செல்வத்தைக் காட்டிலும் ஞானமே உயர்ந்தது! செல்வத்தைக் காட்டிலும் ஞானமே உயர்ந்தது! 

பொதுக் காலம் 28ம் ஞாயிறு: செல்வத்தைக் காட்டிலும் ஞானமே உயர்ந்தது

இம்மண்ணகச் செல்வங்களைக் காட்டிலும் விண்ணகச் செல்வமாகிய இறைவனை அறிந்து அவர் பணியாற்றி அவர் அருளும் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்வதே ஞானம்.
13.10.24 ஞாயிறு சிந்தனை - ஞானமே சிறந்தது

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. சாஞா 7:7-11    II. எபி 4:12-13    III.  மாற் 10:17-30)

“ஒரு ஊர்ல ஒரு பெரும் பணக்காரர் இருந்தார். தன்கிட்ட இருக்கற ஏராளமான பணத்தை செலவு பண்ணாம, சேர்த்துகிட்டே இருந்தார். தங்கக்காசுகளா மாத்தி, சின்னச் சின்ன ஜாடில போட்டு அங்கங்க பதுக்கி வெச்சுப்பார். ஒரு தடவை அப்படி அவர் வெச்சிருந்த ஜாடி ஒண்ணு காணாமப் போச்சு. அதுல 50 தங்கக்காசுகள் இருந்தன.  இவர் அக்கம்பக்கம், வேலையாட்கள்னு எல்லார்கிட்டயும் கேட்டார். ஆனா கிடைக்கல. சிலநாட்கள் கழிச்சு, அந்தப் பணக்காரருக்குப் பக்கத்து தோட்டத்துல இருந்த ஒரு ஏழை விவசாயி வீட்ல இருக்கற பாப்பாவுக்கு ஒரு ஜாடி கெடைச்சது. அத அந்தப் பாப்பா அப்பாகிட்ட காமிச்சப்போ, “ஐயையோ இது அவரோடதாச்சே”ன்னு கொண்டுபோய் உடனே அந்தப் பணக்காரரிடம் கொடுத்தாரு.

அந்தப் பணக்காரர் “அப்பாடா”ன்னு மனசளவுல நெனைச்சாலும், அதுல இருக்கற காசுகள் எண்ணிக்கை சரியா இருக்குமானு சந்தேகபட்டு எண்ணினார். 50 காசுகள் சரியா இருந்தது. ஆனாலும் எண்ணிட்டு இருக்கும்போதே அவர் மனசுல பேராசை பிடிக்க ஆரம்பிச்சது. எண்ணி முடிச்சதும், “ஐயோ இதுல 75 தங்கக்காசுகள் இருந்தது. ஆனா இப்ப 50 தான் இருக்கு. இவன் எடுத்துட்டான்”னு சொல்லி அந்த ஏழை விவசாயியையும், அந்தப் பாப்பாவையும் மன்னர் முன்னாடி நிறுத்தினார் அந்தப் பணக்காரர். “மன்னா இந்த ஜாடில 75 தங்கக்காசுகள் வெச்சிருந்தேன். இப்ப 50 தான் இருக்கு” என்று சொன்னார். மன்னர் கொஞ்சநேர  விசாரணையிலேயே, ‘இவன் பேராசைக்காரன்.. பொய் சொல்றான்’னு  கண்டுபிடிச்சுட்டார். உடனே இப்படித் தீர்ப்பு சொன்னாராம்:  ”அவர் தொலைச்ச ஜாடில  75 தங்கக்காசுகள் இருந்ததா உறுதியாச் சொல்றார். ஆனா இப்ப கிடைச்சிருக்கற ஜாடில 50 தான் இருக்கு. ஆக, இது அவர் தொலைச்ச ஜாடி இல்ல. அதுனால அந்த 75 தங்கக்காசுகள் இருக்கற ஜாடி கிடைக்கறவங்க என்கிட்ட வந்து கொடுக்கலாம். 50 தங்கக்காசு தொலைச்சதா யாரும் புகார் தராததால, இந்த 50 தங்கக்காசு இருக்கற ஜாடியை, இந்த விவசாயியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கே கொடுக்கறேன்”னு சொல்லிக் கொடுத்துட்டாராம். ‘உள்ளதும் போச்சுடா’ என்று தன்னையே நொந்துகொண்டு போனாராம் அந்தப் பேராசைப் பிடித்த பணக்காரர்.

