்று கூறுகின்றார் தாவீது. இங்கே கொடி என்பதை ஒரு நாட்டிற்கான அடையாளப் பொருளாக நாம் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, நமது தேசியக் கொடியை நமது நாட்டிற்கான அடையாளமாகக் கொள்வது போன்று. மேலும் போர்க்காலங்களில் வீரர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் தங்கள் கொடியின் கீழ் ஒன்று கூடுவார்கள். அதேவேளையில், எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும், இந்தக் கொடியேற்றப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். ஆக, எதிரிகளை எதிர்கொள்வதற்கும், ஆபத்தான நேரங்களில் அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் இந்தக் கொடி பயன்படுத்தப்படும். மேலும் 'கொடி' என்ற வார்த்தை நம்பிக்கையைத் தரும் ஓர் அடையாளமாகவும் அமைகின்றது. எடுத்துக்காட்டாக, கடல்களில் வழிதவறிப் பயணிக்கும் கப்பல்களுக்கும்,  பாய்மரங்களுக்கும், படகுகளுக்கும் எப்படி கலங்கரை விளக்கம் நம்பிக்கையைத் தரக்கூடியதாக  அமைக்கின்றதோ, அவ்வாறே இந்தக் கொடியும் அமைந்திருந்தது. மேலும் ‘அம்பு’ என்ற வார்த்தையையும் இங்கே பயன்படுத்துகின்றார் தாவீது. இதனை எதிரிகள் விளைவிக்கும் ஆபத்துக்கள் என்றும் நாம் பொருள்கொள்ளலாம். மேலும் இதன் வழியாக, கடவுளுக்கு அஞ்சிநடப்போரை அம்பு என்னும் ஆபத்து எதுவும் அணுகாது என்பதையும் சூசகமாகத் தெரிவிக்கின்றார் தாவீது.

இறுதியாக, "உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு, உமது வலக்கரத்தால் எங்களுக்குத் துணை செய்யும்; எங்கள் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!" என்கின்றார். இங்கே, நாம் முக்கியமானதொரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது, 'நாங்கள் வெற்றிபெறுமாறு' என்று கூறாமல் 'நாங்கள் விடுதலை பெறுமாறு' என்று குறிப்பிடுகின்றார் தாவீது. பொதுவாக, வெற்றியும் தோல்வியும் நிலையானது அல்ல. அதனால்தான், ‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு’ என்பார்கள். ஆனால் விடுதலை என்பது அப்படி அல்ல. அதனை ஒருமுறை பெற்றுவிட்டால் அது காலத்திற்கும் நிலைபெற்றுவிடும். மேலும் விடுதலை என்பதை சுதந்திரம் என்றும் கூறுகின்றோம். இந்தப் பொருளில்தான் நமது நாட்டின் சுதந்திர தின விழாவை, ‘விடுதலை நாள் விழா’ எனவும் அழைக்கின்றோம். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் வெற்றியைவிட விடுதலை என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இதன் காரணமாகவே, எகிப்திலிருந்து தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிய  இஸ்ரயேல் மக்களின் பயணத்தை ‘விடுதலைப் பயணம்’ என்கின்றோம். ஆகவே, நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் கலங்காதிருப்போம். கன்மலையாய்க் காக்கும் கடவுள் நம்மைக் கைவிடவே மாட்டார். அவர் எல்லாவிதமான இன்னல்களிருந்தும் நெருக்கடிகளிலிருந்தும் நமக்கு விடுதலை அளித்துக் காப்பார். இத்தகைய நம்பிக்கையுடன் அவரது அன்பில் நாளும் வளர இறையருள் வேண்டி இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2024, 07:44