இரு கொரிய நாடுகளிடையேயான எல்லை இரு கொரிய நாடுகளிடையேயான எல்லை 

கொரிய நாடுகளிடையே பெருகிவரும் இடைவெளி குறித்து கவலை

வட கொரிய அரசு, தென் கொரியாவிற்கான அனைத்து சாலை மற்றும் இரயில் பாதைகளையும் துண்டித்ததுடன், இரு நாடுகளையும் முற்றிலுமாக பிரிக்கும் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

வட கொரியாவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே பெருகி வரும் இடைவெளி குறித்து கவலைத் தெரிவித்துள்ளார் சியோல் உயர்மறைமாவட்டப் பேராயர் Peter Soon-taick Chung.

தென் கொரியாவின் இளையத் தலைமுறையினரிடையே இரு நாடுகளும் ஒன்றிணைவதற்கான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் பேராயரும், வட கொரிய தலைநகர் Pyongyangவின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான Peter Soon-taick Chung.

அண்மையில் வட கொரிய அரசு, தென் கொரியாவிற்கான அனைத்து சாலை மற்றும் இரயில் பாதைகளையும் துண்டித்ததுடன், இரு நாடுகளையும் முற்றிலுமாக பிரிக்கும் திட்டங்களையும் அறிவித்துள்ளது.

கடுமையான இந்த   நடவடிக்கையை, போரைத் தடுப்பதற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கை  என்று விவரித்து, தெற்கு எல்லையை தனிமைப்படுத்தி நிரந்தரமாக முடக்குவதற்குமான நோக்கங்களையும் வட கொரிய இராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.

இருள் சூழ்ந்த இத்தகைய நிலையிலும், அமைதியை நோக்கித் தொடர்ந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் பேராயர்.

அமைதிக்கான இறைவேண்டல்களையும், கல்வியையும் தொடர்வதே கொரிய தலத் திருஅவையின் தற்போதைய பணி என்றும்  சுட்டிக்காட்டினார் பேராயர்.

தகவல் தொடர்பு முற்றிலும் தடைசெய்யப்பட்டதைக் குறித்து கவலை தெரிவித்துள்ளார்  ஆயர் பேரவையின் ஒப்புரவிற்கான அவையின் தலைவரும்,  Chuncheonன் ஆயருமான  Kim Ju-young.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் ஒருவித விரோதத்துடன் பார்க்கின்றனர் என்றும், கடந்த காலத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த  எல்லா வழிகளும் மூடப்பட்டுள்ளன என்றும் வேதனை தெரிவித்துள்ளார் ஆயர்.

வட கொரியாவை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதிலும், வட கொரியாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கான வாய்ப்பைப் பொறுத்தவரை, அனைத்து கொரிய மக்களும் உடன்படுகிறார்கள் என்றும் ஆயர் கிம் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 October 2024, 15:37