செபதேயுவின் மக்களின் வேண்டுகோள் செபதேயுவின் மக்களின் வேண்டுகோள்  

பொதுக் காலம் 29-ஆம் ஞாயிறு : தற்கையளிப்பு செய்வதே தலைமைத்துவம்!

இயேசுவின் வழியில் துன்புறும் ஊழியனாக நமது வாழ்வை பிறரது நல்வாழ்விற்காகக் கையளிப்பதுதான் உண்மையான தலைமத்துவம் என்பதை உணர்ந்து அதனை அடைய முற்படுவோம்.
ஞாயிறு சிந்தனை 20102024

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. எசா 53:10-11   II. எபி 4:14-16    III.  மாற் 10:35-45)

பொதுக் காலத்தின் 29-ஆம் ஞாயிறு இன்று சிறப்பிக்கப்படுகின்றது. கடந்த வார வாசகங்கள் செல்வம் குறித்து சிந்தனைகளை வழங்கிய வேளை, இவ்வார வாசகங்கள் அரியணை குறித்துப் பேசுகின்றன. பதவி என்ற மோகம் ஒருவரைப் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டால் அதிலிருந்து அவர் அவ்வளவு சுலபமாக விடுபட முடியாது. காரணம், அது அந்தளவுக்கு ஆபத்தானது. அதுமட்டுமன்றி, ஆட்சி அரியணையை விட்டுக்கொடுக்க விரும்பாதவர்கள் அதனை அடைவதற்கு யாரை வேண்டுமானாலும் பலிகொடுக்கத் தயாராக இருப்பார்கள் என்பதும் திண்ணம். மேலும் பதவிவெறி பிடித்தவர்கள் என்னவெல்லாம் பேசுவார்கள் எதையெல்லாம் துணிந்து செய்வார்கள் என்பதற்கு நமது நாட்டு அரசியல் தலைவர்களே மிகப்பெரும் எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றனர். மகுடத்தை அல்ல மானிடத்தைப் போற்றுவதுதான் உண்மையான தலைமைத்துவத்துக்கான இலக்கணமாக இருக்க முடியும். அவ்வாறே தன்னை அறிந்தவன் மட்டுமே தரணியாளும் தலைவனாகப் போற்றப்படமுடியும். தன்னை வருத்திக்கொண்டு, ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள்தாம் வாழ்ந்தாலும் மறைந்தாலும் மக்களின் மனங்களில் என்றும் வாழ்கிறார்கள். இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியனைக் குறித்துப் பேசுகின்றது. "அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்." முதல் வாசகம் கூறும் துன்புறும் ஊழியனின் இந்தப்பகுதி இயேசுவைக் குறித்து முன்மொழிகின்றது. இந்தத் துன்புறும் ஊழியனின் பாதையில் தன்னை வருத்திக்கொண்டு, தோல்விகளைச் சந்தித்து, துயரங்களை அனுபவித்து கறுப்பின மக்களின் விடுதலைக்காகத் தனது இன்னுயிரையும் கையளித்தவர் அமெரிக்க நாட்டின் முன்னாள் அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். திருவிவியம் கற்பித்த படிப்பினைகளையும், விழுமியங்களையும் சிறுவயது முதல் உள்ளத்தில் உள்வாங்கிக்கொண்டு வாழ்ந்து அதனை வாழ்வாகியவர் இவர். இதற்குக் காரணம் அவரது அன்னைதான். ஏனென்றால் அவர்தான் இந்த விவிலிய அறிவை சிறுவயதிலிருந்தே அவருக்கு ஊட்டினார்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக வெற்றியடைந்தபோதிலும், தொடர்ந்து வந்த பல்வேறு தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். அவர் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்த போது.  'அடிமைகள்' என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டு மனம்வெதும்பினார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். அமெரிக்க அரசுத் தேர்தலில் வென்ற பின், கறுப்பின மக்களை விலங்குகளை விட கேவலமாக நடத்தி கொன்று குவித்து சுரண்டிக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தார் லிங்கன். இதனால் கொதித்தெழுந்த தெற்கு மாநிலங்கள், அமெரிக்காவை விட்டுவிலகி அவற்றிற்கு எதிராகப் போர்தொடுத்தன. போர்களத்தில் தன் பிள்ளையை இழந்தார் லிங்கன். நாடே தத்தளித்தது. அப்பொழுது, உறுதியான மனதுடன், ‘எல்லா கறுப்பின மக்களும் இனி அடிமைகள் இல்லை’ என அறிவிப்பு வெளியிட, தெற்கு மாநிலங்களில் இருந்த கறுப்பின மக்களும் லிங்கனுக்கு ஆதரவாகப் போரில் குதிக்க,  நாடு ஒன்றுபட்டது. அவர் ஆற்றிய கெட்டிஸ்பர்க் உரையில்தான், 'மக்களாட்சி, மக்களுக்காக மக்களால் மக்களைக் கொண்டு நடத்தப்படுகிறது!' என விளக்கம் தந்தார். அதனைத் தொடர்ந்து வெற்றிபெற்று அரியணையில் அமர்ந்தார் லிங்கன். மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்து உழைத்த அந்த மாமனிதர் அதை பெருமிதமாக நினைக்கவில்லை. 'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன் என்று வரலாறு என்னைக் குறிப்பிட்டாலே போதும்’ என்றார். இந்தத் தன்னிகரற்ற தலைவரை ஜான் பூத் எனும் நாடக கலைஞன், Our American Cousin என்ற நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொன்றான். அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்னமே அவருக்கு கனவாக வந்திருந்தது. "நான் வெல்வதை விட உண்மையாக இருக்கவே வேண்டும். நான் மாபெரும் வெற்றிகளைப் பெறுவதை விட,  என் அகவெளிச்சதின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவர் உடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன்" என்று கூறியிருந்தார். தன் மக்களுக்காக உண்மையில் துன்புற்ற ஒரு தலைவர் இவர். அதனால் தான் இவர் வரலாறு படைத்தார் என்பதைவிட வரலாறாகிப்போனார் என்று பெருமிதம் பொங்க குறிப்பிடுகின்றோம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இத்தகையதொரு துன்புறும் ஊழியனை அதாவது, தன் மக்களுக்காகத் துயருற்று, தன்னையே தற்கையளிப்பு செய்த தலைமைக்குருவை எடுத்துக்காட்டும் புனித பவுலடியார், அவரை நோக்கித் துணிவுடன் முன்னேறிச்செல்லவும் நமக்கு அழைப்புவிடுகின்றார். வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. என்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதியில் செபதேயுவின் மக்களின் வேண்டுகோளும் இரண்டாம் பகுதியில் தலைவர்களின் நிலை குறித்தும், அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் இடம்பெறுகின்றன. ஒத்தமை நற்செய்தியாளரான மத்தேயுவும் இதே பகுதியை தனது நற்செய்தியில் குறிப்பிட்டுக் காட்டுகின்றார் என்பதைப் பார்க்கின்றோம். இவ்விருவருமே, இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்த பிறகே இப்பகுதி இடம்பெறுவதாகக் காட்டுகின்றனர். இயேசு தனது சாவை முதல் மற்றும் இரண்டாம் முறை அறிவித்தபிறகு, இயேசுவின் இறையாட்சிக்கான நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத சீடர்கள், இயேசு தனது சாவை மூன்றாம் முறை அறிவித்த பிறகும் கூட அதே மனநிலையில் அதாவது, ஆட்சி அதிகாரம் குறித்த இவ்வுலகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கின்றோம். அதுவும் அவர்கள் இயேசுவை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டிக்கொண்டது இயேசுவுக்கு கூடுதலான மனவருத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, இயேசு அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்கிறார். அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால், என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறுவது இயேசுவின் மெசியாத்தன்மை குறித்தும், அவரது உண்மையான அரசாட்சிக் குறித்தும் சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