கடவுளை அறியும் அறிவே ஞானம்

இன்று நாம் பொதுக் காலத்தின் 28-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இவ்வுலகத்தின் செல்வங்களைவிட இறைவனை அறியும் ஞானமும், நிலைவாழ்வு அளிக்கும் அவரது வார்த்தைகளும்தாம் அதிமுக்கியமானது என்ற உன்னதமான படிப்பினையைப் போதிக்கின்றன. இன்றைய உலகில் நிலபுலன், பணம், செல்வாக்கு, ஆட்சி, அதிகாரம் என்று 70 விழுக்காட்டினர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இந்தச் செல்வதைக் காட்டிலும் என்றும் அழியாத உன்னதமான செல்வம் கடவுள் ஒருவரே என்று கடவுள் அளித்த ஞானத்தை அறிந்துகொண்டு அவரில் இன்புற்று வாழ்கின்றனர். அடிப்படையில் அனைவருக்கும் கடவுள் ஞானத்தை அருளுகின்றார். ஆனால் யாரெல்லாம் அந்த ஞானத்தைப் பயன்படுத்தி கடவுள் விரும்பும் நெறிமுறைகளின்படி வாழ்ந்து அவரைக் கண்டுகொள்கின்றார்களோ அவர்கள் அனைவரும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இன்புற்று வாழ்வர். ஆனால் அந்த ஞானத்தைப் பயன்படுத்தாதோர் பேராசைகொண்டு தங்கள் வாழ்வை சீரழித்துக்கொள்கின்றனர் என்பதே உண்மை. இந்த உண்மையை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்கு இப்போது செவிமடுப்போம். “நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது. நான் இறைவனை  வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும். உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன்  சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.” இந்த அதிகாரத்தின் முற்பகுதியில் வாசிக்கும்போது ஓர் உண்மை நமக்குப் புலப்படுகிறது. அதவாது, தாயின் கருவிலிருந்து பிறக்கும் எல்லாரும் ஒரே வகையில் பிறந்து ஒரே வகையில் இறந்தாலும், தான் அப்படிப்பட்டதொரு சாதாரண நிலையில் இருந்துவிட விரும்பவில்லை என்றும், கடவுளை அறியவும் அவரது விருப்பத்தின்படி வாழவும் தனக்கு ஞானம் தேவை என்றும் கூறி அதற்காக மன்றாடுவதாகக் குறிப்பிடுகின்றார் இந்நூலின் ஆசிரியர்.

இறைவார்த்தையை அறிவதே ஞானம்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் வார்த்தையை அறியும் ஞானமே நிலைவாழ்வு பெற வழிவகுக்கும் என்றும் எடுத்துக்காட்டுகிறார் புனித பவுலடியார். இறைவார்த்தை தந்த ஞானத்தால் தனது இறைவாக்குப் பணியில் வெற்றியடைந்தவர் புனித பவுலடியார். “இறைவனின் வார்த்தை நிறைவளத்தோடு உங்களில் குடிகொள்வதாக!” என்று அவர் மக்களை எப்போதும் வாழ்த்தியவர். இறைவார்த்தையை அறிவிக்கும்போது கிடைக்கும் நிறைவும் நிம்மதியும்தான் தனக்கு இறைவன் அளிக்கும் பரிசு என்று கூறி புளங்காகிதம் அடைந்தவர். இன்றைய நாளிலே, "கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது" என்று கூறும் பவுலடியார், "படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்" என்ற வார்த்தைகளின் வழியாக, நாம் ஞானமுடன் இறைவார்த்தைகளைக் கடைபிடித்து அதனை அறிவிப்பதிலும் வாழ்வாக்குவதிலும் நமக்குள்ள பொறுப்பை எடுத்துக்காட்டுகின்றார்.

சட்டங்களைக் கடைபிடித்தால் போதுமா?

இன்றைய நற்செய்தியில், “நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார் என்ற வார்த்தைகளில் அம்மனிதர் நல்ல மனம் கொண்ட ஒரு யூதர் என்பதை அறிய வருகின்றோம். ‘கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட’” என்று இறைத்தந்தை மோசேவுக்கு வழங்கிய பழைய ஏற்பாட்டு சட்டங்களை நினைவுபடுத்தி அவருக்கு இயேசு அறிவுரைகள் வழங்கியபோது, “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று அவர் கூறுவது சட்டங்களைக் கடைபிடிக்கும் அவரது நல்ல மனதைக் காட்டுகிறது. ஆனால் அதுமட்டும் போதுமா? அதன்படி வாழ வேண்டாமா? இங்கே அவரது பதிலை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் இயேசு,  “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று கூறியதும் அவர் வாடிய முகத்துடன் செல்வதாகவும், ஏனெனில், அவருக்கு ஏராளமான சொத்து இருந்ததாகவும் மாற்கு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். இயேசுவின் அழைப்பை ஏற்க அச்செல்வந்தர் முன்வரவில்லை. காரணம், அவர் இயேசுவைப் பின்பற்றவும் மீட்படையவும் அவரிடம் இருந்த ஏராளமான செல்வம் அவருக்குத் தடையாய் இருந்தது. அவ்வாறே, கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்” என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” (காண்க லூக் 12:13-15) என்று இயேசு கூறுவதைப் பார்க்கின்றோம்.

