உயிர்ப்பு ஞாயிறன்று வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தோர் நினைவாக..... உயிர்ப்பு ஞாயிறன்று வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்தோர் நினைவாக.....  (AFP or licensors)

இலங்கை கோவில்கள் தாக்கப்பட்டது குறித்த விசாரணைகளுக்கு உறுதி

இலங்கை புதிய அரசுத்தலைவர், செப்டம்பர் 23ஆம் தேதி கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களைச் சந்தித்து வெடிகுண்டு தாக்குதல் குறித்த புதிய விசாரணைகள் துவக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இயேசு உயிர்ப்புப் பெருவிழா நாளன்று  கிறிஸ்தவக் கோவில்கள் தாக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் உளவுத்துறை அதிகாரி நேரில் வந்து பதிலளிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

வெடிகுண்டு தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த 7 கோடியே 50 இலட்சம் ரூபாயை முழுவதுமாகக் கட்டத் தவறியதற்காக முன்னாள் உளவுப்பிரிவு இயக்குனர் Nilantha Jayawardena அவர்களை இம்மாதம் 7ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

வெடிகுண்டு தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தொடர்ந்த வழக்கினைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக முன்னாள் அரசுத்தலைவர் மைத்ரிபாலா சிரிசேனா அவர்களுக்கு 10 கோடி ரூபாயும், காவல்துறை உயர் அதிகாரி Pujith Jayasundera அவர்களுக்கு 7 கோடியே 50 இலட்சம் ரூபாயும், முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலர் Hemasiri Fernando அவர்களுக்கு 5 கோடி ரூபாயும், உளவுத்துறை அதிகாரி Sisira Mendis அவர்களுக்கு 1 கோடி ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டு அவர்கள் அவைகளைக் கட்டியுள்ளனர்.

தாக்குதல் குறித்து முன்னரே தெரிய வந்திருந்தும் அவைகளை தடுக்கத் தவறியதற்காக இந்த அபராதத் தொகையை நீதிமன்றம் விதித்திருந்தது.

இலங்கையைச் சேர்ந்த 9 இஸ்லாமியர்கள் அடங்கிய குழு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி கிறிஸ்து உயிர்ப்புத் திருவிழாவன்று 3 கத்தோலிக்க கோவில்களையும், மூன்று சொகுசு தங்கும் விடுதிகளையும் குண்டுவைத்துத் தாக்கியதில் வெளிநாட்டவர் உட்பட 279 பேர் உயிரிழந்தனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல் குறித்த விசாரணைகள் காலம் தாழ்த்தி இடம்பெறுவது, இத்தாக்குதலின் அரசியல் தொடர்புகளை வெளிக்கொணராதிருக்கவே என திருஅவைத் தலைவர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், அண்மையில் தேர்வு செய்யப்பட்ட புதிய அரசுத்தலைவர் Anura Kumara Dissanayake அவர்கள், செப்டம்பர் 23ஆம் தேதி கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களைச் சந்தித்து இது குறித்த புதிய விசாரணைகள் துவக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும்வரை தங்கள் போராட்டம் தொடரும் என தலத்திருஅவையும் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2024, 15:16