மேலும் அவர்களின் அப்பட்டமான சுயநலம் இதன்வழி வெளிப்படுகிறது. செபதேயுவின் மக்களின் இச்செயல் நற்செய்தியாளர் மாற்கு காலத்தின் திருஅவையில் தலைவர்களிடையே கோலோச்சிய பதவி மோகங்களையும், இப்போது நமது திருஅவையில் தொடர்ந்துகொண்டிருக்கும் பதவி மோகங்களையும் வெளிப்படுத்துவதாகவே அமைத்துள்ளது. இங்கே, தான் பெறப்போகும் இறையாட்சிக்கான பாடுகளையும், துன்ப துயரங்களையும், இரத்தம் சிந்துதலையும், உயிர்த்தியாகத்தையும் அவர்களால் மேற்கொள்வது கடினம் என்று இயேசு அவர்களைப் புரிவைக்க முடிந்தும் அது முடியாமல் போவதைப் பார்க்கின்றோம். “எங்களால் இயலும்” என்று அவர்கள் கூறும் வார்த்தைகள் பாடுகளின் உண்மை அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் பதவியின்மீது அவர்கள் கொண்டிருக்கும் மோகத்தை மட்டுமே வெளிப்படுத்துவதையும் காண்கின்றோம். மேலும் இடப்புறம் வலப்புறம் என்பது அவரது இறையாட்சியில் இருக்கக் கூடிய முக்கிய பதவிகளைக் குறிக்கிறது. ஆகவே தாம் அளிக்க வந்த இறையாட்சியில் இத்தகைய பெருமைக்குரிய பதவிகள் உயர்பொறுப்புகள் அறவே இல்லையென்று இயேசு கூறவில்லை. மாறாக, சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவை வழங்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகத்தான், "என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று உரைக்கின்றார்.