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா?

அடுத்து, இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார். சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால், கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.

இங்கே 'ஊசியின் காது' என்ற வார்த்தை நமது கவனத்தை ஈர்க்கிறது. இயேசுவின் காலத்தில் எருசலேம் நகரில் இரண்டு நுழைவாயில்கள் இருந்தன. ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. குதிரை மற்றும் ஒட்டகம் போன்றவற்வற்றில் வருபவர்கள் எல்லாம் பெரிய நுழைவாயில் வழியாக உள்ளே செல்லலாம். மற்றொரு நுழைவாயிலான சிறியதில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அந்த நுழைவாயிலுக்கு 'ஊசியின் காது' என்று பெயர். இதனை நினைவுபடுத்தி கூறும் இயேசு, அந்த ஊசியின் காது என்ற நுழைவாயிலில் ஒட்டகம் நுழைந்து சென்றாலும் கூட, விண்ணரசில் செல்வர் நுழைவது மிகவும் கடினம் என்கின்றார். மேலும் செல்வர் இறையாட்சிக்குள் செல்வது மிகவும் கடினம் என்பதை அறிவற்ற செல்வன் (காண்க. லூக் 12:13-21), இலாசரும் செல்வரும் (காண்க லூக் 16:19-31) ஆகிய உவமைகள் வழியாகவும் இயேசு எடுத்துக்காட்டுவதைப் பார்க்கின்றோம்.

இறையாட்சிப் பணியாளர்களுக்குப் பரிசு

இறுதியாக, அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார். அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார். சொத்து, சுகம், சொந்த பந்தம் யாவும் இயேசுவை ஏற்கவும், அவரைப் பின்பற்றவும் தடையாக இருக்கும் பட்சத்தில், இவற்றையெல்லாம் முற்றிலுமாகத் துறந்து இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு அருளப்படும் கொடைகளும் சலுகைகளும் எண்ணற்றவை என்பதையும், தாங்கள் துறப்பவற்றிற்கு மேலாகவும் பலமடங்கு பலன்களைப் பெறுவர் என்பதையும் அவர் எடுத்துக்காட்டுவதைப் பார்க்கின்றோம். குறிப்பாக, இங்கே 'இன்னல்களையும்' என்ற வார்தையைப் பயன்படுத்துகிறார் இயேசு. மறுமையில் அதாவது, விண்ணகத்தில் நாம் பெறவிருக்கும் நிலைவாழ்விற்கு, இம்மையில் அதாவது, இந்த மண்ணக வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்து தியாகங்களை ஏற்கவேண்டி இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உவமையின் இறுதியில்  "முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்" என்று கூறி முடிக்கிறார் இயேசு. அதாவது, பெயர், செல்வம், புகழ், ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு என ஒருவர் இம்மண்ணுலகில் முதன்மைப் பெற்றிருந்தாலும் விண்ணக வாழ்வில் அவர் கடைசி இடத்திற்குத் தள்ளப்படுவர் என்றும், இறையாட்சிக்காக இவற்றை முற்றிலுமாகத் துறந்து இறைவாக்குப் பணியாற்ற முன்வரும் கடைநிலை ஊழியர்கள் யாவரும் விண்ணுலகில் முதன்மையான இடத்திற்கு முன்னோக்கித் தள்ளப்படுவர் என்றும் அர்த்தம் தரும் வகையில் இயேசு இவ்வாறு உரைக்கிறார்.

மேலும் ‘இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்’ என்ற இந்த உவமையை மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்கள் இருவருமே எடுத்துக்காட்டுகின்றனர் (மத் 19:16-30; லூக் 18:18-30). இங்கே, செல்வம் படைத்தோர் அனைவரும் அதனைப் பகிர முன்வராவிட்டால், அவர்கள் இறையாட்சிக்குள் நுழைவது மிகவும் கடினம் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே, இம்மண்ணகச் செல்வங்களைக் காட்டிலும் விண்ணகச் செல்வமாகிய இறைவனை அறிந்து அவர் பணியாற்றி அவர் அருளும் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்வதே ஞானம் என்பதை உணர்ந்துகொள்வோம். இச்சிந்தனையில் எந்நாளும் வளர இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2024, 11:04