இங்கே ‘கிண்ணம்’, ‘திருமுழுக்கு’ என்ற இரண்டு முக்கியமான உருவகச் சொற்களைப் பயன்படுத்துகிறார் இயேசு. கிண்ணம் என்பது கடவுளின் கொடையைக் குறிக்கும் ஓர் உருவகச் சொல். இங்கே கிண்ணம் என்பது, இறைத்தந்தை தனது ஒரே திருமகன் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதல் வழியாக உலக மாந்தர் அனைவருக்கும்  மீட்பை வழங்கவிருக்கும் கடவுளின் தியாகச் செயலைக் குறிப்பதாகவும் நாம் பொருள்கொள்ளலாம். இதன் அடிப்படையில்தான், "மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்" (காண்க திபா 116:13) என்று தாவீது அரசர் பாடுகிறார். ஆக, கிண்ணம் என்பது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதைக் குறிக்கின்றது. இதனைத்தான், "நாம் ஆசீர்வதிக்கும் கிண்ணம் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதன்றோ" என்று புனித வியாழன் மாலைத் திருப்பலியில் பாடுகின்றோம். இயேசுவும் தனது இறுதி உணவின்போது, உணவு அருந்திய பின்பு கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை" (காண்க லூக் 22:20) என்று கூறுவதையும் இக்கணம் நினைவுகூர்வோம்.

அடுத்து இயேசு கூறும் இன்னொரு வார்த்தை 'திருமுழுக்கு.' இது துன்பத்திற்கு உருவகமாகச் சொல்லப்பட்டுள்ளது. "ஆயினும், நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (காண்க லூக் 12:50) என்று இயேசு கூறுகின்றார். தான் கல்வாரியில் பெறவிருக்கும் இரத்தத் திருமுழுக்கைத்தான் அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். ஆக,  தண்ணீர் திருமுழுக்கு (யோர்தான் நதியில்), வியர்வைத் திருமுழுக்கு (கெத்சமனித் தோட்டத்தில்), இரத்தத் திருமுழுக்கு (கல்வாரி மலையில்) ஆகிய மூன்று திருமுழுக்கை இயேசு பெற்றதாக விவிலிய அறிஞர்கள் கூறுவதுண்டு. தனது அரசாட்சியில் பங்குபெற இதுவும் அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறார் இயேசு. நற்செய்தி அறிவிப்புப் பணி குறித்து பேசும் புனித பவுலடியார், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு. நானாக விரும்பாவிட்டாலும் இது என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பாக இருக்கிறது" (காண்க 1 கொரி 9:16-17) என்கின்றார்.

மேலும் இயேசுவின் சீடர்கள் அனைவரிடமும் இந்தப் பதவி மோகம் என்பது இருந்திருக்கின்றது. அதனால்தான்  இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர் என்று பதிவு செய்கின்றார் மாற்கு. எனவேதான் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் இயேசு, "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால், உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்" என்று கூறுகிறார். பதவி மோகம் என்பது பிறரை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டியெழுப்புகின்றது. யூதர்களால் இழிவுபடுத்தப்பட்டு வெறுத்தொதுக்கப்பட்ட பிற இனத்தவர் இடையேயும்  இந்த அடக்கியாளும் போக்கு இருந்திருக்கின்றது. அதனால்தான் 'பிற இனத்தவர்' என்ற வார்தையை இங்கே பயன்பபடுத்துகின்றார் இயேசு. ஆனால் தனது சீடர்கள் பிறரன்புப் பணிகள், பாடுகள் தியாகங்கள் வழியாகத்தான் உண்மையான தலைமையை அடைய வேண்டும் என்பதைக் காட்டவே, "மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" என்று தன்னையே முன்மாதிரியாகக் காட்டுகின்றார் இயேசு. ஆகவே, இயேசுவின் வழியில் துன்புறும் ஊழியனாக நமது வாழ்வை பிறரது நல்வாழ்விற்காகக் கையளிப்பதுதான் உண்மையான தலைமைத்துவம் என்பதை உணர்ந்து அதனை அடைய முற்படுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2024, 13:39